வெனிசுலாவை அழிக்க அமெரிக்கா திட்டம்
வெனிசுலாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை களை விதித்துள்ள அமெரிக்கா, தற்போது கரீபியன் கடல் பகுதியில் 15,000-க்கும் மேற்பட்ட வீரர்களையும் போர்க்கப்பல் களையும் நிலைநிறுத்தி அந்த நாட்டை முற்று கையிட்டுள்ளது. சமீபத்தில் வெனிசுலாவின் ‘ஸ்கிப்பர்’ என்ற எண்ணெய்க் கப்பலை அமெரிக்க ராணுவம் சட்டவிரோதமாகக் கடத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை “கடற்கொள்ளை” என வெனிசுலா வன்மை யாகக் கண்டித்துள்ளது. டிரம்ப்பின் விசித்திர வாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தடையை மீறி எண்ணெய் கொண்டு செல்லும் அனைத்துக் கப்பல்களையும் தடுக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். “ஒரு பகைமை நாடு எங்களின் எண்ணெய் மற்றும் நிலத்தை வைத்திருப்பதை ஏற்க முடியாது; அவை உடனடியாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்” என டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, இறையாண்மை கொண்ட மற் றொரு நாட்டின் இயற்கை வளங்களை அமெரிக்காவிற்குச் சொந்தமானது எனக் குறிப்பிடுவது சர்வதேச அரசியலில் பெரும் அநாகரிகமாகும். மேலும், வெனிசுலா அரசை ஒரு “வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு” என்றும் அவர் அறிவித்துள்ளார். அமெரிக்காவிற்குள்ளேயே எதிர்ப்பு டிரம்ப்பின் இந்த போர் நடவடிக்கைக்கு அமெரிக்காவிற்குள்ளேயே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 63 சதவீத அமெரிக்க மக்கள் இந்தத் தாக்குதலை எதிர்ப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. “கடற்படை முற்றுகை என்பது போருக்குச் சமமானது; இதற்கு நாடாளுமன்றம் அனுமதி அளிக்க வில்லை” என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜோவாக்வின் காஸ்ட்ரோ குற்றம் சாட்டியுள்ளார். போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதாகக் கூறி அமெரிக்கா நடத்தும் இந்தத் தாக்குதல்களுக்கு இது வரை எந்தவித நம்பத்தகுந்த ஆதாரங் களும் சமர்ப்பிக்கப்படவில்லை. கியூபா மீதான வெறுப்பு அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள கியூ பாவிற்கு வெனிசுலா மானிய விலையில் எண்ணெய் வழங்கி வருகிறது. பதிலுக்கு கியூபா தனது மருத்துவர்களை அனுப்பி வெனிசுலாவிற்கு உதவுகிறது. இந்த உற வைத் தகர்க்கவே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ போன்றவர்கள் இத்தகைய தீவிர நடவடிக்கைகளைத் தூண்டிவிடுகின்றனர். வல்லான் வகுத்ததே வாய்க்கால்? வெனிசுலாவில் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா எடுக்கும் முயற்சிகள் புதியவை யல்ல. முன்பு இராக் மீது பொய்யான கார ணங்களைச் சொல்லிப் போர் தொடுத்த தைப் போலவே, தற்போது வெனிசுலா மீதும் ஆக்கிரமிப்புப் போரைத் தொடுக்க அமெரிக்கா திட்டமிடுகிறது. சர்வதேசச் சட்டங்கள் அனைத்து நாடுகளுக்கும் சமமாக இருக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவோ தனது தேவைக்கேற்ப அந்தச் சட்டங்களை வளைத்துக்கொள்கிறது. வெனிசுலா ஒரு போதும் மற்றொரு நாட்டின் அடிமையாக இருக்காது என மதுரோ அரசு ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட முடிவு செய்துள்ளது.
