முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு
இரண்டாம் உலகப்போர் வெடித்ததும், அதனை “ஏகாதிபத்தியப் போர்” என்று குறிப்பிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தனது எதிர்ப்பை உரத்த குரலில் ஒலித்தது. பம்பாய் தொழிலாளர்கள் மாபெரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நாடெங்கிலும் கிளம்பிய யுத்த-எதிர்ப்பு அலைகள் ஆங்கிலேய ஆட்சியின் நிம்மதியைக் கெடுத்தன. ஆங்கிலேய அரசு, கம்யூனிஸ்ட்களை ஒடுக்கும் நோக்கில், தமிழகத்தில் மூன்று பெரும் சதிவழக்குகளை உருவாக்கியது - சென்னை, கோவை, மற்றும் நெல்லை! அவற்றில் முதல் வழக்கு நெல்லை சதி வழக்கு. நெல்லை மாவட்டத்தில் வேரூன்றிவந்த இளம் கம்யூனிஸ்ட் இயக்கத்தை அடியோடு அழிக்கும் நோக்கில், ஆங்கிலேய அரசு தனது சதி வலையை வீசியது. அண்ணாச்சி சங்கரநாராயணன், ராமச்சந்திர நெடுங்காடி, தூத்துக்குடி கணேசன், வி.மீனாட்சிநாதன், பெ.சீனிவாசன், தளவாய், ராகவன் போன்ற கம்யூனிஸ்ட்கள் ஏற்கெனவே பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருந்தனர். காங்கிரஸ்காரர்களான எம்.சி.வீரபாகு பிள்ளை, பாப்பாங்குளம் சொக்கலிங்கம் பிள்ளை, சிந்துபூந்துறை சண்முகம் பிள்ளை போன்றோரும் அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் - இவர்களில் சொக்கலிங்கம், சண்முகம் இருவரும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக இருந்தவர்கள். “இங்கிலாந்து மன்னரின் சட்டபூர்வமான ஆட்சியைக் கவிழ்க்க, ஆயுதப் போராட்டம் நடத்த, தொழிலாளர், விவசாயிகள், மாணவர்களை திரட்ட சதி செய்தனர்” என்பதே குற்றச்சாட்டு. இவர்களுக்காக பிரபல காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கோபால கிருஷ்ணய்யர், வி.சுப்ரமணிய அய்யர், டி.எம்.சுப்ரமணிய அய்யர் ஆகியோர் இலவசமாக வாதாடினர். 1941 ஏப்ரல் முதல் ஜூலை வரை நடந்த விசாரணையில், திறமைமிக்க வாதங்கள் நிகழ்த்தப்பட்டும், நீதிபதிகள் கம்யூனிஸ்ட்களைத் தண்டிப்பதிலேயே குறியாக இருந்தனர். ராமச்சந்திர நெடுங்காடிக்கு 3½ ஆண்டு, ராகவன், மீனாட்சிநாதன், பெ.சீனிவாசன், பாலய்யா ஆகிய நால்வருக்கு 2¼ ஆண்டு, மற்ற ஐவருக்கு 1½ ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அனைவரும் ‘சி’ வகுப்புக் கைதிகளாக பெல்லாரியிலிருந்த அலிப்புரம் முகாம் சிறைக்கு அனுப்பப்பட்டனர். கொடிய சிறைவாசத்திற்கு ஆளாக்கப்பட்டனர். ஆனால் ஆங்கிலேயரின் நம்பிக்கை பொய்த்தது. கம்யூனிஸ்ட்களை தனிமைப்படுத்த முடியவில்லை. மாறாக, வழக்கு விசாரணை நாட்களில் காங்கிரஸ்காரர்கள், தொழிலாளிகள், அனுதாபிகள் நீதிமன்றத்திற்கு வந்து குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தனர். நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படும்போதும், திருப்பி அழைத்துச் செல்லப்படும்போதும் அவர்கள் “புரட்சி வாழ்க! பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக! கம்யூனிஸ்ட் கட்சி நீடுழி வாழ்க!” என முழக்கமிட்டது மக்களிடையே நல்ல பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காங்கிரஸ்காரர் சிந்துபூந்துறை சண்முகம் பிள்ளை, சிறையில் கம்யூனிஸ்ட் தோழர்கள் நடத்திய மார்க்சியம், லெனினியம், வர்க்கப் போராட்டக் கொள்கைகள் பற்றிய அரசியல் வகுப்புகளில் பங்கேற்று, உண்மையை உணர்ந்து கம்யூனிஸ்டாக மாறினார் - காங்கிரஸ்காரராக சிறை சென்று, கம்யூனிஸ்டாக வெளியே வந்தார்! இந்த வழக்கு, கம்யூனிஸ்ட் இயக்கத்தை அழிப்பதற்குப் பதிலாக, கொள்கையின் மீதான நம்பிக்கையை மக்களிடையே வளர்த்தது. சிறைவாசத்தை அச்சுறுத்தலாக பார்க்காமல், போராட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்ற வீரத் தியாகிகளின் உறுதி, பின்னாளில் எழுந்த எண்ணற்ற போராட்டங்களுக்கு வித்திட்டது. ஆங்கிலேயர் சதிவழக்குகளால் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நசுக்க முடியுமென்று நினைத்தது வரலாற்றின் மாபெரும் தவறாக நிரூபிக்கப்பட்டது.
