tamilnadu

img

“இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழு அலுவலக திறப்பு விழா மதுரை தீக்கதிர் வளாகத்தில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், வரவேற்பு குழுத் தலைவருமான கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

சிறப்பான மாநாட்டுக்கான அடித்தளம்

விழாவிற்குத் தலைமையேற்று உரையாற்றிய மாநில செயலாளர் பெ.சண்முகம், “வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு இன்னும் இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், இது ஓர் இமாலய பணியாகும். 1953, 1972 ஆகிய ஆண்டுகளில் இரு அகில இந்திய மாநாடுகளை வெற்றிகரமாக நடத்திய பெருமை மதுரைக்கு உண்டு. 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.

“இதுவரை நடத்திய மாநாடுகளிலேயே மிகச் சிறப்பான ஒன்றாக இது அமைய வேண்டும். மாநாட்டின் நோக்கம், முன்வைக் கப்படும் தீர்மானங்கள், பிரச்சனைகள் குறித்த செய்திகளை தமிழ்நாட்டின் 8 கோடி மக்களிடமும் கொண்டு சேர்க்கவேண்டும். குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், பட்டியலின-பழங்குடி மக்கள், உழைப்பா ளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

 

வரலாற்று சிறப்புமிக்க மாநாடு

வரவேற்பு குழுத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “ஆயிரம்  பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப் பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட செயல்பாட்டுக் குழுக்கள், நூறுக்கும்  மேற்பட்ட உப குழுக்கள் பணியாற்று கின்றன. தமிழகத்தின் 41 மாவட்டங்களிலும் வரவேற்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு பிரச்சாரப் பணிகள் துவங்கியுள்ளன” என்றார்.
 

“1972ஆம் ஆண்டு மதுரையில் நடந்த  மாநாட்டில்தான், ‘இந்தியா ஒரு கட்சி சர்வாதிகாரத்தை நோக்கி பய ணிக்கிறது’ என்ற எச்சரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் உண்மைத் தன்மை 1975இல் நிரூபணமானது. இன்றைய சூழலிலும், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை ஒற்றைப்படுத்த முயலும் சக்திகளை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுக்கும் மாநாடாக இது அமையும்” என்றார்.

முக்கிய அம்சங்கள்

 தமுக்கம் மைதானத்தில் மாநாட்டு அரங்கம் அமைக்கப்படும் - பல்வேறு கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடத்தப்படும் - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படங்கள், ஆவணங்கள் காட்சிப்படுத்தப்படும் - மாநாட்டின் இறுதி நாளில் மாபெரும் பேரணி நடைபெறும் - தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து பெருந்திரளாக மக்கள் பங்கேற்பர் என அவர் விவரித்தார். “இந்தியாவில் மதவெறி சக்திகள் நாட்டை சீரழிக்கின்றன. பத்தாண்டு கால  மோடி ஆட்சி நாட்டை நாசகர பாதையில் இட்டுச் செல்கிறது. பாஜகவை வீழ்த்து வதற்கான மகத்தான திட்டத்தை வகுக்கும் மாநாடாக இது அமையும். இந்தியாவிற்கு இடதுசாரி மாதிரிதான் பொருத்தமானது என்பதை நாட்டிற்கு உணர்த்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக இது இருக்கும்” என்றும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

அலுவலக திறப்பு விழாவில் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

தீக்கதிர் வளாகத்தில் உள்ள மாமேதை காரல்மார்க்ஸ் சிலைக்கு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திறந்து வைக்கப்பட்ட வரவேற்புக்குழு அலுவலகத்தில் தலைவர்கள்.

மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் சிபிஎம் அகில இந்திய மாநாட்டு நிதி ரூ.4லட்சத்தை மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம்  மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் ஆகியோர் வழங்கினர்.

மதுரை மாநகர் மத்தி-2 பகுதிக்குழு சார்பில் சிபிஎம் அகில இந்திய மாநாட்டு நிதி ரூ.1 லட்சத்தை மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் பகுதிக்குழுச் செயலாளர் கோபிநாத், மாவட்டக்குழு உறுப்பினர் ஜீவா ஆகியோர் வழங்கினர்.