tamilnadu

img

திறன் முதலீடு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி

புதுக்கோட்டை, நவ.8 - உலகிலேயே திறன் முதலீடு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளதை யாரும் மறுக்க முடியாது என்றார் மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.  புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில், “கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரூ.10.5 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடு கொண்டு வருவதற்கும், சுமார் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில், கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி, ஓராண்டுக்குள் 100 சதவீதம் தொழில் தொடங்கவும், வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரவும் முயற்சிக்கிறோம். இதற்காக குழு ஒன்றையும் முதல்வர் அமைத்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக் காலங்களில் அப்படி நடக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். தொழில் முதலீடுகள் வந்துள்ளது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கேட்கிறார். ஏற்கெனவே சட்டப்பேரவையிலும், வெளியிலும் பலமுறை அறிவித்திருக்கிறோம். இப்போது வெள்ளை அறிக்கை வெளியிடக் கோருவது நேர விரயம். நான் முதல்வன் திட்டத்தில் இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்கும் பணிகள் நடைபெறுகின்றன. தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தொழிலாளர்கள் தேவைப்படுவோர் இதுபோன்ற முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை ஜப்பான், ஜெர்மன் போன்ற நாடுகள் உணர்ந்திருக்கிறார்கள். தங்கள் மொழியைக் கற்றுத் தந்து அனுப்புங்கள் என்றும் அவர்கள் கேட்கிறார்கள். எனவே, நான் முதல்வன் திட்டத்தில் ஜப்பான், ஜெர்மன் மொழி கற்றுத் தருகிறோம். உலகிலேயே திறன் முதலீடு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளதை யாரும் மறுக்க முடியாது” என்றார்.