tamilnadu

img

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்

சென்னை, ஏப். 2 - மாநில அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க சட்டப்படி அதிகாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. கைதிகளின் முன்கூட்டிய விடுதலை மற்றும் தண்டனைக் குறைப்பு தொடர்பான அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும், இதற்கு எதிரான ஆளுநரின் நிராகரிப்பு உத்தரவுகள் செல்லாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவரான பொன். நாவரசு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஜான் டேவிட்டை நன்னடத்தை அடிப்ப டையில் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது. ஆனால், அப்போதைய ஆளுநர் இதை நிராகரித்தார். இதை எதிர்த்து ஜான் டேவிட்டின் தாயாரும் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், இந்த வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றத்தின் வெவ்வேறு அமர்வுகள் முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கியதால், வழக்கு நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஜி.கே. இளந்திரையன் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட முழு அமர்வுக்கு மாற்றப்பட்டது.  விசாரணையின் போது, அரசு சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ஆளுநர் அமைச்சரவையின் அறிவுரை யின்படி மட்டுமே செயல்பட முடியும் என்றே அரசியலமைப்பு பிரிவுகள் கூறுகிறது. உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட ஷம்ஷேர் வழக்கு தீர்ப்பின் படி, ஆளுநர் நிர்வாக செயல்பாடுகளில் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின் படியே செயல்பட முடியும். ஆளுநர் பெயரளவிலான தலைவர் மட்டுமே, முன்கூட்டியே விடுதலை செய்யும் அமைச்சரவையின் முடிவுகளில் ஆளுநர் ஒப்புதல் இன்றி அரசு உத்தரவிட முடியும் என மருராம் வழக்கிலும், உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.  இவை அனைத்தும் பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்பற்றியுள்ளது. எனவே ஆளுநர் முன்கூட்டியே விடுதலை செய்யும் அமைச்சரவையின் முடிவை நிராகரிக்க அதிகாரம் இல்லை என்று வாதங்களை முன் வைத்தார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், மனோகரன், சைபுல்லா ஆகியோரும் இந்த வாதங்களை முன் வைத்தனர்.  அனைத்து தரப்பு வாதங்களையும் தொடர்ந்து வியாழனன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, இளந்திரையன், சுந்தர் மோகன் அமர்வு, ‘தண்டனை குறைப்பு மற்றும் முன் கூட்டியே விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவை ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுந ருக்கு இல்லை. ஆளுநர் அமைச்ச ரவையின் முடிவுக்கு ட்டுப்பட்டவர்’ என்று முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளது.