விதொச பாப்பிரெட்டிப்பட்டி வட்ட மாநாடு
தருமபுரி, டிச.24- விவசாயத் தொழிலாளர் சங்க பாப்பிரெட்டிப்பட்டி வட்ட மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி 3 ஆவது வட்ட மாநாடு புதனன்று பாப்பிரெட்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வட்டத் தலைவர் விஜி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஜி.கணபதி, மாநிலச் செயலாளர் எம்.முத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர். மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் தி.வ.தனுஷன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மல்லிகா, மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் ஏ.அம்புரோஸ், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் குறளரசன், வட்டத் தலைவர் குப்பன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், வீடற்ற விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, அரசு வீடு கட்டித் தரவேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும். 60 வயது பூர்த்தியடைந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் வட்டத் தலைவராக விவேகானந்தன், செயலாளராக விஜி, பொருளாளராக இந்திரா உட்பட கமிட்டி உறுப்பினர்களாக 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