சுதந்திரத்தின் முன்னிரவில் மலர்ந்த விடுதலைப் புன்னகைகள்
1946 டிசம்பர், மதுரையில் கட்சி, தொழிற்சங்க அலுவலகங்கள் மீது போலீஸ் அதிரடி சோதனை நடத்தி கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி, ஏ.பாலசுப்பிரமணியம், பி.மாணிக்கம், எஸ்.கிருஷ்ணசாமி, ஆர்.கே.சாந்துலால், டி.மணவாளன், எஸ்.பாலு, ஆர்.வி.சித்தா, எம்.முனியாண்டி, எஸ்.முத்து உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். பி.ராமமூர்த்தி கோவையில் கைது செய்யப்பட்டார். சென்னையில் மாநிலச் செயலாளர் எம்.ஆர்.வெங்கட்ராமன், தொழிற்சங்கத் தலைவர் பாலச்சந்திரமேனன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரைக்குக் கொண்டுவரப்பட்டனர். ஒரு மாதத்திற்குப் பிறகு, வெங்கட்ராமன், பாலசுப்பிரமணியம், பாலச்சந்திரமேனன் ஆகிய மூவரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். பி.ராமமூர்த்தியை முதல் குற்றவாளியாகவும், என்.சங்கரய்யாவை இரண்டாம் குற்றவாளியாகவும், கே.டி.கே.தங்கமணியை மூன்றாம் குற்றவாளியாகவும் கொண்டு மதுரை சதி வழக்கு கட்டமைக்கப்பட்டது. குற்றச்சாட்டு மிகவும் நகைப்புக்குரியது: “ஒரு நாள் மாலை 7 மணியளவில், மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கூடி, கம்யூனிஸ்ட்களுக்கு எதிரானவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று பேசினார்கள். அதை அங்கே வந்த முனியாண்டி என்ற குதிரை வண்டி ஓட்டுபவர் நேரில் கேட்டதாக” குற்றச்சாட்டில் கூறப்பட்டது. எட்டுமாத கால நீண்ட விசாரணையில், வழக்கு விசாரணைக்கு வரும் நேரத்தில் நீதிமன்றத்தில் ஏராளமான மக்கள் குழுமினர். போலீஸ் வண்டியில் அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வழியிலும் ஏராளமான மக்கள் கூடி நின்று வாழ்த்தொலி எழுப்பினர். இவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற ரிசர்வ் போலீஸ் துணை சப்-இன்ஸ்பெக்டர் பாலு, பின்னாளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்பெற்ற தியாகியானார்! இரண்டே இரண்டு அம்சங்களால் இந்த சதி வழக்கு சிதறடிக்கப்பட்டது. முதலாவது, ராமமூர்த்தி கொலைத் திட்டம் தீட்டியதாகக் கூறப்பட்ட அதே நேரத்தில் (மாலை 7 மணி), அவர் சொக்கிகுளத்தில் பதுக்கல் எதிர்ப்பு இலாகா கண்காணிப்பாளர் வெங்கடரமணியுடன் இருந்தார். பதுக்கப்பட்ட உணவுப் பொருட்களைக் கைப்பற்ற கம்யூனிஸ்ட்கள் உதவ வேண்டும் என்ற விவாதத்திற்காக. இதை அந்த அதிகாரியே நீதிமன்றத்தில் சாட்சியாக வந்து கூறினார் - போலீஸ் தரப்பிற்குப் பெருத்த அடி! இரண்டாவதாக, அரசின் முதல் சாட்சியான குதிரைவண்டிக்காரர் முனியாண்டி ஒரு பழம்பெரும் திருடன் என்பதும், பலமுறை சிறை சென்றவன் என்பதும், பொய் சாட்சி என்பதும் அம்பலமானது. சுதந்திர நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. 1947 ஆகஸ்ட் 14 மாலை 7 மணிக்கு, நீதிபதி மதுரைச் சிறைச்சாலைக்கு வந்தார். “பிரபலமான மக்கள் ஊழியர்களுக்கெதிராக ஒரு கிரிமினல் குற்றவாளியை பிரதான சாட்சியாக வைத்து வழக்கை ஜோடித்திருப்பதை” சுட்டிக்காட்டி, இந்த வழக்கிற்கு “எவ்வித ஆதாரமும் இல்லை” எனக் கூறி அனைவரையும் விடுதலை செய்தார். விடுதலையானவர்கள் வெளியே வந்ததும், செங்கொடிகளுடன் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பெருத்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். முழக்கங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக திலகர் திடலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே நடைபெற்ற பிரம்மாண்டமான கூட்டத்தில் பி.