அக்கா-அண்ணி-பாட்டி-உஸ்தாத்..!
முதலில் தீதி(அக்கா); பின்னர் பாபி(அண்ணி); இப்போ தாதி(பாட்டி) என்றுதான் சாந்தி தேவியை அழைக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் இருந்து பிழைப்புக்காக தில்லிக்கு வந்த சாந்தி, டீக்கடை போடுகிறார். அந்த இடம் சாதாரணமானதல்ல. 75 ஏக்கர் நிலத்தில் ஆயிரக்கணக்கான டிரக்குகள் நிறுத்திவைக்கப்படும் இடம். அன்றாடம் 20 ஆயிரம் டிரக்குகள் வந்து போகின்றன. ஆசியாவிலேயே மிகப்பெரிய டிரக்குகளுக்கான சஞ்சய் காந்தி போக்குவரத்து நகர். டீக்கடை வைத்த சாந்தி தேவி, அருகில் உள்ள மெக்கானிக்குகள் வேலை செய்வதைக் கவனிக்கிறார். சின்ன, சின்ன வேலைகளைச் செய்கிறார். பின்னர், அவரே ஒரு மெக்கானிக்காக மாறுகிறார். நாட்டிலேயே நீங்கதான் முதல் பெண் டிரக் மெக்கானிக்னு சொன்னா, “அட நீங்க வேற.. பொழப்புங்க இது” என்று சிரிக்கிறார். பெண் மெக்கானிக் என்ற கருத்தையும் கிட்டத்தட்ட உடைத்தெறிந்துள்ளார். அனைத்துப் பணிகளையும் செய்கிறார். மூத்த ஆண் மெக்கானிக்குகளை “உஸ்தாத் ஜி” என்றழைப்பார்கள். இவரையும் பலர் அப்படி அழைக்கிறார்கள்.