சீரமைக்கப்படாத பெரிய நத்தம் சுடுகாட்டுப் பாதை பொதுமக்கள் அவதி
திருவள்ளூர், டிச.6- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெரிய நத்தம் கிராமத்தில், சுடுகாடு செல்லும் 1.5 கிலோமீட்டர் தூரப் பாதை, கடந்த 20 ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாததால், சேறும் சகதியுமாக உள்ளது. இதனால், உடலைச் சுமந்து செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சுடுகாடும் முழுவதும் புதர்கள் மண்டிக் கிடப்பதுடன், இட நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினரும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான இ. ராஜேந்திரன் தெரிவிக்கையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட இந்தப் பாதையை அதன் பிறகு யாரும் சீரமைக்கவில்லை என்றார். எனவே, பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, சிறப்பு அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுத்து, சுடுகாட்டிற்குச் செல்லும் பாதைக்குத் தார் சாலை அமைத்து, முட்புதர்களைச் சுத்தம் செய்ய வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
