சிறப்பொவ்வா - கணேஷ்
“என்ன... இன்னிக்கு சினிமாவுக்குப் போகலாமா..?” “அப்புடியா.. அதான் ஓடிடில வந்துரும்ல..” “பெரிய திரைல பாக்குற மாதிரி இருக்காதே..” “சரி.. சரி.. போலாம்..” சுகுமாரனும், பழனிச்சாமியும்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். இருவரும் ஒரே அறையில் தங்கியுள்ளனர். சொந்த ஊர் நாமக்கல் மாவட்டத்தில் ஒரே கிராமம். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி பழ னிச்சாமி குரூப் 2 தேர்விலும், சுகுமாரன் குரூப் 4 தேர்விலும், தேர்ச்சி பெற்று ஒரே துறையில் சேர்ந்தனர். ஒரே அலுவலகத்தில் பழனிச்சாமியின் பிரிவில் அவருக்குக்கீழ் சுகுமாரன் பணியாற்றுகிறார். ஒரே அறை யில் தங்கியிருப்பதால் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். இடைவேளையில், பாப்கார்ன் வாங்கி வரச் சென்ற பழனிச்சாமி, இரண்டு பெரிய பாப்கார்ன் பாக்கெட்டுகளும், மற்றொரு கையில் ஒரு ஐஸ்கிரீமும் கொண்டு வந்தார். “எதுக்கு இப்புடி... என்னையும் கூப்புட்டு இருக்கலாமே” என்றார் சுகுமாரன். “முதல்ல புடி..” “என்ன இது பாப்கார்ன் ரெண்டு... ஐஸ்கிரீம் மட்டும் ஒண்ணு..” “இந்தா, ரெண்டு ஸ்பூன் இருக்கு..” என்று ஸ்பூனை நீட்டினார். உருகிரும்... முதல்ல இத சாப்புடலாம்..” என்று சுகுமாரன் சொன்னதற்குத் தலையாட்டி விட்டுத் தொடங்கினர். “என்ன இது... ஸ்பூன்ல எடுத்துச் சாப்புடு... இப்புடிக் கிண்டுறயே..” இடையிலேயே ஸ்பூனைக் கீழே வைத்து விட்டு, பாப்கார்னில் சிலவற்றை எடுத்துக் கொரித்தனர். ஸ்பூனுக்காகக் கை வைத்த போது, “எது நீ சாப்புட்டது.. எது நான் சாப்புட்டது” என்று சுகுமாரன் கேட்டார். அப்புறம், “சரி... சரி... எதுவா இருந்தா என்ன” என்றவாறே ஒரு ஸ்பூனை எடுத்து ஐஸ்கிரீமை எடுத்தார். “பாரு...அதுக்குள்ள உருக ஆரம்பிச்சுருச்சு” என்றார் பழனிச்சாமி. “அப்புடினா, இன்னும் உருகட்டும்.. குடிச்சுரலாம்” என்று சிரித்தார் சுகுமாரன். பக்கத்தில் வைத்து விட்டுப் பாப்கார்னை மீண்டும் கொரிக்க ஆரம்பித்தார்கள். தன்னு டைய பாப்கார்னை அப்படியே வைத்துக் கொண்டு, சுகுமாரனின் கையில் இருந்த பாப்கார்னை எடுத்து வாயில் போட்டுக் கொண்டிருந்தார் பழனிச்சாமி. “அப்புறம் எதுக்கு ரெண்டு?” என்றார் சுகுமாரன். “நாம ரெண்டு பேரும் ஆளுக்கு ரெண்டு பாப்கார்ன் சாப்பிட்ட மாதிரி நினைச்சுக்க லாம்..” அதற்குள் ஐஸ்கிரீம் உருகியிருக்க, இருவரும் ஆளுக்குப் பாதி குடித்தார்கள். படம் ஆரம்பித்தது. நகைச்சுவைக் காட்சி களுக்கு இருவரும் விழுந்து, விழுந்து சிரித்த னர். ‘ஓடிடில வந்தபிறகு, மறுபடியும் பார்க்க லாம்’ என்றவாறே வெளியில் வந்தனர். “வீட்லதான் ஒண்ணும் இல்லயே... சாப்பிட்டுட்டுப் போயிடலாம்..” என்று சொல்லிக் கொண்டே பதிலை எதிர்பாரா மல் சாலையைக் கடந்தார் பழனிச்சாமி. ‘அடடே... என்ன இப்புடிப் போறார்’ என்று அவருடன் சேர்ந்து கொள்ளும் எண்ணத்தில் வேகமாகக் கடக்கப் போன சுகுமாரனை அதி விரைவில் வந்த ஒரு பைக் அடித்துத் தூக்கி யது. அலறல் சத்தம் கேட்டுத் திரும்பிய பழ னிச்சாமி, வேகமாக ஓடி வந்து, அருகில் நின்ற ஆட்டோவில் சுகுமாரனை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார். தலையில் அடி. ரத்தம் வீணாகியிருந் தது. உடனடியாக ‘ஒரு யூனிட் ரத்தம் வேண்டும்’ என்றார்கள். தன்னுடையதும் பி பாசிட்டிவ் என்பதால் உடனடியாக ரத்தம் கொடுத்தார் பழனிச்சாமி. இரண்டு நாட்கள் ஐசியுவில் வைத்தி ருந்தனர். பின்னர் நார்மல் வார்டுக்கு மாற்றி விட்டார்கள். அன்று வெள்ளிக்கிழமை. வாரா வாரம் தவறாமல் இருவரும் ஊருக்குக் கிளம்பி விடுவார்கள். அன்று