tamilnadu

தென்றல் கண்ட தீர்வு - நவகவி

தென்றல் கண்ட தீர்வு

தென்றலுக்கு திண்டாட்டம். தலையற்ற முண்டங்கள் போல இலையற்ற காட்டு மரங்கள். மொட்டை மரங்களின் கிளைகளில் முகாம் போட முடியவில்லை தென்றல்.  “மூசு வண்டறை பொய்கை”யில் ஆசுவாசமாய் அமர்ந்து அகம் குளிர்ந்த தென்றலுக்கு நாகதாளி முட்செடி மேல் நடனமாட இயலவில்லை!  நிற்கும் பிணங்களாய் காடு எங்கும் நிறைந்து கிடந்தன மொட்டை மரங்கள். காட்டுக்கு கழிச்சல் நோய் போலும் ! உலர்ந்து பட்டை உறிந்து தளர்ந்து கிடந்தன தாவரங்கள்.  தென்றலுக்கு சவால் விடும் மேனா மினுக்கிகளான மின்விசிறிகளும் உலர்ந்த காற்றையே  உற்பத்தி செய்தன.... அவை நெருப்பை இறைத்தது போல் காற்றை இறைத்ததால் விசிறிகளுக்கு விடுமுறை!  விசிறிகளுக்கு விரோதிகள் ஆன கூரை ஒட்டடைகளே அதனால் குதூகலம் அடைந்தன!  பனி இமய முகடுகளில் பாலைவனம் படர்ந்தது. “கங்கை நதி நடுவில் கள்ளி முளைக்குமோ? கற்றாழை தழைக்குமோ?” என கவலைப்பட்டது தென்றல்.  தென்றல் பாவம்  திகைப்பில் ஆழ்ந்தது.  பிணங்கள் அடுக்கிய  குளிர்பதன அறைகளும் சகாராவோடு சம்பந்தம் கொண்டதால் பிணக்கிடங்குகள் தகன மேடையாய் தணல் வீசின.  சுடுகாடு போகாமலேயே  பிணங்கள் இவ்விதம் சுருங்கின கருகின பொசுங்கின !  அலைகளில் இருந்து குளிர்ச்சியை எடுக்க முடியாத இளந்தென்றல் உலைகளில் இருந்த கொதிப்பினை அலைகளை தொடுகையில் அறிந்து வருந்தியது - மனம் எரிந்து புழுங்கியது.  “கானகங்களை கொன்றவரால் - கனிமங்களை தின்றவரால் - சந்தனக் காற்றாய் வீசிய நான் சாக்கடைக் காற்றாய் வீசுகிறேன்” என தேம்புது தென்றல் ..... அதை நோக்கி சிரித்தது தொழிற்சாலை  புகை போக்கி!  ஓடையோடு உலாப்போன தென்றலை பாடையோடு படுக்க வைத்தனர் ! புல்லாங்குழலில் புகுவதை தடுத்து ஊதாங்குழலில் ஒடுக்கி வைத்தனர் ! அதனால் தென்றல் அடுப்புத் தீயில் ஐக்கியம் ஆனது!  காற்றுக்கு நிறமில்லை என்பது கடந்த காலக் கதை. நிலக்கரி உண்ட முதலாளியம் - டீசல் குடித்த மூலதனம் - கழித்த எச்சம் காற்றில் கலந்ததால் கரு நிறம் பெற்றது காற்று.  “பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்” இமயமலை முகடாவது “கரி படியாமல் உள்ளதா? “என காணச் சென்றது!  வெள்ளிப் பனிமலை முகட்டில் கருப்புக் கரிச் சட்டியை  கவிழ்த்து வைத்தது போல் கரும்பனி முகடாய் வெண்பனி முகடு காட்சி தந்தது !  குருவி அடைய கூடு உண்டு. அருவி அடைய ஆறு உண்டு. தென்றல் போய் அடைய ஒரு திசையும் இல்லை சுத்தமாக! மாசுபட் டதுபுவி மொத்தமாக!  