பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சாலை வசதி அமைக்க கோரி அடைக்காக்குழியில் சிபிஎம் போராட்டம்
குழித்துறை, அக்.19- பள்ளி,கல்லூரி மாணவர்களுக்காக சாலை வசதி செய்துதரக் கோரி அடைக்காக்குழியில் சிபிஎம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. குமரி மாவட்டம்,முஞ்சிறை ஒன்றியம் அடைக்காக்குழி ஊராட்சி 2022-23 ஏஜிஏஎம்டி (AGAMT) திட்டத்தில் ரூ/ 14 லட்சம் மதிப்பீட்டில் பயன்பாட்டில் இருந்த கடுவாக்குழி அங்கன்வாடி மையம் இடிக்கப்பட்டு புது கட்டிடம் கட்டப்பட்டது .இது திறப்பு விழா காணும் முன்பே தரமற்ற பணி காரணமாக கட்டிடம் வெடித்தும் பிளந்தும் அபாயநிலையில் உள்ளது. குழந்தைகள் 3 வருடங்களாக வாடகை கட்டிடத்தில் பயின்று வருகிறார்கள். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. 2 ஆண்டுகளுக்கு முன் தலா ரூ. 16 லட்சம் செலவில் கட்டப்பட்ட 3 ஓஎச்டி (OHT) க்கள் நீரேற்றம் செய்யப்படாமல் பாழடைந்து காணப்படுகிறது .மக்கள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அடைக்காக்குழி சாலை சேதமடைந்து மக்கள் நடமாட முடியாதவாறு அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. பேருந்துகள் ஓடிக்கொண்டிருந்த தளச்சான்விளை பாத்திமாநகர் சாலையில் பாங்கோடு அருகே தங்க நாற்கரை சாலைக்கென பாலம் கட்ட சாலை துண்டிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் கடந்தும் பாலம்கட்டும் பணியை நிறைவு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனர் .இதனால் போக்குவரத்து இல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டித்தும் சாலை வசதி செய்துதரக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அடைக்காக்குழி வட்டாரக்குழு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அடைக்காக்குழி ஜங்சனில் நடைபெற்ற போராட்டத்திற்கு வட்டாரக்குழு உறுப்பினர் லெனின் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் ஆர்.செல்லசுவாமி துவக்கி வைத்து உரையாற்றினார். வட்டாரச்செயலாளர் ரெஜி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் மேரி ஸ்டெல்லா பாய் ,வட்டாரக்குழு உறுப்பினர் ஜெஸ்டின்ராஜ் ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய மோகனன் நிறைவுரையாற்றினார். போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.