மதுரை:
கோவில் மாநகரம், தமிழகத்தின் அரசியல் தலைநகரம் எனக் கூறப்படும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 500 பேருக்கு மட்டுமே கொரேனா தொற்று சோதனை நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகிய இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு நெருக்கமானவர்களாம். இவர்கள் மனது வைத்தால் கொரோனா தொற்று சோதனையை அதிகப்படுத்தலாம் என்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.
இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3-ஆம் தேதி நிறைவடையுள்ள நிலையில் மதுரை "சிவப்பு மண்டலத்தில்" உள்ளது. மதுரையில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
ஏப். 25-ஆம் தேதி முதல் ஏப்.30-ஆம் தேதி வரையிலான காலத்தில் தமிழக அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கும் தகவல்கள் அடிப்படையில், 25-ஆம் தேதி 60 பேர், 26-ஆம் தேதி 75 பேர், 27-ஆம் தேதி 79 பேர், 28-ஆம் தேதி 79 பேர், 29-ஆம் தேதி 79 பேர் 30-ஆம் தேதி 84 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 44 பேர் உள்ளனர்.
30-ஆம் தேதி மாலை நிலவரப்படி ‘கொரோனா’ உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் பட்டியலில் மதுரை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு இந்த நோய் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் மட்டும் நேற்று ஒரே நாளில் விளாங்குடியில் ஒருவரும், அனுப்பானடியில் ஒருவரும், ரிசர்வ் லைனில் ஒருவரும், கரிசல்குளத்தில் ஒருவரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புறநகர் மாவட்டத்தில் சமயநல்லூரில் ஒரு கர்ப்பிணிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மதுரையில்தான் ‘கொரோனா’ பரவல் வேகம் அதிகமாக உள்ளது. ஆனால், சென்னையை ஒப்பிடும்போது மதுரை மாவட்டத்தில் மிக குறைவானவர்களுக்கே ‘கொரோனா’ பரிசோதனை செய்யப்படுகிறது. அதுவும், ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. அறிகுறியிருந்தாலும் மற்றவர்களுக்கு இந்த பரிசோதனை செய்யப்படுவது தாமதமாகிறது.
மதுரை மாநகராட்சியில் 24 குடியிருப்புகளுக்கு மாநகராட்சி ‘சீல்’ வைத்துள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள், வீடுகளை விட்டுவெளியேறாமல் காவல்துறையினர் மூலம் மாநகராட்சி கண்காணிக்க மட்டுமே செய்கிறது. அவர்களுக்கு ‘கொரோனா’ பரிசோதனை செய்யப்படுவதில்லை. என புகார் எழுந்துள்ளது. ‘கொரோனா’வை பொறுத்தமட்டில் அறிகுறியே இல்லாமலும் கண்டறியப்படுகிறது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் பிசிஆர் பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது. மதுரை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை சேர்த்து அதிகபட்சமாக நாளொன்றுக்கு 600 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது எனக் கூறப்பட்டாலும். சில நாட்களில் இந்தச் சோதனை 800-ஐ தாண்டியுள்ளது. மூத்த மருத்துவர், மருத்துவத்துறை பேராசிரியர், லேப் டெக்கினீஷியன்கள், உதவியாளர்கள் உட்டபட சுமார் 40 பேர் வரை பணியாற்றுவதாக கூறப்படுகிறது. மொத்தமே 40 பேர் தானா? சுழற்சிமுறையில் நான்கு மணி நேரத்திற்கு சேர்த்து 240 பேர் பணியாற்றுகின்றனரா? எனத் தெரியவில்லை. கிட்டத்தட்ட 10,500 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் மதுரையில் 5,450 சோதனைகள் நடைபெற்றதாகக் கூறினார்.
பிசிஆர் கிட்- ஊழியர்கள் பற்றாக்குறை
அதிகபட்சம் 800 பேருக்கே சோதனை பெற்றாலும் பிசிஆர் கிட் போதுமான அளவிற்கு இல்லை. கிட்டுகளின் எண்ணிக்கை அதிபட்சமாக ஐந்துதான் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு நபரின் முடிவுகளைப் பெறுவதற்கு நான்கு மணி நேரம் ஆகக்கூடுமாம். விருதுநகர், இராமநாதபுரம், மதுரை மாவட்டங்களுக்கு சோதனை நடைபெறுவதால் பிசிஆர் கிட்டுகள் மட்டுமின்றி ஊழியர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். போதுமான ஊழியர்களும் இல்லை. தற்போதுள்ள ஊழியர்கள் விடுமுறையின்றி பணியாற்றி வருகின்றனர். இவர்களை மனஉளைச்சலிருந்து பாதுகாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது,