tamilnadu

பொதுத்துறையை விற்று முடிக்கும் மோடி அரசு!

பொதுத்துறையை விற்று முடிக்கும் மோடி அரசு! 

ஒன்றிய பாஜக அரசு, நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் பொதுத்துறை நிறுவனங்களை மெல்ல மெல்லப் பங்குச் சந்தை மூலம் விற்பனை செய்து வருகிறது. ஆரம்பத்தில் நஷ்டம் தரும் நிறுவனங்களை விற்பதாகக் கூறிய ஆட்சியாளர்கள், இன்று லாபத்தில் இயங்கும் நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரை வார்த்து வருகின்றனர்.  விற்பனைக்கான காரணமும் பின்னணியும்  தற்போது 2026-27 நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து வரும் சூழலில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்தும், ஜிஎஸ்டி வரி வருவாய் குறைந்தும் காணப்படுகிறது. இந்த நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க, மதிப்புமிக்க பொதுத்துறை பங்குகளை அரசு விற்பனை செய்கிறது. தற்போது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 66 பொதுத்துறை நிறுவனங்களின் அரசு முதலீட்டு மதிப்பு சுமார் ரூ.23 லட்சம் கோடிகள். இது தவிர, 16 பொதுத்துறை நிதி நிறுவனங்களின் (வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் உட்பட) மதிப்பு ரூ.18 லட்சம் கோடிகளாகும்.   ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி ரூபாயை வரியாகவும், லாப ஈவுத் தொகையாகவும் அரசுக்கு வழங்கி வரும் இந்த நிறுவனங்களை விற்பது, ‘கண்ணை விற்றுச் சித்திரம் வரைவதற்கு’ ஒப்பானது என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனாலும், பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்களிப்பை 25% ஆகக் குறைக்கச் சட்டம் இயற்றி, தீவிர விற்பனையில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது.  பங்குச் சந்தை வழியிலான விற்பனை (2023-25)  கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன:  கோல் இந்தியா: 3% விற்பனை மூலம் ₹4,185 கோடி.  என்.எச்.பி.சி: 2.5% விற்பனை மூலம் ₹2,453 கோடி.  கொச்சின் ஷிப்யார்ட்: 4.95% விற்பனை மூலம் ₹2,015 கோடி.  மசகான் டாக் (2025 டிசம்பர்): 3.61% விற்பனை மூலம் ₹3,673 கோடி.  பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா: 6% விற்பனை மூலம் ₹2,674 கோடி.  மறைமுகத் தனியார்மயம்  நேரடியாகத் தனியாருக்கு விற்பனை செய்தால் எழும் அரசியல் எதிர்ப்பைத் தவிர்க்க, பங்குச் சந்தை வழியாகச் சில்லரை முதலீட்டாளர்களிடம் பங்குகளை விற்பது ஒன்றிய அரசுக்கு எளிதாகப் போய்விட்டது. கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை பங்குகள் ஆண்டுக்கு 35% வரை லாபம் ஈட்டித் தந்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இந்தச் சில்லரை விற்பனை என்பது இறுதியில் இந்தியப் பெருமுதலாளிகள்  மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நிறுவனங்களைக் கைப்பற்றவே வழிவகுக்கும்.  - முனைவர் தி.ராஜ் பிரவின்