நாடு சிறிதா, பெரிதா என்பதல்ல; முதுகெலும்பு உள்ளதா என்பதே கேள்வி
இந்தியா நடத்திய ‘மிலன் 2026’ (MILAN 2026) பன்னாட்டு கடற் படைப் பயிற்சியில் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றுவிட்டுத் தனது தாயகம் திரும்பிக் கொண்டிருந்த ஈரானிய கடற்படையின் ‘ஐரிஸ் தேனா’ போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டுள் ளது. இந்தியாவின் பாதுகாப்பு மண்டலத்திற்கு அருகிலேயே, எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்துவது நமது இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும். மிலன் பயிற்சியும் அமெரிக்காவின் அத்துமீறலும் மிலன் பன்னாட்டு பயிற்சி என்பது கடற்கொள்ளை, ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் கடல்சார் பயங்கரவாதம் போன்ற நவீன கால அச்சுறுத்தல்களைக் கூட்டாக எதிர்கொள்வதற்கானது. ஆனால், இந்தியப் பெருங்கடலில், நடைபெற்ற இந்தப் பயிற்சி யில் பங்கேற்று திரும்பியவர்களை நவீன கொள்ளையர்கள் போல் தாக்கி அழித்திருக் கிறது அமெரிக்கா. சர்வதேச கடல் பகுதியில், எவ்விதப் போரிலும் ஈடுபடாத ஒரு கப்பலைத் தாக்கி 87-க்கும் மேற்பட்ட மாலுமிகளைக் கொன்றிருப்பது ஒரு சர்வதேசக் குற்றமாகும். இது ஐநா சாசனத்தையும் கடல்சார் விதி களையும் (UNCLOS) அப்பட்டமாக மீறும் செய லாகும். ஆனால் இது பற்றி வாய்திறக்க மோடி அரசு மறுத்து வருகிறது. மௌனம் காக்கும் இந்திய அரசு மிலன் பயிற்சி விழாவில் பங்கேற்ற ஜனாதி பதி திரௌபதி முர்மு அவர்கள் ஆற்றிய உரை யில், “ஒரு சிறந்த கடல்சார் ஒழுங்கு என்பது ‘கூட்டுப் பொறுப்பு’ மற்றும் ‘கூட்டு நடவடிக்கை’ ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும்” என்று வலியுறுத்தினார். ஆனால் அமெரிக்கா அரங்கேற்றிய இந்தப் பேரழிவுக்கு எதி ரான தனது கண்டனத்தைக் கூட பதிவு செய்ய மறுக்கும் மோடி அரசு, கூட்டுப் பொறுப்பு பற்றி உலக நாடுகளுக்கு அறிவுரை வழங்குகிறது. ‘கடல்கள் மூலம் ஒன்றிணைவோம்’ (United Through Oceans) என்ற கருப்பொருளில் இந்தியா நடத்திய நிகழ்வுக்கு வந்து சென்ற விருந்தினர்களைப் பிணங்களாக்கி மிதக்க விட்டுள்ளது அமெரி க்கா. இவ்வளவு பிணங் கள் மிதந்தாலும் மோடி யின் மௌனம் ஏன் கலைய மறுக்கிறது? ஐரிஸ் தேனா கப்பலின் மூழ்கடிப்பு என்பது வெறும் ஒரு கப்பலின் அழிவு மட்டுமல்ல; சுதந்திரமான இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்டுள்ள பேரழிவும் ஆகும். 74 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், 85 கப்பல்கள் பங்கேற்ற நிகழ்வை இந்தியாவின் கடல்சார் ராஜதந்தி ரத்தின் மைல்கல் என வர்ணித்த பாஜக தலைவர்கள், இப்போது அமெரிக்காவால் பிணங்களாக மிதக்கவிடப்பட்ட இளம் ஈரானிய மாலுமிகளின் உயிர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? இலங்கையின் துணிச்சலான முடிவு ஐரிஸ் தேனா கப்பல் தாக்கப்பட்ட மறுநாளே, மற்றொரு ஈரானியக் கப்பலான ‘ஐரிஸ் புஷெர்’ இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) நுழைந்தது. 208 மாலுமிகளைக் கொண்ட இந்தக் கப்பல், தனது எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ள தாகக் கூறி இலங்கையிடம் அவசர உதவி கோரியது. இந்த கோரிக்கையின் மீது இலங்கை ஜனாதிபதி ஒரு நடுநிலையான, அதே சமயம் மனிதாபிமானம் மிக்க முடிவை எடுத்து ஈரானிய கப்பலுக்குத் தஞ்சம் அளித்துள்ளார். வல்லரசுகளின் நேரடி ராணுவ நடவடிக்கை களுக்கு மத்தியில் ஒரு சிறிய நாடு எடுத்த மிக வும் துணிச்சலான முடிவு இதுவாகும். ஐரிஸ் தேனா கப்பல் அழிக்கப்பட்டபோது இந்தியா காட்டிய மௌனம் அதன் ராஜதந்திரக் கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடென் றால், இலங்கை தனது எல்லையில் நிகழ்ந்த அநீதிக்கு எதிராகத் தனது இறையாண்மை யையும் மனிதாபிமானத்தையும் உயர்த்திப் பிடித்துள்ளது. அரசியல் நிலைப்பாடே முதுகெலும்பு ஒருபுறம் மிலன் பயிற்சிக்கு ஈரானை அழைப்பது, மறுபுறம் அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டிக்க மறுப்பது என இந்திய அரசு செயல்படுகிறது. “வசுதைவ குடும்பகம்”, “அதிதி தேவோ பவ” என்பதெல்லாம் வெறும் வாய்ச்சொல்லாகவே முடிந்துவிட்டது. செய லெல்லாம் அமெரிக்காவுக்கு அடிமைச் சேவ கம் செய்வது மட்டும்தான். இந்திய வெளியுறவுக் கொள்கையை அமெரிக்க-இஸ்ரேல் கூட்ட ணிக்கு மோடி அரசு வெட்கமற்று அர்ப்பணிக் கிறது. நாடு சிறியதா, பெரியதா என்பதல்ல, அரசியல் நிலைப்பாடுதான் முதுகெலும்பின் உறுதித்தன்மையை பாதுகாக்கிறது என்பதை இலங்கை ஜனாதிபதியின் செயல் உலகிற்கு உணர்த்தியுள்ளது.
