tamilnadu

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் நீண்டநேரம்  காத்திருக்காமல் தரிசிக்க என்ன ஏற்பாடு?

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் நீண்டநேரம்  காத்திருக்காமல் தரிசிக்க என்ன ஏற்பாடு?

கோவில் நிர்வாகத்திற்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கேள்வி

திருச்செந்தூர், அக். 21 - திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் செய்ய என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என கோவில் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவி லுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சூரசம்ஹாரம், வைகாசி விசாகம், தொடர் விடுமுறைக் காலங்களில் லட்சக் கணக்கானோர் கூடுவது வழக்கம். அவ்வாறு கோவிலுக்கு வரும் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை யில், விஐபி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கே கோவிலில் முக்கியத்து வம் அளிக்கப்படுவதாக நீண்டகால மாக குற்றச்சாட்டு உள்ளது. விஐபி பக்தர்கள் செல்லும் போது, சாதாரண பக்தர்கள் மேலும் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.  இந்நிலையில், திருச்செந்தூரை சேர்ந்த சிவசுப்பிரமணியபட்டர் மற்றும் 11 பட்டர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த வழக்கு ஒன்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் நிர்வாகத்திற்கு சில கேள்விகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் எழுப்பினார். கோவிலில் விஐபி அல்லது விவிஐபி தரிசனங்களை அனுமதிப்பதால், பொது பக்தர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டுமா? கோவில் நிர்வாகம் விஐபி, விவிஐபி தரிசனத்துக்கு தனி நேரம் ஒதுக்க விரும்புகிறதா? உண்மையெனில் இதைத் தடுக்க கோவில் நிர்வாகம் என்னென்ன நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது? குருவாயூர், திருப்பதி கோவில்களில் இருப்பதுபோல் திருச்செந்தூர் கோவிலுக்குள் இரும்பு மேம்பாலம் அமைத்து கடிகாரம் சுற்றும் திசையில் பக்தர்களின் வரிசையை சீரமைக்க முடியுமா? தற்போதுள்ள ஏற்பாடுகளால் கடிகாரம் சுற்றும் திசையில் பக்தர்கள் செல்ல முடியாது என்பது உண்மையா? விஜபிக்கள் தரிசனத்தின் போது பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்படுவதால், விஐபி தரிசனத்திற்காக பக்தர்களின் வரிசை நிறுத்தப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடு செய்ய முடியுமா? கோவிலுக்கு வரும் பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்கவும், பக்தர்களுக்கு சிரமங்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் தனித் திட்டம் வகுப்பது தொடர்பாக கோவில் நிர்வாகம் ஆலோசித்துள்ளதா?” என்றும் கேள்விகளை எழுப்பினார்.