ராமமூர்த்தி, கே.டி.கே.தங்கமணி, என்.சங்கரய்யா ஆகியோர் எழுச்சிமிகு உரையாற்றினர். கூட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. இரவு 12 மணிக்கு இந்தியா விடுதலையடைந்தது! திலகர் திடலில் குழுமியிருந்த மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சி பொங்க தத்தம் இல்லங்களுக்குத் திரும்பினர். ஒரே நாளில் இரட்டை விடுதலையின் மகிழ்ச்சி - தோழர்களின் விடுதலையும், நாட்டின் விடுதலையும். நெடிய போராட்டத்திற்குப் பின், எண்ணற்ற தியாகங்களுக்குப் பின் இந்த வெற்றிப் புன்னகை. அரசியல் சதிகளை மக்கள் சக்தியால் தோற்கடித்த பெருமிதம். சாதாரண மனிதர்களின் ஒன்றுபட்ட குரல் எவ்வளவு வலிமையானது என்பதை மீண்டும் நிரூபித்த வரலாற்று நிகழ்வு!
உறுதியின் உச்சம் - சிறைக்குள்ளும் சிந்தனைச் சுடர்கள்
1939 செப்டம்பரில் இரண்டாம் உலகப் போர் வெடித்தது. ஜெர்மனியின் இட்லரை சோவியத் நாட்டிற்கெதிராக திருப்பிவிட அமெரிக்கா, பிரிட்டன் முயற்சித்தவுடன், “பத்மாசுரன் போல்” இட்லர் தன்னை உருவாக்கியவர்கள் தலையிலேயே கை வைத்தான். இந்த யுத்தம் வெறும் போர் அல்ல, ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையேயான மோதல் என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. மக்கள் இந்த யுத்தத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும் என அறைகூவல் விடுத்தது. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்த கம்யூனிஸ்டுகளும் இதே நிலைப்பாட்டை எடுத்ததால், அவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இது கம்யூனிஸ்டுகள் பகிரங்கமாக செயல்பட வழிவகுத்தது. ஆங்கிலேய அரசு இந்த யுத்த எதிர்ப்பைக் கண்டு ஆத்திரமடைந்து, தமிழகத்தில் கம்யூனிஸ்டுகளைக் கைது செய்து சதிவழக்குகளைத் தொடர்ந்தது. கோவையில் 1940 டிசம்பர் 21 அதிகாலை, காளிங்கராயன் வீதி சந்திப்பில் இருந்த கட்சி அலுவலகத்தை காவல்துறை சுற்றிவளைத்தது. என்.சி.சேகர், வில்லியம் ஸ்னெலக்ஸ், ஆர்.முத்துசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கட்சி ஆவணங்கள், புத்தகங்கள் அனைத்தும் ஒரு லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டன. பின்னர் ஆர்.கிசன், எம்.பூபதி, பி.கே.ராமசாமி, எஸ்.கிருஷ்ணன், ஏ.ஆர்.முத்துசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேட்டுப்பாளையம் எம்.ஆர்.அருணாச்சலம், ஜவுளிக்கடை ராமசாமி, சுந்தரம் ஆகியோரும் வலைக்குள் சிக்கினர். “வன்முறை மூலம் ஆங்கிலேய அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்தார்கள்” என்ற குற்றச்சாட்டின் கீழ் “கோவை கம்யூனிஸ்ட் சதி வழக்கு” தொடரப்பட்டது. இதில் ஒரு சுவையான திருப்பம் என்னவென்றால், தேடப்பட்டு வந்த வி.ராதாகிருஷ்ணனின் வசதியான மாமா, காவல்துறை அதிகாரியின் உதவியுடன் அவரை அரசு சாட்சியாக மாற்ற முயற்சித்தார். ஆனால் பி.கே.