tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி  வைகோ கண்டனம்

சென்னை, டிச. 4 - தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க மதவாத அமைப்புகள் முயற்சி செய்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் வழிபாட்டுத்  தலத்தை வன்முறைக் களமாக மாற்றத் துடிப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அவர் தெரிவித்தார்.  காலங்காலமாக பின்பற்றப்படும் மரபுகளை மீறி மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் முயற்சியை ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நீதிபதி மீது நடவடிக்கை: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை, டிச. 4 - திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்டிய தமிழ்நாடு அரசுக்கும் மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றிய மக்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார் . வழக்கமான இடத்தை விட்டு வேறிடத்தில் தீபம் ஏற்ற முயற்சித்த பயங்கரவாதிகளை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரியிருக்கும் அவர், வெளியூரிலிருந்து வந்து கலவரத்தில் ஈடுபட்ட வர்களுக்கு ஆதரவாக மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும், இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டினார். சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயற்சித்த நீதிபதி  மீது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாடாளு மன்றத்தில் இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களைக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய பாஜக அரசுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

 சென்னை, டிச. 4 - தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட வேண்டிய 2,152 கோடி ரூபாயை, ஒன்றிய அரசு வழங்க மறுப்பது கண்டனத்திற்கு உரியது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.  காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட நிதி மறுப்பு, கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிப்பு உள்ளிட்ட வஞ்சனைகளை எடுத்துக்காட்டி, இந்த போக்கு தொடர்ந்தால் ஒன்றிய அரசு விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செக் பவுன்ஸ் : புதுச்சேரி அமைச்சருக்கு பிடிவாரண்ட்

திருவாரூர், டிச. 4 - புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகனுக்கு செக் பவுன்ஸ் வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்த கலை அமுதனுக்கு அமைச்சர் திருமுருகன் 41.44 லட்சம் ரூபாய் தர வேண்டியிருந்தது. இதற்காக கடந்த ஜூன் மாதம் மூன்று முறை செக்-குகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் மூன்று செக்குகளும் பணமில்லாமல் திரும்பின.  இதுதொடர்பாக நீடாமங்கலம் நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகாததால், அமைச்சர் திருமுருகனுக்கு, நீதிபதி இந்துஜா பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதையடுத்து அமைச்சர் திருமுருகன் புதனன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு 2026 ஜனவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று மூன்று மாவட்டங்களுக்கு கனமழை  எச்சரிக்கை!

சென்னை, டிச. 4 - வங்கக் கடலில் உரு வான ‘டிட்வா’ புயல், இலங்கையைக் கடந்து தமிழகப் பகுதிகளை அடைந்து, டெல்டா, தென், வடமாவட்டங் களில் பரவலாக நல்ல மழையைக் கொடுத்தது. வட தமிழ்நாட்டில் நில விய குறைந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதியும் முற்றிலும் வலுவிழந்த துடன், வங்கக் கடலில் சென்னை அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறி புதுச்சேரி நோக்கி நகர்ந்துள்ளது.  இதன் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) அன்று தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங் களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாரதியார் பல்கலை. முன்னாள் பதிவாளர் பணியிடை நீக்கம்

கோயம்புத்தூர், டிச.4- சேலம் பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணி யாற்றிய பேராசிரியர் ரூபா குணசீலன் பணி யிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.  ரூபா குணசீலன், விதிமுறைகளை மீறியும், பல்கலைக்கழக நிதிக்குழு மற்றும் சிண்டி கேட் ஒப்புதல் இன்றி  பணிகளை மேற் கொண்டதாகவும் குற்றச் ்சாட்டுகள் எழுந்தன.  இதன்மீது, ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவின்பேரில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பார்த்தசாரதி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார்.  இதையடுத்து ரூபா குணசீலன் மீது உயர்கல்வித்துறை செயலாளர் சங்கரன் உத்தரவின்படி பல் கலைக்கழக பதிவாளர் ராஜவேல்,  பணியிடை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

புதிய வாக்காளர் சேர்ப்புக்கு  டிச. 16- முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, டிச. 4 - தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16 அன்று வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, டிசம்பர் 11 அன்று நிறைவடையும்.  அதைத்தொடர்ந்து, திரும்பப் பெறப்படாத படிவங்கள், குறிப்பிட்ட முக வரியில் இல்லாதவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்த வர்கள், இறந்தவர்கள், இரட்டை பதிவு செய்த வர்கள் போன்ற விவரங்களு டன் வரைவு பட்டியல் டிசம்பர் 16 அன்று வெளி யிடப்படும் நிலையில், அன்றிலிருந்து துவங்கி புதி தாக பெயர்களை சேர்க்க, நீக்க ஜனவரி 15 வரை விண்ணப்பங்களை அளிக்க லாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டமன்றத்தேர்தல் ஆயத்தப் பணிகளை தொடங்கியது ஆணையம்

சென்னை, டிச. 4 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.  16-ஆவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2026 மே 10-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே, அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை நடத்தும் அதிகாரிகள் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் உதவி அதிகாரிகள் விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 2 முதல் 4 பேர் வரை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியாக கலால் துறையின் சேப்பாக்கம் பகுதி இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் தேர்தல் அதிகாரியாக தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் பொது மேலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதி தேர்தல் அதிகாரியாக சேலம் கலால் துறை உதவி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.