போதை, சாதி, மத வெறுப்புக்கு எதிரான சமத்துவ நடைபயணம் வைகோ பிரச்சாரம் மதுரையில் நிறைவு!
மதுரை, ஜன. 13 - போதை ஒழிப்பு, சாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, ம.தி.மு.க. சார்பில் அதன் பொதுச் செயலாளர் வைகோ, கடந்த ஜனவரி 2 அன்று சமத்துவ நடைபயணத்தை திருச்சி யில் தொடங்கி ஜனவரி 12 அன்று மதுரை யில் நிறைவு செய்தார். இதையொட்டி மதுரை ஓபுளா படித்துறை இஸ்மாயில்புரம் மெயின் ரோட்டில் சட்டமன்ற உறுப்பினர் மு. பூமி நாதன் தலைமையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில், கவிஞர் வைரமுத்து, திரைக் கலைஞர் சத்யராஜ், கோ. தளபதி எம்எல்ஏ (திமுக), சு. வெங்கடேசன் எம்.பி. (சிபிஎம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறை வாக வைகோ சிறப்புரையாற்றினார். மதிமுக தலைவர்கள் துரை. வைகோ எம்.பி., அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ், பொருளாளர் செந்திலதிபன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் முனியசாமி புறநகர் மாவட்டச் செயலாளர் மார்நாடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் ‘வழக்கறிஞர் வைகோ’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதனை சு. வெங்கடேசன் எம்.பி. வெளியிட கோ. தளபதி எம்.எல்.ஏ. பெற்றுக் கொண்டார்.