ராமசாமியின் ஆலோசனைப்படி, ராதாகிருஷ்ணன் சம்மதிப்பது போல் நடித்து, நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்தார். காவல்துறை ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கடுங்கோபம் கொண்டது. நீண்ட விசாரணைக்குப் பின், என்.சி.சேகருக்கு 22 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு வெவ்வேறு தண்டனைகள் கிடைத்தன. 1940-இல் கோவையில் யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த எஸ்.எம்.ராமய்யாவுக்கு இரண்டாண்டு, மேட்டுப்பாளையத்தில் தேசிய வாலிபர் மாநாட்டில் யுத்தத்திற்கெதிராகப் பேசிய கே.பாலதண்டாயுதத்திற்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை முடிந்ததும் அவர் உடனே பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். மேட்டுப்பாளையத்தில் போர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த எம்.இ.மதனன், எம்.கே.கருப்பண்ணன், ஊட்டி ரங்கசாமி, 1940-இல் பவானியில் பி.கே.ராமசாமி, ஆர்.கிசன், 1941-இல் கோவை ஆரோக்கியசாமி, வி.விருத்தகிரி, ஆர்.கே.பாண்டுரங்கன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். சி.ஏ.பாலன் 1941-இல் சென்னையில் கல்லெறிந்ததற்காக கைதானாலும், காவலிலிருந்து துணிச்சலாக தப்பித்து மறுபடியும் இயக்கத்திற்காக உழைத்தார். தொழிலாளர் தலைவர் கே.ரமணிக்கு நேர்ந்த கொடுமைகள் மிகவும் கொடூரமானவை. 1939-இல், மஸ்தான் என்ற ரவுடியை தாக்கியதாக ஒரு பொய் வழக்கு தொடரப்பட்டு 3 மாத தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருக்கும்போதே மற்றொரு பொய் வழக்கும் தொடரப்பட்டது - ஒரு பொதுக்கூட்டத்தில் சட்டவிரோத உரை நிகழ்த்தியதாக - ஆனால் அவர் அந்த கூட்டத்திற்கே செல்லவில்லை! நீதிபதி ஜாமீன் கேட்க, அதை மறுத்து ஒன்றேகால் ஆண்டு சிறையை ஏற்றார். சிறையில் ராகி, சோளம் அரைக்கும் கொடுமையால் உள்ளங்கைகள் தோல் உரிந்து ரத்தம் சொட்டியது. துவண்டு போகாமல், அவர் கைதிகளின் வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்கினார். இதனால் கைதிகளுக்கு தினமும் இரண்டு பீடிகள் கிடைக்க வழிவகுத்தார். 18 மாத தண்டனை முடிந்ததும், சிறை வாயிலிலேயே பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்த சதி வழக்கு மூலம் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நசுக்கிவிடலாம் என்ற ஆங்கிலேயரின் எண்ணம் பொய்த்தது. அவர்கள் ஒடுக்க ஒடுக்க, இயக்கம் மேலும் வலுப்பெற்றது. கட்சியின் முடிவுப்படி, கைது செய்யப்படாத தொண்டர்கள் தமிழகமெங்கும் யுத்த-எதிர்ப்புப் பிரச்சாரத்தை தொடர்ந்து எடுத்துச் சென்றனர். சிறைக்குள்ளும் போராட்ட உணர்வு அணையவில்லை. சிறைச்சாலையே கம்யூனிஸ்டுகளின் “கல்விக்கூடமாக” மாறியது. சிறை வாழ்க்கையின் கஷ்டங்களை தத்துவார்த்த அடிப்படையில் பார்த்த அவர்கள், “சுதந்திரம் இல்லாத உலகத்தில் சிறைச்சாலைக்கும் வெளியுலகத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை” என்று உறுதியாக நம்பினர். ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிராக குரல் கொடுத்த தியாகிகளின் உறுதி, நமக்கு என்றென்றும் வழிகாட்டியாக திகழ்கிறது. சி.ஏ.பாலன் போன்றோரின் துணிச்சல், கே.ரமணியின் உறுதிப்பாடு, என்.சி.சேகரின் தியாகம் - இவையெல்லாம் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.
