உயர் கல்வியைத் தனியார்மயமாக்கும் சட்டம் தமிழக அரசு திரும்பப் பெற மாணவர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை, அக்.19 - அரசு உதவிபெறும் கல்லூரிகளைத் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற வழிவகுக்கும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற முன்மொழியப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் (SFI) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநிலத் தலைவர் சி.மிருதுளா, மாநிலச் செயலாளர் தௌ.சம்சீர் அகமது ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், “தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் 2019இல் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம், ஏற்கனவே உள்ள தனியார் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளைப் பல்கலைக்கழகங்களாக மாற்றிக் கொள்ள வழிவகுக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத இத்தகைய சட்டம், அரசின் நிதி மற்றும் மானியங்கள் உதவியுடன் பொதுச் சொத்தாக வளர்ந்த உதவிபெறும் கல்வி நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் செயலாகும்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறைந்த கட்டணத்தில் கிராமப்புற மாணவர்களுக்குக் கல்வி வழங்கி வரும் உதவிபெறும் நிறுவனங்களைப் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிப்பது, ஏழை மாணவர்களின் உயர்கல்விக் கனவைச் சிதைத்து விடும். மேலும், இச்சட்டம் தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ மறைமுகமாகச் செயல்படுத்தும் முயற்சி என்றும் மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. பொதுக் கல்வி முறைக்குப் பாதகம் ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
முக்கிய ஆட்சேபணைகள்
* பொதுச் சொத்து பறிப்பு: பல ஆண்டுகளாக அரசு மற்றும் யுஜிசி மானியங்களைப் பெற்று வளர்ந்த பொதுச் சொத்தைத் தனியாருக்கு வழங்குவதை ஏற்க முடியாது. *விதி தளர்த்தல்: புதிய திருத்தத்தின்படி, பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நிலப்பரப்புத் தகுதி (100 ஏக்கரில் இருந்து மாநகரங்களில் 25 ஏக்கராக) தளர்த்தப்பட்டுள்ளது. *இட ஒதுக்கீட்டுக் குறைப்பு: இந்த சட்டத் திருத்தம், தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டு விகிதத்தைக் குறைத்து, சமூக நீதியை ஊனமுறச் செய்யும். *கல்வி வணிகமயமாதல்: ‘Non-profit-organisation’ (லாப நோக்கற்ற அமைப்பு) என்ற பதம் நீக்கப்பட்டுள்ளது. இது தனியார் நிர்வா கங்கள் கல்வியை வியாபாரமாக்கி, கட்டணக் கொள்ளையில் ஈடுபட வழிவகுக்கும்.