தொழிலாளர் - விவசாயிகள் கூட்டணி மோடி ஆட்சியின் அஸ்திவாரத்தைத் தகர்க்கும்!
விசாகப்பட்டினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் சிஐடியு 18-ஆவது அகில இந்திய மாநாட்டின் துவக்க அமர்வில், ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோதப் போக்குகளுக்கு எதிராக இறுதிப் போரைத் தொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை உரக்கச் சொல்லும் வகையில் அமைந்தது பொதுச்செயலாளர் தபன்சென் அவர்களின் ஆவேசமான துவக்க உரை. “நாம் இன்று ஒரு மிக முக்கியமான வரலாற்றுத் திருப்பத்தில் நிற்கிறோம். தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை முதலாளிகளின் அடிமைகளாக மாற்றத் துடிக்கும் ஒரு நவீன பாசிச அரசுக்கு எதிராக நாம் வீதிக்கு வந்துள்ளோம்” என்று அவர் தனது உரையைத் தொடங்கியபோது, அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது. தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள்: ஒரு நவீன அடிமைத்தனம் தபன்சென் தனது உரையில், ஒன்றிய அரசு பிடிவாதமாக நடைமுறைப்படுத்தத் துடிக்கும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை (Labour Codes) மிகக் கடுமையாகச் சாடினார். “கடந்த நூறு ஆண்டுகளாகப் போராட்டக் களத்தில் ரத்தம் சிந்தி நாம் பெற்ற உரிமைகளை, ஒரே கையெழுத்தில் துடைத்தெறிய இந்த அரசு முயல்கிறது. இது தொழிலாளர்களின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்தத் தேசத்தின் இறையாண்மையின் மீதான தாக்குதல்” என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும் அவர் பேசுகையில், “தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்படுவது என்பது கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தரப்படும் மிகப்பெரிய வெகுமதி. எட்டு மணி நேர வேலை என்பதை ஒழிப்பதும், சங்கம் அமைக்கும் உரிமையைப் பறிப்பதும், எப்போது வேண்டுமானாலும் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கலாம் என்ற நிலையை உருவாக்குவதும் தான் இந்தச் தொகுப்புச் சட்டங்களின் நோக்கம். தொழிலாளர்களைச் சட்டப் பாதுகாப்பற்றவர்களாக மாற்றி, அவர்களைக் கார்ப்பரேட்களின் சுரண்டலுக்கு இரையாக்கும் இந்தச் சதியை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்த சட்டங்களை அமலாக்கி, இந்தியாவில் தொழிற்சங்கங்கள் என்பதே இல்லாமல் போகும் சூழலை அரசு உருவாக்கப் பார்க்கிறது. இதை முறியடிப்பதே நமது முதன்மையான வர்க்கக் கடமையாகும்” என எச்சரித்தார். விசாகப்பட்டினம் உருக்காலையும் போராட்ட முன்னுதாரணமும் மாநாடு நடைபெறும் விசாகப்பட்டினத்தின் அடையாளமான பொதுத்துறை உருக்காலை தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்த போராட்டத்தை அவர் உரையில் குறிப்பிட்டது துவக்க மாநாட்டில் கூடியிருந்த தொழிலாளர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்தது. “விசாகப்பட்டினம் உருக்காலையைத் தனியார்மயமாக்கத் துடிக்கும் ஒன்றிய அரசுக்கு, இங்கிருக்கும் தொழிலாளர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக வீரம் செறிந்த போராட்டத்தின் மூலம் பாடம் புகட்டி வருகிறார்கள். அவர்களின் இடைவிடாதப் போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு மிகப்பெரிய முன்னுதாரணம். ஒரு அங்குலத்தைக் கூடத் தனியார் வசம் ஒப்படைக்க மாட்டோம் என்ற உங்களின் உறுதி தான் இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் பலம். இது வெறும் ஒரு தொழிற்சாலைக்கான போராட்டம் அல்ல, இது பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் கழுகுகளிடம் இருந்து காப்பதற்கான தேசபக்தி மிக்கப் போராட்டம்” என்று பாராட்டினார். கார்ப்பரேட் - வகுப்புவாதக் கூட்டணிக்கு எதிரான போர் அரசின் பொருளாதாரக் கொள்கைகளைச் சாடிய தபன்சென், “இன்று நாட்டில் நடப்பது கார்ப்பரேட் மற்றும் வகுப்புவாத சக்திகளின் கள்ளக்கூட்டணி ஆட்சி. மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப வகுப்புவாதத்தைக் கையில் எடுக்கும் இந்த அரசு, மறுபுறம் கார்ப்பரேட்களுக்குத் தேசத்தின் இயற்கை வளங்களைத் தாரைவார்க்கிறது. நவதாராளவாதக் கொள்கைகள் தேசத்தைச் சீரழித்து வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாகக் கார்ப்பரேட் நண்பர்களுக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. இதற்கு எதிராகத் தொழிலாளர்கள் மட்டும் தனித்துப் போராடவில்லை; இன்று விவசாயிகளும் தொழிலாளர்களும் கைகோர்த்துள்ளனர். உற்பத்தி செய்யும் இந்த இரு பெரும் சக்திகளின் கூட்டணி தான் இந்த ஆட்சியின் அஸ்திவாரத்தைத் தகர்க்கப் போகிறது. சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் மத்திய தொழிற்சங்கங்களின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஐக்கியம், இந்தியாவின் எதிர்காலத்தை ஜனநாயகப் பாதையில் மீட்டெடுக்கும்” என்று அழுத்தமாகப் பதிவு செய்தார். பிப்ரவரி 12: தேசத்தை ஸ்தம்பிக்க வைக்கும் அறைகூவல் எதிர்வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்தியப் பொது வேலைநிறுத்தம் குறித்துப் பேசிய தபன்சென், “இது வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான வேலைநிறுத்தம் அல்ல; இது ஒரு அரசியல் போர். இந்த நாட்டின் சொத்துக்களைக் காப்பதற்கும், நமது அடுத்த தலைமுறையின் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கும் நாம் நடத்தும் அறப்போர். கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியத் தொழிலாளர் வர்க்கம் இன்று வீதிக்கு வந்துள்ளது. பிப்ரவரி 12-இல் இந்தியாவின் ஒவ்வொரு தொழிற்சாலையும், ஒவ்வொரு அலுவலகமும், ஒவ்வொரு வீதியும் ஸ்தம்பிக்க வேண்டும். அந்தப் போராட்டத்தின் வழியாக இந்த அரசுக்கு நாம் ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறோம்: ‘எதிரியைப் பணிய வைப்பதே நமது இலக்கு; சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை’. உழைக்கும் வர்க்கமே இந்தத் தேசத்தின் உண்மையான உரிமையாளர்கள். நமது உரிமைகளை நாம் யாரிடமும் யாசகமாகக் கேட்கவில்லை; அவை நமது உழைப்பால் உருவானவை. அந்த உரிமைகளைத் தொட்டுப் பார்க்க நினைக்கும் எத்தகைய பாசிச சக்தியையும் முறியடிக்க சிஐடியு முன் நிற்கும்” என்று ஆவேசமாக உரையை நிறைவு செய்தார். தபன்சென் அவர்களின் இந்த உரை, மாநாட்டிற்கு வந்திருந்த 2000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளிடையே புதிய எழுச்சியையும், வரும் காலங்களில் முன்னெடுக்க வேண்டிய போராட்டங்களுக்கான தெளிவையும் ஏற்படுத்தியது.
