articles

img

அடுப்பு எரிய நீர் மட்டும் போதுமா அறிவியல் பார்வையில் HONC அடுப்பு

அடுப்பு எரிய நீர் மட்டும் போதுமா? அறிவியல் பார்வையில் HONC அடுப்பு

நீர் மட்டும் வைத்து அடுப்பை எரித்துச் சமையல் செய்யமுடியும் என்ற செய்தி, தீப்போல ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவி வருகிறது. “ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆனால் கார்பன் அற்றது” என்று பொருள்படும் “HONC” எனும் பெயரில் இந்த அடுப்பு பரவலாகப் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. வெறும் ஐந்து லிட்டர் சுத்தமான, தூய நீர் மட்டுமே தேவை எனக் கூறப்படுகிறது. நீர் எரிபொருளாக முடியுமா? ஆனால் நீர் எப்படி எரியும்? நீர் எரிபொருளாக இருக்க முடியாது, ஏனெனில் நீர் என்பது H₂0 என்ற மூலக்கூறு அமைப்பைக் கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். மின்பகுப்பு மூலம் H₂O மூலக்கூறை ஹைட்ரஜன் (H₂) மற்றும் ஆக்சிஜன் (0) ஆகப் பிரிக்க முடியும். பிரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ஒரு எரிபொருளாகும். அது எரியும் போது ஆக்சிஜனேற்றம் அடைந்து மீண்டும் நீராக மாறுகிறது. இந்த வேதிவினையின் போது ஆற்றல் வெளியிடப்படுகிறது, இந்த வெப்ப ஆற்றலை சமையல் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தலாம். சுருக்கமாகச் சொன்னால், நீரை எரிபொருளாகப் பயன்படுத்த முதலில் மின்சாரம் மூலம் மின்பகுப்பு செய்து ஹைட்ரஜனைப் பிரித்தெடுக்க வேண்டும். அதாவது, வெறும் நீர் மட்டுமல்ல, மின்சாரமும் இந்த செயல்முறைக்குத் தேவைப்படுகிறது. மாற்றாக, உயிரிவேதி முறையில் நீரை மின்பகுப்பு செய்யும் நவீன முறைகள் குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. சூரியஒளியை உறிஞ்சி ஒளிச்சேர்க்கை செய்யக்கூடிய சில வகை நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி மின்பகுப்பு நடத்தும் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்முறை வெற்றி பெற்றால், மிகவும் திறன்மிக்க மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வழியில் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய முடியும். ஹைட்ரஜன் எரிபொருள் ஹைட்ரஜன் ஒரு முக்கியமான எரிபொருளாகக் கருதப்படுகிறது. எரிவாயு, பெட்ரோலியம் போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரிக்கும் போதோ அல்லது விறகு போன்ற கரிமப் பொருட்களை எரிக்கும் போதோ ஆற்றல் கிடைக்கிறது எனினும், அப்போது கார்பன் மாசு உற்பத்தியாகிறது. இந்தக் கார்பன் மாசு தான் புவி வெப்பமடைதலுக்கும் காலநிலை மாற்றத்திற்கும் முக்கிய காரணமாகிறது. எனவே, கார்பன் மாசு வெளியிடாத ஆற்றல் மூலங்களை உலகம் தேடிக்கொண்டிருக்கிறது, அதில் ஒன்றுதான் ஹைட்ரஜன் எரிபொருள். இந்தத் தேடல் பூமியை மட்டும் தாண்டியது; நிலவில் காணப்படும் நீரை மின்பகுப்பு செய்து ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனைத் தயாரித்து, ராக்கெட் எரிபொருளாகப் பயன்படுத்தும் திட்டங்கள் உள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) கிரியோஜனிக் ராக்கெட் திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்சிஜனை எரிபொருளாகப் பயன்படுத்துகிறது. மேலும், பிரிக்கப்பட்ட