articles

எங்கே தேடுவோம் - சமையன்

குண்டுகளால் துளையிடப்பட்ட  எங்கள் கனவுகளை  நாங்கள் எங்கே தேடுவோம்…  குண்டுகளால் கசங்கி உதிரத்தால் நனைந்திருக்கிறது,எங்கள் மண். நிலத்தின் உரிமையை விழுங்கியது உங்கள் வல்லமை.  யார் தொடங்கியது போரை? முடிப்பது யார்? மனிதாபிமானத்தின் மிச்சங்கள் எங்கே?  மரண ஓலம் பழகிவிட்டது, எங்கள் ஓலங்களுக்கு நீங்கள் காரணம் என்று சொல்ல, பிணங்கள் மட்டுமே மிஞ்சி இருக்கிறது!  எங்கள் குழந்தைகளின் பிணங்கள் புள்ளிவிவரம் உங்களுக்கு, பட்டாம்பூச்சிகளின் சிறகொடிக்கும் நீங்கள், மனிதகுலத்தின் எதிரிகள்!  உங்கள் மௌனம் பேரிரைச்சலாக இருக்கிறது, கொஞ்சம் வாய் திறந்து பேசுங்கள்  எதை சொல்லி தூங்க வைப்பீர்கள் உங்கள் குழந்தைகளை? கோழைகளே…  இந்த கதைகளை சொல்லும் தைரியம் இருக்கிறதா உங்களிடம்?  கனவுகள் பறிக்கப்பட்டு, குண்டுகளின் புகையில் மூச்சுத் திணறி, பூட்ஸ் கால்களில் மிதிபட்டு, துப்பாக்கிகளால் அடித்தே கொல்லப்பட்ட எங்கள் குழந்தைகளின் கதைகளை சொல்ல தைரியம் இருக்கிறதா உங்களுக்கு கோழைகளே…  இனி எங்கே தேடுவோம், எங்கள் கனவுகளை?  எங்கள் குழந்தைகளுக்கு போர் வேண்டாம்! உங்கள் குண்டுகள் வேண்டாம், பசிக் கொடுமைகள் வேண்டாம், துப்பாக்கிகள், பீரங்கிகள், ரத்தம் படிந்த உங்கள் கைகள் என்று எதுவும் வேண்டாம்!  களவாடிய எங்கள் பொழுதுகளை திருப்பித் தாருங்கள் நாங்கள் கனவு காண்கிறோம்! விடியும் நாளை, உங்கள் குண்டு மழையின் சத்தங்களில் அல்ல எங்கள் குழந்தைகளின் கனவுகளில்!