tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

குடிபோதையில் தகராறு:  தொழிலாளி அடித்துக் கொலை

தஞ்சாவூர், அக். 19-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா, மதுக்கூர் அருகே உள்ள துவரங்குறிச்சி மணியாரன் கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன்(39. லாரிகளில் தேங்காய் லோடு ஏற்றும் தொழிலாளியான இவர், சனிக்கிழமை இரவு பேராவூரணி அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு, மோட்டார் சைக்கிளில் துவரங்குறிச்சி  செல்லும் வழியில் பள்ளத்தூர் ஆற்றுப்பாலத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார்,  அப்போது, அங்கு குடி போதையில் வந்த பள்ளத்தூரைச் சேர்ந்த செந்தில் (33) என்பவர் நீ யார், எந்த ஊர் இங்கு வந்து என்ன செய்கிறாய் எனக் கேட்டுள்ளார்.  இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் அருகில் கிடந்த கட்டையை எடுத்து பாண்டியராஜன் தலையில் செந்தில் தாக்கியுள்ளார்.  இதில், சம்பவ இடத்திலேயே பாண்டியராஜன் பலியானார்.  இதுகுறித்து, சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் தண்டாயுதபாணி வழக்குப் பதிவு செய்து பாண்டியராஜன் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, செந்திலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த  பெண்ணிடம் நகை பறிப்பு

தஞ்சாவூா், அக். 19-  தஞ்சாவூர் அருகே உள்ள அற்புதாபுரம் குருங்குளம் மேலப்பாதி பகுதியைச் சேர்ந்த குழந்தைசாமி என்பவரது மனைவி ஆரோக்கிய மேரி(65). இவர் அக்.18 ஆம் தேதி காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.  அப்போது நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஆரோக்கிய மேரி கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். அதிர்ச்சி அடைந்த ஆரோக்கிய மேரி இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.  அதன்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.  இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

வாஞ்சி மணியாச்சி- திருச்செந்தூர் இடையே பாலக்காடு எக்ஸ்பிரஸ் அக்.22,23 தேதிகளில் ரத்து

திருநெல்வேலி, அக்.19- நெல்லை  ரெயில்வே பணிமனையில் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் 22, 23 தேதிகளில் ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. நெல்லை வழியாக செல்லும் பாலக்காடு-திருச்செந்தூர்  வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண் 16731) வரும் 22, 23  தேதிகளில் வாஞ்சி மணியாச்சி- திருச்செந்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதாவது காலை 6.10 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் இந்த ரெயில், குறிப்பிட்ட 2 நாட்கள் வாஞ்சி மணியாச்சியுடன் நிறுத்தப்படும். மேலும் இந்த 2 நாட்கள் வாஞ்சி மணியாச்சியில் இருந்தே மதியம் 2 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். மேற்கண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

போதை பொருள் பயண்படுத்தினால் வாழ்நாள் சிறை: கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

நாகர்கோவில், அக். 19- போதை பொருட்கள் பயன் படுத்தினால் சிறையில் இருந்து வெளியே வரவே முடியாது என மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு இணைந்து, அறிஞர் அண்ணா கல்லூரியில் போதை ஒழிப்பு, சமூக நீதி, மனித உரிமைகள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தின. இந்நிகழ்வில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் சுபாகரன் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் கலைவாணன் தலைமையுரை ஆற்றினார். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின், மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் சிவசங்கரன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவ மாணவிகளுக்கு பொது அறிவு வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரியில் சிறப்பாக பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் பரிசுகள் வழங்கினார்.