வர இயலாது என்று இருவருமே தகவல் சொல்லி விட்டார்கள். அடிபட்டது பற்றி வீட்டில் தெரிவிக்கவில்லை. மேலும் ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். பழனிச்சாமியும் லீவு போட்டு அருகிலேயே இருந்தார். அலுவலகத்திலி ருந்து பலரும் அவ்வப்போது வந்து பார்த்துச் சென்றனர். இருவருமே புத்தகப் பிரியர்கள். இதில் பழனிச்சாமி ஆங்கிலப் புத்த கங்களை வாசிக்கக்கூடியவர். நீரஜா சவுத்திரி எழுதிய “ஹவ் பிரைம் மினிஸ்டர்ஸ் டிசைட்(How Prime Ministers Decide)” என்ற புத்தகத்தை முடித்து விட்டார். சுகுமார னும் சும்மா இருக்கவில்லை. மனோஜ் மிட்டாவின் “சாதிப்பெருமை” நூலைத் தமிழ் மொழிபெயர்ப்பில் படித்துவிட்டார். அலுவலகத்திற்குச் சென்றவர்கள், இரண்டு நாட்களாய் தேங்கி விட்ட கோப்பு களை கூடுதல் நேரம் அமர்ந்து நகர்த்தி னார்கள். பழனிச்சாமி மேலதிகாரி என்ப தால் சில கோப்புகளை அவரே நேரடியாகப் பார்த்து கையெழுத்திட்டார். “இதுக்கு முந்தியெல்லாம் ஏதாவது வெச்சாதான் கோப்பு நகரும். நீங்க ரெண்டு பேரும் வந்த பிறகுதான் தானா நகருது. நம்ம வராந்தா வில் வெளியாட்கள் யாருமே இப்பல்லாம் தென்படுறதில்ல” என்று சக ஊழியர்களில் சிலர் நேரடியாகவே கூறினர். அதைக் கேட்கையில் சிலர் முகம் அப்போது வாடி யிருந்தது. சிலர் முகத்தில் மலர்ச்சி இருந்தது. வாரா வாரம் இருவரும் ஒன்றாகத்தான் வெள்ளிக்கிழமையன்று ஊருக்குச் செல்வார்கள். அரசுப் பேருந்தில் ஏறி அமர்ந்த இருவருமே, இரண்டு வாரங்க ளாக ஊருக்குப் போகாதது பற்றிய நினைவு களில் இருந்தனர். அலுவலகத்தில் பணி இருந்தது என்பதுதான் யாரும் எதிர் கேள்வி கேட்காத விடை என்று இரு வருக்குமே தெரியும். அரை மணிநேரத்திற்கு சாதிப்பெருமை யில் உள்ளவற்றை சுகுமாரன் சொல்லிக் கொண்டே வந்தார். “விடுதலைப் போராட்ட வீரர்களாக அறியப்படும் மதன்மோகன் மாளவியா, வல்லபாய் படேல் ஆகி யோரின் சாதி, தீண்டாமை பற்றிய பார்வை கள் எவ்வளவு மோசம் தெரியுமா” என்று நூலில் கூறப்பட்டுள்ள சில விஷயங்களைப் பகிர்ந்தார். பழனிச்சாமியும் தன் பங்கிற்கு, பிரதமர்கள் எப்படியெல்லாம் முடிவெடுத்தார்கள் என்று நீரஜா சவுத்திரி யின் தகவல்களைச் சொல்லத் தொடங்கி னார். கண்கள் உறக்கத்தைத் தழுவின. ஜன்னலோரம் அமர்ந்திருந்த சுகுமாரன் விழித்துப் பார்த்தபோது நாமக்கல் 23 கி.மீ. என்றிருந்தது. இன்னும் அரை மணி நேரம் கண்ணை மூடலாம் என்று நினைப்ப தற்குள் பழனிச்சாமியும் விழித்துக் கொண்டார். “சொல்ல மறந்துட்டேன்” - பழனிச்சாமி. “என்ன..?” “நீரஜா சவுத்திரியோட புத்தகத்தை நீயும் படிக்கனும்.. யு.பி.எஸ்.சி. மெயின்சுக்கு ரொம்ப உதவும்..” உரையாடல் மேலும் நீண்டது. நாமக்கல் பஸ் நிலையம் நெருங்கி யிருந்தது. இருவர் முகமும் மாறியது. அண்ணா சிலையைத்தாண்டி பேருந்து நிலையத்திற்குள் நுழைகையில் சுகுமார னின் தோளில் வைத்திருந்த பழனிச்சாமி யின் கைகள் தளர்ந்து விலகின. பேருந்து நின்றதும் பழனிச்சாமி பின்வழி யாகவும், சுகுமாரன் முன்வழியாகவும் இறங்கினர். நடக்கையில் இருவரின் கால்களிலும் தளர்வு இருந்தது. அது உடல் ரீதியாக இல்லாமல் மனரீதியாக என்பது தெரிந்தது. தங்கள் கிராமத்திற்குச் செல்லும் பேருந்தை நோக்கிச் செல்கையிலும் பிரிந்தே சென்றனர். பழனிச்சாமி பின்வழி யாகவும், சுகுமாரன் முன்வழியாகவும் ஏறிக் கொண்டனர். பேருந்தில் பழனிச்சாமி கள் பின்பக்கம் உள்ள இருக்கைகளிலும், சுகுமாரன்கள் முன்பக்கம் உள்ள இருக்கை களிலும் அமர்ந்தனர். பேருந்து நிறுத்தம் வந்தபோது இறங்கிய பழனிச்சாமிகள் சேரியை நோக்கி யும், சுகுமாரன்கள் ஊரை நோக்கியும் நடந்தனர்.