சர்க்கரை நோயாளிகளும் இனி விண்வெளி செல்லலாம்!
சமீபத்தில், சுபான்ஷு சுக்லா மற்றும் ஒரு மூன்று விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 18 நாள் பயணமாக ஒரு ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்டார்கள். இந்த பயணத்தின் போது அவர்கள் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள். அதில் “சூட் ரைடு” (Suite Ride) என்ற சக்கரை நோய் குறித்தான ஆய்வையும் நடத்தினார்கள். இது போன்ற ஆய்வுகள் வெற்றி அடைந்தால் அதன் மருத்துவப் பலனை விண்வெளி வீரர்கள் மட்டுமல்ல, நாமும் அடையலாம் என கூறினார்கள். சாதாரண மனிதர்கள் போல, விண்வெளி வீரர்களுக்கும் சர்க்கரை நோய் (நீரிழிவு) வரலாம் அல்லவா? ஆனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதுவரை விண்வெளிப் பயணங்கள் மேற்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. இந்நிலையில் இந்த விண்வெளி வீரர்களின் ஆராய்ச்சியின் பலனாக அவர்களும் விண்வெளி பயணத்தை பெரும் சிரமம் இல்லாமல் மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இது ஒரு பெரிய சாதனையாக உள்ளது. இதுவரை விண்வெளியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களின் சர்க்கரை அளவைக் கண்காணிப்பதும், மருந்து கொடுப்பதும் சிரமமாக இருந்தது. சூட் ரைடு ஆய்வு சர்க்கரை நோய் குறித்தான சூட் ரைடு (Suite Ride) என்று பெயரிடப்பட்ட ஒரு முக்கியமான ஆய்வை ‘பூர்ஜீல் ஹோல்டிங்ஸ்’ என்ற சுகாதார நிறுவனம் செய்தது. இந்த ஆய்வின் நோக்கம் நாம் பூமியில் சர்க்கரை நோயைக் கண்காணிக்கப் பயன்படுத்தும் கருவிகள், விண்வெளியின் தீவிரமான சூழலில் (Microgravity - பூஜ்ஜிய ஈர்ப்பு விசை) சரியாக வேலை செய்கிறதா என்று சோதிப்பதுதான். மகிழ்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் 1. சுகர் பார்க்கும் கருவி (CGM): சர்க்கரை நோயாளிகள் அணியும் சிறிய கருவி ஒன்று உண்டு. அது உடலின் சர்க்கரை அளவை நொடிக்கு நொடி கண்காணித்துச் சொல்லும். இதற்கு சிஜிஎம் (‘Continuous Glucose Monitor’ -CGM) என்று பெயர். இந்தக் கருவி விண்வெளியில் இருந்தபோதும், பூமியில் காட்டுவது போலவே மிகவும் துல்லியமாகவே வேலை செய்ததாம். 2. இன்சுலின் பேனா: சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் மருந்தைப் பயன்படுத்துவதற்குச் சிறிய பேனா போன்ற கருவியைப் பயன்படுத்துவார்கள். அந்தக் கருவியும் விண்வெளியில் சரியாகச் செயல்பட்டது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு செய்தி. இந்த ஆய்வு என்ன சொல்கிறது என்றால் இனிமேல், சர்க்கரை நோய் உள்ளவர்களும் கூடப் பயமின்றி விண்வெளி வீரர்களாகப் பயணிக்க முடியும். இது ஒரு வரலாற்றுச் ஆய்வு முடிவாக உள்ளது. அதேபோல இந்தக் கண்டுபிடிப்புகள் விண்வெளியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல. கடலுக்கு நடுவில் உள்ள எண்ணெய் வயல்களில் வேலை செய்பவர்கள் அல்லது மிகவும் தொலைவான இடங்களில் வசிப்பவர்கள் போன்றவர்களுக்கும், தொலைவில் இருந்தே சிகிச்சை அளிக்கும் (Remote Healthcare) முறையை மேம்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்தச் சாதனை விண்வெளி ஆய்வுக்கும், பூமியில் உள்ள கோடிக்கணக்கான சர்க்கரை நோயாளிகளுக்கும் ஒரு புதிய நம்பிக்கையை அளிக்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.