ஆக்சிஜனை மனிதர்கள் சுவாசிப்பதற்கும், ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தியும் நிலவில் மனித வாழிடங்கள் அமைக்க திட்டமிடப்படுகிறது. பெட்ரோலுக்குப் பதிலாக ஹைட்ரஜனில் இயங்கும் கார்கள் மற்றும் ரயில்களும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. பச்சை பழுப்பு கருப்பு ஹைட்ரஜன் ஹைட்ரஜன் உற்பத்தியின் மூலத்தின் அடிப்படையில் அது பச்சை, பழுப்பு அல்லது கருப்பு ஹைட்ரஜன் என வகைப்படுத்தப்படுகிறது. சூரிய மின்னோடம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்தி நீரை மின்பகுப்பு செய்து ஹைட்ரஜன் தயாரித்தால், அது பச்சை ஹைட்ரஜன் எனப்படும். இம்முறையில் கார்பன் மாசு ஏற்படாது. காற்றாலை, நீர் மின்சாரம், அணுமின் நிலையங்கள் போன்றவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொண்டும் இவ்வாறு ஹைட்ரஜன் உற்பத்தி செய்யலாம். மறுபுறம், நிலக்கரி, எரிவாயு, பெட்ரோலியம் போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரித்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொண்டு நீரை மின்பகுப்பு செய்து ஹைட்ரஜன் தயாரித்தால், அது கருப்பு ஹைட்ரஜன் ஆகும். இந்த உற்பத்தி முறையில் கார்பன் மாசு ஏற்பட்டு காலநிலை மாற்றத்தைத் தூண்டும். இந்த இரண்டு முறைகளும் கலந்தும், அதாவது ஓரளவு கார்பன் மாசை உண்டாக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜன் பழுப்பு ஹைட்ரஜன் என அழைக்கப்படுகிறது. கருப்பு ஹைட்ரஜனைப் பயன்படுத்துவது என்பது “தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது” போன்றதாகும். மாசை உண்டாக்கும் ஒரு வழிமுறையில் மின்சாரம் தயாரித்து, பின்னர் அந்த மின்சாரத்தைக் கொண்டு ஹைட்ரஜன் தயாரிப்பது, மொத்த மாசு குறைவதற்குப் பதிலாக, ஆற்றல் இழப்பையே விளைவிக்கும். இதனால் புவி வெப்பமடைதலைத் தடுக்க முடியாது. ஏமாற்று வேலையா? HONC அடுப்பின் விஷயத்தில், ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் போலவே இதுவும் ஒரு ஏமாற்று என்ற கருத்தை சிலர் கூறுகின்றனர். ஏன்? மின்ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றலாம், வெப்ப ஆற்றலை மின்சாரமாக மாற்றலாம், அதாவது ஒருவகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும். ஆனால் இயற்கையில் உள்ள இயற்பியல், வேதியியல் அல்லது உயிரிவேதி வினைகள் மூலம் ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது. வெறும் நீர் ஒரு ஆற்றல் மூலம் அல்ல. எனவே, வெறும் நீரில் இயங்கும் அடுப்பு எனும் கருத்து போலி அறிவியலைப் பரப்புவதாகத் தோன்றுவதும், அதன் விளைவாக ஏமாற்று என்ற சந்தேகம் எழுவதும் இயற்கையே. நிறுவனத்தின் வலைதளத்தில் எப்படி நீரை மின்பகுப்பு செய்வார்கள் என்பது குறித்த எந்தத்தகவலும் இல்லை. நுட்பமான தொழில்நுட்பம் வணிக ரகசியமாக இருக்கும் என்றாலும் பொது அறிவியல் பின்னணி ரகசியம் அல்ல. எடுத்துக்காட்டாக பல்வேறு RO நீர் சுத்திகரிப்பு கருவிகளின் பின்னணியில் நுட்பமான தொழில்நுட்ப வேறுபாடு இருக்கும்; அது வணிக ரகசியம்- ஆனால் எல்லாம் RO தத்துவத்தில் செயல்படுகிறது என்பது ரகசியம் அல்ல- வெளிப்படை சில செய்திகளில் gyroid electrolyte membrane