சேலம் சதி வழக்கு
1949 ஆம் ஆண்டில் சேலம் - ஜோலார்பேட்டை இருப்புப்பாதையில் உள்ள தொட்டம்பட்டி கல்லாவி ரயில் நிலையங்களுக்கிடையே ஒரு சரக்கு ரயில் கவிழ்ந்தது. கம்யூனிஸ்டுகள்தான் இதற்குக் காரணம் என்ற பழியைச் சுமத்தி காங்கிரஸ் அரசாங்கம்33 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் பலர் கைது செய்யப் பட்டனர். கட்சித் தோழர்கள் மற்றும் உறவினர் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. சிலர் ஏற் கெனவே தலைமறைவாகி இருந்தனர். பி. ராமமூர்த்தி, எம். கல்யாணசுந்தரம். கே. அனந்தநம்பியார். எம்.ஆர்.வெங்கட்ராமன். எஸ். எம்.ராமய்யா, ஏ.முனுசாமி, பி.சீனிவாசன், தெய்வம், அப்பாதுரை, கே.செல்வராஜ், சடையப்பன், தாமோதரன், எஸ்.எம். கண்ணன், நரசிம்மன், குள்ளமாரப்பன், ஜெயராமன், கிருஷ்ணசாமி, இளங்கோ, கதிர்ராஜூ, மாரப்பன், எம்.முனுசாமி, பழனியப்பன், தீர்த்தான், ஏ.பெரியதம்பி, கே.ஏ.பழனி, கந்தசாமி மற்றும்7 பேர் மீது ரயிலைக் கவிழ்த்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்ட பலர் 1950ஆம் ஆண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்டு 1951 நவம்பர் மாதம்வரை விசாரணைக் கைதிகளாக 23 மாத காலம் சிறையிலடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் ஏ.முனுசாமி, பி.சீனிவாசன், தாமோதரன், தீர்த்தான் ஆகியோருக்கு 21 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு ஏழு வருடங்கள் உறுதி செய்யப்பட்டது. கந்தசாமிக்கு 5 வருடம். எஸ்.எம். கண்ணனுக்கு 4 ஆண்டுகள், தெய்வத்திற்கு 3 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் கட்சி மீதான தடை நீக்கப்பட்ட பிறகு, மாறிய அரசியல் சூழ்நிலையில், 1952 ஆம் ஆண்டில் அனைவரும் முதலமைச்சர் ராஜாஜியால் விடுதலை செய்யப்பட்டனர். இதே 1949ஆம் ஆண்டில் மேட்டூர் கெமிக்கல்சில் போராட்டம் துவங்கியது. 430 பேர் வேலை இழந்தனர், இப்போராட்டத்தின் போது எம்.சீரங்கன், கே.பி.தங்கவேலு போன்றோர் கெமிக்கல் மில்லுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டனர். ஐஸ் மீது போடப்பட்டு கொடிய சித்ரவதைக்கு ஆளாயினர். பின்னர் அனைவரும் ஓமலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அங்கேயிருந்த அட்டைகள் கம்யூனிஸ்டுகளின் ரத்தத்தை உறிஞ்சின. சிறிது காலத்திற்குப் பின் அவர்கள் ஜாமீனில் விடப்பட்டனர். நீதிமன்றம் எம்.சீரங்கன் உள்ளிட்ட 48 பேருக்கு 6 வருட கடுங்காவல் தண்டனை விதித்தது. சீனிவாசன். வெங்கடாசலக்கவுண்டர், நஞ்சப்பா, கந்தசாமி. எஸ்.டி.சீனிவாசன், பழனிச்சாமி, ரபேல் மற்றும் இருவர் பாதுகாப்புக் கைதிகளாக சேலம் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர். தண்டிக்கப்பட்ட கம்யூனிஸ்ட்கள் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு 1952ஆம்ஆண்டில் விசாரணைக்கு வந்தது. அவர்கள் சார்பில் மோகன் குமாரமங்கலம் வாதிட்டு அனைவருக்கும் விடுதலை வாங்கித் தந்தார்.