tamilnadu

img

காணும் பொங்கலன்று சுற்றுலாத்தலங்களில் குடும்பத்துடன் குவிந்த மக்கள்

சென்னை,ஜன.16- காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் படையெடுத்து,குவிந்தனர். இதனால் சுற்றுலாத்தலங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகெங்கும் உள்ள தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து  புதன்கிழமை, உழவர்களுக்கு உறு துணையாக இருந்து விவசாயத்திற்கு பேருதவி செய்யும் மாடுகளுக்கு நன்றி  தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப் பட்டது. பொங்கல்  பண்டிகையின் மூன்றா வது நாளான வியாழக்கிழமை (ஜன.16) காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிட்டனர்.

வண்டலூர் உயிரியல் பூங்கா

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள  வண்டலூர் உயிரியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வண்டலூர் பூங்காவிற்கு வருகை தந்தனர். தொடர்ந்து மக்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து, அங்கிருக்கும் வன விலங்குகளை பார்வையிட்டு  மகிழ்ந்தனர். மாமல்லபுரம் பொழுதுபோக்கு பூங்காக்கள் அதிகமாக உள்ள கிழக்கு கடற்கரை  சாலையில் விஜியி தங்க கடற்கரை,  எம்ஜிஎம் உள்ளிட்ட இடங்களில் மக்களை அதிகளவில் காண முடிந்தது. பொதுமக்களின் வசதிக்காக  உயிரியல் பூங்காவிற்குள் இரு சக்கர வாகனங்களுக்கும், 500 மீட்டர் தொலை வில் கேளம்பாக்கம் சாலையில்  ஆட்டோ, கார், வேன், கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்த தால் நெரிசல் ஏற்படவில்லை. 

மெரினா கடற்கரை

மெரினாவில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தடையை மீறி யாராவது கடலில் இறங்கி மூழ்கினால் அவர்களை மீட்பதற்காக, நீச்சல் தெரிந்த 200 பேர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.  சென்னை காவல்துறை மற்றும் கடலோர காவல்  குழுமத்தின் கடற்கரை உயிர்காக்கும்  பிரிவை சேர்ந்த 85 பேரும் பணியில் ஈடுபட்டதால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை.  இந்திய கடலோர காவல்படையின் கப்பல்கள், ஹெலிகாப்டர்களும் மெரினா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. கட லில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டாலோ, வேறு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தாலோ, உடனடியாக மீட்பு பணியில் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

குழந்தைகள் கைகளில்  பிரத்யேக பட்டை.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரேனும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என கண்காணிக்க மெரினாவில் 13 தற்காலிக காவல் கண் காணிப்பு கோபுரங்கள் அமைக்கப் பட்டிருந்தன. மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் தலா 4 ட்ரோன்  கேமராக்கள் வீதம் மொத்தம் 8 ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரைக்கு வரும் குழந்தைகள் கைகளில், அவர்களது பெயர், பெற்றோரின் செல்போன் எண், முகவரி அடங்கிய பிரத்யேக பட்டை கட்டப்பட்டது.