tamilnadu

img

தமிழின் சிறப்பு! - தரகம்பட்டி க.சண்முகசிதம்பரம்

தமிழின் சிறப்பு! -   தரகம்பட்டி க.சண்முகசிதம்பரம்

கண்ணே கனியே கண்மணிச் சுடரே  கருத்தாய் நாளும் படிப்பாய்!-இரவில் விண்ணில் தோன்றும் வெண்ணில வாக   வெளிச்சம் தன்னைக் கொடுப்பாய்!  பொன்னே! மணியே! பூவின் இதழே!   புன்னகை சிந்திடு நீயும் - நம் அன்னைத் தமிழில் அழகாய்ப் பேச   அன்பாய் அணைப்பாள் தாயும்!  திருக்குறள் கற்றுத் தெளிவுடன் விளங்கத்  தீமைகள் எல்லாம் ஒழியும்!-வாழ்வில் பெருமைகள் சேரும் பேரும் கிட்டும்   பெற்றோர் மனமும் மகிழும்!  பாரதி, பாரதி தாசன் பாட்டைப்  படித்தே பாங்காய்ப் பாடு!-நெஞ்சில் ஈரம் துளிர்க்கும் எழுச்சி பிறக்கும்   ஈடிலா நம்தமிழ் நாடு!  பலவாம் மொழிக்கும் பைந்தமிழ்த் தாயாம்  படித்தே அறிவாய்ப் பிறப்பை! - இந்த உலகில் தமிழ்போல் ஒருமொழி இல்லை   உணர்வாய்த் தமிழின் சிறப்பை!