tamilnadu

img

“சூத்திரதாரி” - கி.ஜெயபாலன், புதுக்கோட்டை

“சூத்திரதாரி”

 அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பது மரண வியாபாரி என்பதன் மங்கள வழக்கு.நச்சு பாம்பை நல்ல பாம்பு என்பது போல்.இருபது வருடமாக(1955-1975)வியாட்நாம் மீது அமெரிக்கா நடத்திய போரில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் மற்றும் பத்து லட்சம் வியட்நாமியர்கள் கொல்லப் பட்டனர்.அதில் நடைபிணமானோர் பல்லாயிரம். 1970-ல் இப்போரை மாபெரும் தவறென பெரும்பகுதி அமெரிக்கர்கள் ஒரு பக்கம் குரல்  எழுப்பினர்.அதேநேரத்தில் போரை எதிர்ப்ப வர்கள் தேச விரோதிகள் என அரசின் ஆதரவு  ஊடகங்கள் மற்றொரு பக்கம் எதிர்குரலுமிட்டது. இதே காலத்தில்,போர் குறித்த எவ்வித பிரக்ஞை யும்,பாதிப்பும் இல்லாமல் ஒரு பகுதியும் இருந்தது. இதில் ஜெபியும் ஒருவன்.இவனைப் பற்றி நெருக்கமாக பேசும் அமெரிக்கப் படமே,”மாஸ்டர்மைண்ட்”. மாசாசூசெட்ஸ் தான் கதைக் களம்.ஓய்வு பெற்ற நீதிபதியின் மகனான ஜெபி,தச்சன் மற்றும்  ஓவியனுமாவான்.ஆனால் தச்சுத் தொழிலில் வருமானமில்லை; இவனுக்குப் பள்ளி செல்லும்  இரு மகன்கள்.சம்பாத்தியமின்றித் திரியும் மகனை கரித்துக் கொட்டும் தந்தை.கணவன் மனைவிக்குமிடையேநெருக்கமற்ற உறவு.ஜெபிக்கு அவனது தாய் அவ்வப்போது பண உதவி செய்கிறார். உள்ளது உள்ளபடி தீட்டப்படும் ஓவியம் போலன்றி கலைஞன் உணர்ந்தபடி தீட்டப்படும் வடிவமற்ற ஓவியங்கள் (Abstract paintings)மீது ஜெபி மிகுந்த ஈடுபாடு கொண்டவன். ஊரி லுள்ள Framingham Museum of Artsக்கு அடிக்கடி குடும்பத்தோடு சென்று ஓவியங்களை ரசிப்பது இவனது வழக்கம்.குறிப்பாக ஆர்தர்  டவ்(Arthur Dove)-ன் வடிவமற்ற ஓவியங்கள் மீது அவனுக்குத் தனி ஈடுபாடு.இவரது ஓவி யங்களை மணிக்கணக்கில் நின்று ரசிப்ப வன். பண நெருக்கடிக்கும் மன உளைச்ச லுக்கும் உள்ளான ஜெபிக்கு இந்த ஓவியங்க ளைத் திருடும் எண்ணமும் மேலோங்குகிறது. இரண்டு தொழில்முறைத் திருடர்களின் உதவி யுடன் டவ்வின் நான்கு ஓவியங்களையும் திருடு கிறான்.போலீஸ் துரத்துகிறது. குடும்பத்தை நிராதரவாக்கி தப்பித்து ஓடுகிறான்.ஓட்டம் எங்கு முடிகிறது?  மையப்பாத்திரமான ஜெபியின் குணாம்சம்  கதையின் முக்கிய புள்ளியாக கட்டமைக்கப் பட்டுள்ளது. இவன் ஒரு மாதிரியான மனநிலை யில் உள்ளவனில்லை.கிளப்டோமேனியா நோய்ப் பாதிப்பு கொண்டவனாகவோ,தன் சொந்த நலனுக்காக அறநெறிகளைப் புறக்கணித்துத் தன் நலன்களை நிறைவேற்றிக் கொள்ளும் சூழ்ச்சிக்கார மாக்கியவல்லிக் குணாம்சம் கொண்டவனோ அல்ல. ஒரு ரகசிய  திட்டத்தை செயல்படுத்த ஆசை இருக்கிறது.ஆனால் அதன் பின்விளைவுகள் பற்றி கணிக்க  முடியாதவனாகவும் உள்ளான். ஆழ்ந்த சிந்தனையும்,அவதானிப்பும் இருந்தால்தான், ஆர்தர் டவ்வின் வடிவமற்ற உணர்வு நிலை ஓவியங்களை புரிந்துகொள்ள முடியும்.ஆனால்,இவ்ஓவியங்கள் விஷ யத்தில்,அது தரும் உணர்வோடு ஒன்றி ணைந்து உறவாடுவதை மனதார விரும்பு கிறான்.