tamilnadu

விதை தரம் அதிகரிக்க பயன்படும் நுண்ணுயிர் விதை நேர்த்தி முறைகள் விதை ஆய்வு இயக்குனர் அறிவுறுத்தல்

விதை தரம் அதிகரிக்க பயன்படும்  நுண்ணுயிர் விதை நேர்த்தி முறைகள் விதை ஆய்வு இயக்குனர் அறிவுறுத்தல்

பாபநாசம், அக். 19-  விதை தரம் அதிகரிக்க பயன்படும் நுண்ணுயிர் விதை நேர்த்தி முறைகள் குறித்து தஞ்சாவூர் விதை ஆய்வு இயக்குநர் சுஜாதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விவசாயத்திற்கு மூலாதாரமே நல்ல தரமான விதைகளாகும். தரமான விதைகளை பயன்படுத்துவதன் மூலம் 15-20 சதவீதம் மகசூலை அதிகரிக்க முடியும். ஒரு தரமான விதையென்பது நல்ல முளைப்புத் திறனையும் வீரியத்தையும் நல்ல விதை நலம் கொண்டிருப்பதாகும். விதை நலம் என்பது விதைகள் பூச்சி சேதம், பாக்டீரியா மற்றும் புஞ்சை போன்ற நுண்ணுயிரிகளால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அதனால், விதை மூலம் பரவும் நோய்களை தவிர்க்கலாம். எனவே, விதைகளை விதை நேர்த்தி செய்வது அவசியமாகும். விதை நேர்த்தி என்பது பூச்சிக்கொல்லி, பூஞ்சாண கொல்லி அல்லது உயிர் உரங்கள் போன்றவற்றை விதைகளின் மேல் பூச்சு செய்வதாகும். விதை நேர்த்தியின் பின்னர், விதைகளின் முறைப்புத்திறனை மேம்படுத்தப்படுகிறது. விதை மூலம், மண் மூலம் பரவும் நோய் மற்றும் சேமிப்பின் போது விதைகளை தாக்கும் பூச்சிகளில் இருந்து காக்கிறது. பயிர்களின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கச் செய்கிறது. பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கிறது. விதை நேர்த்தியும் நுண்ணுயிர்களும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியம் பயிர்களுக்குத் தேவையான தழைச்சத்தை காற்றிலிருந்து கிரகித்து பயிர்களுக்கு கிடைக்கச் செய்கின்றன. அசோஸ்பைரில்லம் விதையின் முளைப்புத்திறன் அதிகரிப்பதோடு பயிர்களுக்கு ஓரளவு வறட்சியை தாங்கும் தன்மையை அளிக்கிறது. ஒரு ஏக்கருக்கு தேவையான விதை நெல்லுக்கு 200 கிராம் உயிர் உரத்துடன் 300-400 மி.லி ஆறிய கஞ்சி தெளித்து கலந்து அரை மணி நேரம் நிழலில் உலர்த்திய பின்பு விதைக்க வேண்டும். அதேபோல், 50 மிலி திரவ உயிர் உரத்தை  200-400 மி.லி ஆறிய கஞ்சியுடன் 1 ஏக்கருக்கான விதையை கலந்து 30 நிமிடம் நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்கவும். சூடோமோனஸ் நுண்ணுயிர்களை பயன்படுத்துவதனால் விதை மற்றும் மண் மூலம் பரவக்கூடிய நோய்களை கட்டுப்படுத்தலாம்.  மேலும், இவை பயிர்களுக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்து பயிர்களை பாதுகாக்கின்றது. ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் ஆறிய கஞ்சி தெளித்து கலந்து அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி பின்பு விதைக்க வேண்டும். டிரைக்கோடெர்மா விரிடி பயிர்களில் மண், நீர் மற்றும் விதை மூலம் பரவக்கூடிய வேர் அழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் இயற்கை பூஞ்சாணக்கொல்லியாகும். மேலும் வேரினை பலப்படுத்தி வேரின் செயல்திறனை அதிகரிக்கிறது. ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியை நீர் தெளித்து கலந்து அரை மணி நேரம் நிழலில் உலர்த்திய பின்னர் விதைக்க வேண்டும். இவ்வாறு விதை நேர்த்தி முறைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.