க்ய்ரொட் எலெக்ட்ரொல்ய்ட் மெம்ப்ரன் உதவியோடு மின்சாரத்தை பயன்படுத்தி மின்பகுப்பு மேற்கொள்ளப்படுகிறது என்ற குறிப்பு உள்ளது. எனினும், பொது ஊடகங்களில் “நீரில் எரியும் அடுப்பு” என எதோ வேறு ஆற்றல் இல்லாமல், வெறும் நீரை மட்டுமே கொண்டு எரியும் அடுப்பு என்கிற போலித் தோற்றம் தோற்றுவிக்கப்படுகிறது. இதற்க்கு நிறுவனம் தான் பொறுப்பு என முழுமையாக பழி கூறமுடியாது எனக்கருதுகிறோம். எனினும் ‘நீரை கொண்டு எரியும் அடுப்பு’ எனக்கூறுவது பிழையான புரிதலை உருவாகும் பொருள்மயக்கம் தரும் கூற்று என்பதில் சந்தேகமில்லை. இந்தச் செய்தியை பரபரப்பாக வெளியிடும் ஊடகங்கள், நீரை எந்த ஆற்றல் மூலத்தைக் கொண்டு மின்பகுப்பு செய்கிறார்கள் என்ற விபரத்தைக் கூறவில்லை. தொடர்புடைய நிறுவனமும் தனது வலைத்தளங்களில் இந்த விபரத்தைத் தெளிவாக்கவில்லை. முதவில் மின்சாரத்தைப் பயன்படுத்தி ஹைட்ரஜனை உற்பத்தி செய்து, பின்னர் அந்த ஹைட்ரஜனை எரித்து அடுப்பை இயக்க வேண்டும் என்ற முறைக்கான தெளிவான காரணம் எதுவும் விளக்கப்படவில்லை. இது ஆற்றல் செயல்திறன் சார்ந்த ஒரு முக்கியமான அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கேள்வியாகும். அதேபோல், ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பத்தை இந்த அடுப்பு மூலம் உற்பத்தி செய்ய எவ்வளவு மின்சாரம் தேவைப்படும். மேலும் அதே அளவு மின்சாரத்தை நேரடியாக ஒரு மின் அடுப்பில் பயன்படுத்தினால் அதன் செயல்திறன் எவ்வளவு இருக்கும் என்பதும் ஒரு முக்கியமான ஆற்றல் செயல்திறன் பிரச்சினையாகும். நிறுவனம் இந்த அடுப்பை இயக்க நீரைத் தவிர மின்சாரம் போன்ற புற ஆற்றல் தேவைப்படும் என்று வெளிப்படையாகக் ஊடக செய்தியாளர்களிடம் கூறியிருக்கலாம். ஆனால் ஊடகங்கள் ‘நீரில் எரியும் அடுப்பு’ எனும் கவர்ச்சிகரமான தலைப்பில் கவனம் செலுத்தி, மின்னாற்றல் தேவை குறித்த நிறுவனத்தின் விளக்கத்தைப் புறக்கணித்திருக்கலாம். இது தான் மெய் என்றால், ஊடகங்கள் மேலும் பொறுப்புடனும் அறிவியல் மனப்பான்மையுடனும் செய்திகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். பரபரப்பான செய்தியாக வேண்டும் என்ற வணிக நோக்கில், நிறுவனமே ஆற்றல் தேவை குறித்து வெளிப்படையாகக் கூறாமல் மறைத்திருந்தால், அது ஒரு குறை. ஏமாற்று வேலை என கருதத்தூண்டும். எனவே, ஆற்றல் தேவை குறித்து அந்த நிறுவனம் முழுமையான மற்றும் வெளிப்படையான தகவலைத் தர வேண்டும் எனக்கோருகிறோம். எந்தவொரு அடுப்பு அல்லது கருவியையும் இயக்க தேவைப்படும் ஆற்றலின் அளவு போன்ற அடிப்படைத் தகவல்களை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிப்பது நிறுவனத்தின் கடமையாகும். எரிவாயு அடுப்பு, மின் அடுப்பு, நுண்ணலை அடுப்பு போன்ற அனைத்து சாதனங்களுக்கும் எப்படி ஒரு ஆற்றல் மூலம் தேவைப்படுகிறதோ, அதேபோல் HONC அடுப்புக்கும் ஏதோ ஒரு வகையான ஆற்றல் மூலம் தேவைப்படும். இதுகுறித்த வெளிப்படையான தகவலை வழங்குவது நிறுவனத்தின் கடமை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஹைட்ரஜன் கொண்டு இயங்கும் அடுப்பு முதல் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான தொழில்நுட்பம் என்பது வரவேற்கத்தக்கதே. எனினும் போலியாக ‘நீரை கொண்டு மட்டும் இயங்கும் அடுப்பு எனக்கூறுவது பிழை.