இதே வேளையில் ஒரு கலைத் திருட னாகவும் உள்ளான். இயல்பாக,தன்னை மட்டு மின்றி புறக்காரணிகளையும் சரியாக மதிப்பிட  முடியாத நபராகவே இருக்கின்ற அதேவேளை யில்,தன் திறமைகளை மிகைப்படுத்திப் பார்க்கின்றவனாகவும் உள்ளதால், பார்வையா ளர்களுக்கு இப்பாத்திரத்தின் மீதான ஒரு  ஈர்ப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு  பாத்திரத்தின் சிக்கலானத் தன்மையை, சிந்த னைக்கு உள்ளாக்கியதே இப்படத்தின் சிறப்பு.  ஜெபியின் திருட்டிற்கு உதவுகின்ற கறுப்பி னத் திருடன், போரில்லாத அமைதி வேண்டி அரசை நிர்பந்திக்கும்,சிறு பகுதியினர் நடத்தும்  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறான்.எப்படி யென்றால்,ஒரு வயதான மூதாட்டி பிடித்துக் கொண்டிருக்கும் போர் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகையை, தட்டிப் பறித்து இவன் உயர்த்தி பிடித்துக் கொண்டு இயக்கத்தில் பங்கேற்கிறான்.அப்போது,அங்கு வரும் ஜெபி யோடு திருடச் செல்கிறான்.குற்றச் செயல்க ளைச் செய்யும் ஒருவன்,நாட்டிற்காக பொதுக் குரல் எழுப்புபவனாகவும் உள்ளான் என்பதை, இக்காட்சி இருண்ட நகைச்சுவையாக வெளிப்படுத்துகிறது. கனடாவுக்குச் செல்வதற்கான பேருந்துக் கட்டணத்துக்கு வழியின்றி ஒரு மூதாட்டியிடம் பணத்தைத் திருடுகிறான்.தப்பிக்க,அவ்வழியே செல்லும் வியட்நாம் போர் எதிர்ப்புப் பேர ணிக்குள் சேர்ந்து கொள்கிறான். பேரணி மீது  போலீஸ் தடியடி நடத்த கூட்டம் சிதறியோடு கிறது;ஜெபி தடியடியில் சிக்கி கைதாகிறான். போலீஸ் வேனிலிருந்தபடி “நிறுத்துங்கள்; நிறுத்துங்கள்;நிறுத்துங்கள்;ஒரு தவறு நடந்து விட்டது”எனக் கத்துகிறான். இவன் போர் எதிர்ப்பாளன் இல்லை; ஆனால் இவன் கதறுவது  போர் நிறுத்தக் கோரிக்கையென போலீஸ் கருது கிறது.இக்காட்சித் தொகுப்பு, ஒரு நாடக நகை முரண்(Dramatic Irony).  திருத்தப்படாத தாடியோடும்,இரு கைகளை யும் கட்டிக்கொண்டு, சாந்தமான முகத்தோடு, ஜெபி மூனியாக நடித்துள்ள ஜோஸ் ஓ கார்னர், அனைவரும் ரசிக்கும் படியான அழகியலான நடிப்பைத் தந்துள்ளார்.மகன்களாக வரும் இரு  சிறுவர்களும் சீரிய நடிப்பைத் தந்து ஆச்சரி யப்படுத்தியுள்ளனர்.  பர்ஸ்ட் கப் (First Cow), ரிவர் ஆப் கிராஸ்  (River of Gras)s உள்ளிட்ட பல பேசப்பட்ட படங்களின் பெண் இயக்குநர் கெல்லி ரெய்ச்சார்ட் இப்படத்தையும் இயக்கி, திரைக்  கதையையும் எழுதியுள்ளார்.இவர் தனது எளி மையான,சமூக உணர்வுள்ள கதைக்களங்க ளுக்காகப் புகழப்படுபவர். ஹெய்ஸட் (குற்றப்  பின்னணி)படங்களின் வழக்கமான விதிகளிலி ருந்து விலகி நிறைவான திரை அனுபவத்தை தந்துள்ளார். இலையுதிர் காலத்தை,மஞ்சள் வண்ணத்தில் காண்பித்து அக்கால நிலைக்கே பிளோவெஸ்ட்டின் கேமரா அழைத்துச் செல்கிறது. 70களின் காலத்திய கட்டிடங்களின் பின்புலத்தை அப்படியே காட்சிப்படுத்திய ஆர்ட் இயக்குநரின் நேர்த்தியைப் பாராட்டலாம். ஓவியங்களைத் திருடும் சமயத்தில் ஜெபியின் பதற்றத்தையும் அவசரத்தையும் தப்பித்து செல்லும் போதான அவனது பயத்தையும் ராப்  மஷூராகின் அன்றைய ஜாஸ் பின்னணி இசை அழகாக வெளிப்படுத்துகிறது. இப்படம், 2025-க்கான கேன்ஸ், சிட்னி,நியூ யார்க் மற்றும் லண்டன் போன்ற உலகின் முக்கிய திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளது. கேன்ஸ் விழாவில் பாமிடியோர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. படம் முபியில் காணக்கிடைக்கிறது.