கர்நாடகாவின் லாரி மீது தனியார் பேருந்து மோதி தீப்பிடித்து எரிந்ததில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் அருகே, தேசிய நெடுஞ்சாலை 48-இல் இன்று அதிகாலை, கன்டெய்னர் லாரி ஒன்று ஸ்லீப்பர் பேருந்து மீது மோதியதில் பேருந்து தீ பிடித்து எரிந்துள்ளது
32 பயணிகளை கொண்ட பேருந்து முழுவதுமாக எரிந்தது. பேருந்துக்குள் இருந்த பலர் தீயில் கருகி உயிரிழந்ததாக கிழக்கு மண்டல காவல் துறை ஐஜி ரவிகாந்தே கவுடா தெரிவித்துள்ளார். தற்போதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
பேருந்தின் ஓட்டுநரும் கிளீனரும் விபத்திலிருந்து உயிர் தப்பினர். ஆனால் லாரி ஓட்டுநரும் அவரது கிளீனரும் உயிரிழந்துள்ளனர்.
லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூரு–புனே–மும்பை இணைக்கும் இந்த நெடுஞ்சாலையில், சாலை நடுப்பிரிவை தாண்டிய லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்துடன் மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.
