பழசு கண்ணா ரொம்பப் பழசு..
ஏதோ துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது போன்றுதான் வீட்டில் இருந்தவர்களுக்குத் தோன்றியது. வீட்டுக்கூரையைத் துளைத்துக் கொண்டு ஒரு விண்கல்தான் அப்படித் தரையில் விழுந்தது. செர்ரி பழம் அளவுக்குதான் அது இருந்தது. ஜார்ஜியாவில் உள்ள மக்டொனோ(McDonough) என்ற இடத்தில் இது நடந்ததால் அந்த விண்கல்லுக்கு மக்டொனோ விண்கல் என்று பெயரிட்டு விட்டார்கள். அந்தக் கல்லை ஆய்வு செய்து பார்த்தனர். 50 கிராம்தான் எடை. அதில் 23 கிராமை ஆய்ந்தனர். ஆக்சிஜன், மெக்னீசியம், இரும்பு, சிலிக்கான் போன்றவை அதில் இருந்தன. மிகவும் துல்லியம் கொண்ட மின்னணு நுண்ணோக்கியைப் பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டனர். கல்லின் வயது 456 கோடி ஆண்டுகளாவது குறைந்தபட்சமாக இருக்கும் என்று கணக்கிட்டுள்ளனர். பூமியின் வயது 454 கோடி ஆண்டுகள் என்று கணக்கிட்டுள்ளோம். பூமியை விடப் பழசாக இந்த விண்கல் இருக்கிறது.