40 ஆண்டுகளாக போராட்டம்: 38 பயனாளிகளுக்கு பட்டா வழங்கல்
நாமக்கல், ஜன.11- 40 ஆண்டுகளாக மங்களம் கிராம மக்கள் பட்டா கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது 38 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ளது மங்கலம் கிராமம். இக்கிராமத்தில் நத்தமேடு என்ற பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் 44 குடும்பத்தினர் பட்டா இன்றி வசித்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக தங்களுக்கு பட்டா வேண்டும் என்று கேட்டு கோரிக்கை வைத்து வந்தனர். வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் அந்த குறிப்பிட்ட நிலம் இல்லாததால், பட்டா வழங்க இயலாத சூழல் நிலவியது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனிடம் இப்பகுதி மக்கள் முறையிட்டதைத் தொடர்ந்து, இந்த நிலம் யாருடைய கட்டுப்பாட்டில் வருகிறது என ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில் அந்த நிலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட புறம்போக்கு நிலம் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மூன்று ஆண்டுகளாக போராடியதன் விளைவாக 38 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கிடைத்தது. 38 பயனாளிகளுக்கு இந்த பட்டாவை உடனடியாக வழங்கும் நிகழ்வு மங்கலம் கிராமம் ஈஸ்வரன் கோயில் அருகே சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் தலைமை வகித்தார். திருச்செங்கோடு வட்டாட்சியர் கிருஷ்ணவேணி வரவேற்றார். வருவாய் கோட்டாட்சியர் லெனின் முன்னிலை வகித்தார். 40 ஆண்டு காலமாக தங்களுக்கு கிடைக்காத பட்டா தற்போது கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியை தருவதாக பயனாளர்கள் தெரிவித்தனர்.