பூ மொக்குகள் கூட புண் பொக்குகள் போல் கரடு முரடாய் கருகி  காட்சி தந்ததால் மொக்கு மேல் அமர்வது முள்மேல் அமர்வது போல் தென்றலுக்கு பாவம்  தென்பட்டது!  * * * * புகலிடம் ஏதும் இன்றி புலம்பியது தென்றல்..... அப்போது சோம்பித் தேம்பி சுருண்டு கிடந்த தென்றலின் செவியில் வந்து ஓங்கார ஓசை ஒன்று  உலுக்கியது !  விழித்துப் பார்த்தது தென்றல் -அதோ வீதியில் சூழலியலாளர் பேரணி! வியந்து பார்த்தது தென்றல் -அதன் விழியில் ஆனந்தக் கண்ணீர் ஊருணி !  “கரிம வணிகம்”என கண்ணாமூச்சி காட்டும் முதலாளியத்தின் முகத்தில்  ஓங்கி அறைந்தபடி ஊர்வலம் சென்றது!  “சோசலிச சூழலியலாளர் “ கைகளில் ஏந்திய கம்புகள் வழியாய் அவர்களின் உஷ்ணக் கோபம் உயர்ந்து ஏறி ஏந்திய செங்கொடியை இன்னும் சிவப்பாக்கியது !  சோசலிச சூழலியக் குரல் ஆக்ரோஷமாக அறிவித்தது: “நிலக்கரி எரித்து அணுவை செரித்து நீங்கள் அளிக்கும் மின்சாரம் எதற்கு?  பூமித்தாய் தன் புடை வயிற்றுக்குள் அளவிடக்கறிய அனல் வைத்துள்ளாள். கனல் அது கொண்டு எம் குளிர்காலத்தில் கதகதப்பை எடுத்துக் கொள்வோம்.  கதிரவன் எரிக்கும் கடும் கோடையில் வெப்பம் உறிஞ்சும் வினோதக் கிடங்காய் அன்னை பூமியை அவதரிக்க வைப்போம்!  “புவி வெப்ப ஆற்றல்” எனும்  புதிய சக்தியை மனித குலத்தின் மடியில் நிறைப்போம்! “சோசலிச சூழலியம்” பூமித்தாயை பூரிக்க வைக்கும் !  முதலாளியமே. கச்சா எண்ணெய் கழிவை எம்மேல் சிறுநீராக சிந்தாதே! பெய்யாதே! தின்று செரித்த நிலக்கரி எச்சத்தை காசு வர்க்கமே எம்மேல் கழிக்காதே!  அலாவுதீன் விளக்கில்  அடைபட்ட பூதமாய் அன்னை பூமியின் அடிவயிற்றுள் நிலக்கரியும் கச்சா எண்ணெயும் நீடு துயில் கொள்ளட்டும்!  கடல் அலைகளை கட்டிப்போட்டும் கதிரை காற்றை வளைத்துப் போட்டும் நதியின் போக்கில் அணைகள் போட்டும் மாசுபடாத சக்தி தேவதையை மனித குலத்துக்கு மணம் செய்து வைப்போம்!  எந்திரங்களுக்குள் மின்சாரம் விஷச்சாராயம் போல் இறங்காமல் கனிச்சாறு போல் கலக்க வைப்போம்!”  * * * * கேட்டது தென்றல் செய்தி ! மகிழ்ந்தது வியப்பு எய்தி ! புயல் பறவையாய் படபடத்த செங்கொடியில் பூரிப்பாய் போய் சங்கமித்தது !  போக்கிடம் இன்றி அலைந்த தென்றலுக்கு புகலிடம் கிடைத்தது !.....கொடி அடைக்கலம் கொடுத்தது !  சல்லடை போல் கொடி காற்றை சலித்தது ! சூழல் மாசை சுத்தி கரித்தது ! கூடச் சேர்ந்து தென்றல் கொடியை சீராய் அசைத்தது !  போக்கிடம் இன்றி புலம்பிய தென்றல் வேதனைகளுக்கு விடிவு கண்டது! அழுக்கு பூமி அழகு பூமியாய் தீய்ந்தழியாத தென்றல் பூமியாய் மாறுவதற் கொரு மார்க்கம் கண்டது! திரிந்தபின் கடைசியில் தீர்வு கண்டது!