tamilnadu

img

கரூர் வெண்ணமலை இனாம் நில விவகாரம் 1,200 குடும்பங்களைக் காக்க முதல்வருக்கு சச்சிதானந்தம் எம்.பி., கடிதம்

கரூர் வெண்ணமலை இனாம் நில விவகாரம் 1,200 குடும்பங்களைக் காக்க  முதல்வருக்கு சச்சிதானந்தம் எம்.பி., கடிதம்

கரூர், நவ. 15- கரூர் மாவட்டம், வெண்ணமலைப் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் இனாம் நிலங்களில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன. இவர்கள் சிறு சிறுக சேர்த்து வாங்கிய, அரசு அங்கீகாரம் பெற்ற வீடுகள் மற்றும் கடைகளுடன் கூடிய குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். வெண்ணமலை முருகன் கோவில் நிலங்களை மீட்பதற்காகத் திருத்தொண்டர் சபையின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்குகளின் வழிகாட்டுதலை தவறாகப் பயன்படுத்தி, அறநிலையத்துறை அதிகாரிகள் தற்போது பொதுமக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்குச் சீல் வைத்து வருகின்றனர். பொதுமக்கள் தொடர் காத்திருப்புப் போராட்டம் தங்கள் உரிமையை நிலைநாட்டுவதற்கான வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோதும், உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை அறநிலையத்துறை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறிப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர். அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைப்பது, மின் இணைப்பைத் துண்டிப்பது போன்ற பாதகமான செயல்களை வழக்கு முடியும் வரை செய்யக் கூடாது என வலியுறுத்தி, இனாம் நில இயக்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வெண்ணமலையில் உள்ள கண்ணம்மாள் வீடு அருகில் தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்எல்) உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துக் கலந்து கொண்டன. போராட்ட ஒருங்கிணைப்பாளர் காமராஜ் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கருணாமூர்த்தி வரவேற்றுப் பேசினார். ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., சிறப்புரை மற்றும் கடிதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் சிறப்புரையாற்றினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், பி.ராஜூ, கே.சக்திவேல், சி.முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.கந்தசாமி, சிபிஐ மாநிலத் துணைச் செயலாளர் ரவி, மாவட்டச் செயலாளர் கலாராணி, சிபிஐ (எம்எல்) மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை, விசிக சுடர்வளவன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு பேசினர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர். போராட்டத்தின் எதிரொலியாக, திண்டுக்கல் சிபிஎம் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., அவர்கள், நவம்பர் 15 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். முதலமைச்சருக்கு கோரிக்கை அதில்,”கரூர் மாவட்டம், கதப்பாறை கிராமம், வெண்ணமலைப் பகுதியில் உள்ள இக்கிராமம், தமிழ்நாடு எஸ்டேட் (ஒழிப்பு மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம் 1948-ன் கீழ் அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டு, நிலவரித் திட்டத்தின்போது ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்டு, ‘அ’ பதிவேடும் வெளியிடப்பட்ட நிலம் இது என்பதை அக்கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனாம் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பட்டா பெற்ற 1,200-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு எவ்வித இன்னலும் ஏற்படாத வண்ணம், உரிய சட்டத்திருத்தம் மூலம் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் புறம்பாக அச்சமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் செயலைத் தடுத்து நிறுத்தி, நில நிர்வாக ஆணையரின் முந்தைய முன்மொழிவுகளின் அடிப்படையில் பட்டாதாரர்களுக்கு முழு உரிமை அளித்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.