ரூபாயின் பயணம்
மரியா என்னை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தாள். என்னுடைய கத்தரிப்புபூ நிறம் மரியாவிற்குப் பிடிக்கும். கிறிஸ்துமஸ் அன்று தாத்தா எல்லா குழந்தைகளுக்கும் பணம் கொடுப்பார். அப்படிக் கொடுக்கும்போது என்னை மரியாவிடம் கொடுத்தார்.என் மேல் 100 என்று எழுதியதைப் பார்த்ததும் மரியா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். அவளை விட எனக்குத்தான் மகிழ்ச்சி அதிகம்.தாத்தா இவ்வளவூ நாள் என்னை பீரோவுக்குள் பூட்டி வைத்திருந்தார். எனக்குச் சிறையில் அடைபட்டது போல் இருந்தது. இப்போது என்னை வெளியில் எடுத்து விடுதலை செய்து விட்டார் . மரியா துள்ளி குதித்துக் கொண்டு போய் என்னை அவளுடைய பென்சில் டப்பாவுக்குள் வைத்தாள். அடுத்த நாள் இனிப்புகள் விற்கும் கடைக்குப் போய் குலோப் ஜாமுன் ரசகுல்லா எல்லாம் வாங்கிவிட்டு என்னை கடை முதலாளியிடம் கொடுத்தாள்.முதலாளி என்னை அவருடைய கல்லாப்பெட்டியில் வைத்தார். கடையிலிருந்து இனிப்புகளின் வாசனை நன்றாக இருந்தது. இரவு கடையை மூடும்போது பெட்டியில் இருந்த பணத்துடன் என்னையும் சேர்த்து எடுத்துக் கொண்டு போய் அவருடைய மனைவி மோனாவிடம் கொடுத்தார். ஞாயிற்றுக்கிழமை மோனா என்னை அவருடைய பர்சில் எடுத்து வைத்துக்கொண்டு வெளியே போனார். ஒரே சத்தமாக இருந்தது நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.திடீரென்று மீன்வாடை அடித்தது.மோனா மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கி விட்டு என்னை ரஹீமிடம் கொடுத்து விட்டார். ரஹும் கைகள் மீன் வெட்டியதால் ஈரமாக இருந்தது. அவர் கைபட்டவுடன் ஜில்லென்று இருந்தது.அவர் அப்படியே என்னை தன்னோட பேண்ட் பாக்கெட்டில் திணித்து வைத்தார். நான் கசங்கிப் போனேன். ரஹீம் வீட்டுக்குப் போகும் வழியில் மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு என்னை பூக்கார அக்கா மங்களத்திடம் கொடுத்தார் அக்கா என்னை அவளுடைய சுருக்குப்பையில் போட்டார். சுற்றிலும் பூ இருந்ததால் நல்ல வாசனையாக இருந்தது.ரெண்டு மூணு நாள் பூ வாசத்தைப் பிடித்துக் கொண்டு மங்களம் அக்கா பையிலேயே கிடந்தேன். வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை மங்களம் அக்கா பொங்கலுக்குப் பூ வாங்க என்னை பூ மார்க்கெட்டுக்கு எடுத்துக்கிட்டு போனாங்க அங்கு நிறைய பூ வாங்கிட்டு என்னை பூக்கடை முதலாளியிடம் கொடுத்து நிறைய பூ வாங்கிட்டு போனாங்க. முதலாளி கிட்ட என்னுடைய அண்ணன் அக்காக்களான ஐநூறு ரூபாய் நோட்டு, இருநூறு ரூபாய் நோட்டு எல்லாம் நிறைய இருந்தாங்க.அவங்களோட என்னையும் போட்டு விட்டார். அவருடைய குட்டிப் பையன் விமல் கடைக்கு வந்தான். அவன் உண்டியலில் போட பணம் வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டு என்னை எடுத்துக் கொண்டு போனான் வீட்டுக்குப் போய் உண்டியலுக்குள் என்னை போட்டு விட்டான் உண்டியலுக்குள் என்னுடைய குட்டி தம்பிகள் தங்கைகள் பத்து ரூபாய், ஐந்து ரூபாய் இரண்டு ரூபாய் ஒரு ரூபாய் நாணயம் எல்லாம் இருந்தாங்க. விமல் குட்டி தினமும் காலையில் எழுந்தவுடன் உண்டியலை குலுக்குவான்.விமல் நிறைய பணம் போட்டு இருந்தான் அவன் குலுக்கும் போதெல்லாம்,தம்பிகள் தங்கைகள் எல்லாம் என் மேல வந்து விழுவாங்க.அதனால இப்போது என் நிலைமை மிகவும் மோசமாக ஆகிவிட்டது. கசங்கிப் போய் கிழியற நிலைமைக்கு வந்துட்டேன்.ஒருநாள் “டமால்”னு சத்தம் கேட்டது. உண்டியலில் இருந்த எல்லோரும் தரையில் சிதறிக் கிடந்தோம் . விமல் எங்கள் எல்லோரையும் பொறுக்கி எடுத்து வைத்துக் கொண்டான்.நாளைக்கு விமலுக்கு பிறந்தநாள்.ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள் அன்று அவன் வசதி இல்லாத வீட்டு பிள்ளைகளுக்கு இந்த உண்டியலில் சேர்க்கும் பணத்தை வைத்து நோட்டு புத்தகம் வாங்கி கொடுப்பானாம். நான் பல பேருக்கு உபயோகமாக இருந்தேன் ஆனாலும் குட்டி பையன் என்னை ரொம்ப கஷ்டப்பட பிள்ளைகளுக்கு நோட்டு வாங்க உபயோகப்படுத்தியது எனக்கு மிக மிக ஆனந்தமா இருக்கு. இப்போ நான் பலபேர் கைபட்டு பலவீனமாத் தான் இருக்கேன் என்னை கொண்டு போய் வங்கியில் கசங்கிய நோட்டோடு சேர்த்து வச்சுருவாங்க. பல பேரைப் பார்த்து பலருக்கும் உபயோகமாக இருந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி.
