tamilnadu

img

சுபாஷ் ஆணவப் படுகொலை வழக்கின் தீர்ப்பு: சிபிஎம் வரவேற்பு

கிருஷ்ணகிரி சுபாஷ் சாதி ஆணவப் படுகொலை வழக்கின் குற்றவாளி தண்டபாணிக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
இது குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கொல்லாபுரம் கிராமம், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அனுசுயா என்பவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த சுபாஷூம் (28 வயது) காதலித்து 27.03.2023 அன்று சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
சுபாஷின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், 14.04.2023 அன்று சுபாஷின் பாட்டி கண்ணம்மாள் அவர்களின் அழைப்பிற்கு இணங்கி சுபாஷ்,அனுசுயா தம்பதியினர் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். சுபாஷ் தந்தை  தண்டபாணி  15.04.2023 அன்று அதிகாலை அரிவாளால் வெட்டி சுபாஷையும், தடுக்க முயன்ற தனது தாயார் கண்ணம்மாளையும் படுகொலை செய்தார். அனுசுயா கொடுங்காயங்களுடன் தப்பிப்பிழைத்தார். சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவர்களின்  மிகச்சிறந்த மருத்துவத்தால் அனுசுயா நலம் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டன இயக்கங்களை தமிழகம் முழுவதும் நடத்தியது. மார்க்சிஸ்ட் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் கே.சாமுவேல்ராஜ், இ.மோகனா உள்ளிட்டவர்கள் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த சாதி ஆணவப்படுகொலைகள் குறித்து ஊத்தங்கரை காவல் நிலையத்தில் எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கிருஷ்ணகிரி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. இரண்டரை ஆண்டுகள் நடைபெற்று வந்த வழக்கில் 14.11.2025 அன்று மாலை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி வி.ஆர். லதா அவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார். குற்றவாளி தண்டபாணிக்கு மூன்று ஆயுள் தண்டனை மற்றும் 10 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட அனுசுயாவிற்கு அரசு இரண்டரை லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சாதி ஆணவப்படுகொலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் சாதிவெறி சக்திகளுக்கு எதிரான இந்த தீர்ப்பை  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு வரவேற்கிறது. நீதிக்கான போராட்டத்தில் பாதிக்கப்பட்ட அனுசுயாவுக்கு அனைத்து வகையிலும் துணை நின்று சட்டப்போராட்டத்தை நடத்திய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கும், மார்க்சிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டக் குழுவுக்கும் பாராட்டுக்களை உரித்தாக்குகிறது.  மருத்துவ சிகிச்சைக்கு துணை நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட தோழர்களுக்கும், கல்வி தொடர உதவிகள் செய்த அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்துக்கும் பாராட்டுக்கள்.
வழக்கை திறம்பட நடத்திய அரசு சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ், அவருக்கு உறுதுணையாக இருந்த  வழக்கறிஞர்கள் டி.முரளி, கே.இளவரசன், என்.நவீன், ஆர்.அருள் ஆகியோருக்கும், சட்ட வழிகாட்டல்கள் செய்து உதவிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கே.சி.காரல்மார்க்ஸ் அவர்களுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக  நீதிக்கான போராட்டத்தில், மன உளைச்சல்களை எல்லாம் எதிர்கொண்டு, உறுதியை வெளிப்படுத்தியுள்ள அனுசுயாவுக்கும் பாராட்டுக்களை உரித்தாக்கிக் கொள்கிறோம். மேலும், சாதி ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட அனுசுயாவிற்கு அரசு வேலை  வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.