tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

பொதுமக்களிடம் போலீசார்  அன்பாக பேச வேண்டும் காரைக்குடி ஏஎஸ்பி அறிவுறுத்தல்

சிவகங்கை, அக்.19-  பொதுமக்களிடம் போலீசார் அன்பாக பேச வேண்டும் என்று காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் புனியா அறிவுறுத்தினார். காரைக்குடி தேவர் சிலையிலிருந்து பெரியார் சிலை வரை போலீசாரின் கொடி அணிவகுப்பு நடை பெற்றது. தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ்வெங்கட் வட்ஸ், காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்புனியா, மாநகராட்சி ஆணையர் சங்கரன், வட்டாட்சியர் ராஜா மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் பங்கேற்றனர். இதில் ஏஎஸ்பி ஆஷிஷ்புனியா  போலீசாரிடம் பேசுகையில், போலீசார் யாரையும் அடிக்கக் கூடாது. ஏதாவது பிரச்சனை ஏற் பட்டால் உடனடியாக காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க வேண்டும். பொது இடங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தேவைப் பட்டால் மட்டுமே செல்போனை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

விருதுநகர் மாவட்டத்தில்  ஒரே நாளில் 730  மி.மீ மழை

விருதுநகர், அக்.19- விருதுநகர் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்துள்ளது. அதன் விபரம் வருமாறு :  கோவிலாங்குளம் அதிகபட்சமாக 135.40 மி.மீ,அருப்புக்கோட்டை 115.50,  சிவகாசி, இராஜபாளையம் தலா 110, வெம்பக்கோட்டை 76, திருவில்லிபுத்துர் 60.60, வத்ராப் 45.40, காரியாபட்டி 35, திருச்சுழி 15, விருதுநகர் 13, பிளவக்கல் 8, சாத்தூர் 6 மி.மீ என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதன் மொத்த அளவு 729.90 மி.மீ ஆகும்.

வாலிபரைத் தாக்கிய தனியார்  நிறுவனத்தினர் மீது வழக்கு பதிவு 

குழித்துறை, அக்.19- லோன் கட்ட தவறியதால்  தனியார் நிதி நிறுவனத்தினர் வாலிபரை தாக்கினர்.  குமரி மாவட்டம், பாகோடு மதிக்காவிளையை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (37). கூலித்தொழிலாளியான இவர், தனியார் நித நிறுவனத்தில் 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இவரது கை முறிந்தது.இதனால் அவரால் லோன் பணம் கட்ட முடியவில்லை. இந்நிலையில் தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த மாங்கோட்டை சேர்ந்த ரெஜிஸ் (23) மற்றும் விஜன் ஆகியோர் சந்தோஷ் குமார் வீட்டிற்குச் சென்று பணம் செலுத்துமாறு கேட்டு தகறாறில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கினர்.  இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் ரெஜிஸ் மற்றும் விஜயன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே 360 பவுன் நகை  மோசடி வழக்கில் தம்பதி கைது

பெரம்பலூர், அக். 19-  பெரம்பலூர் அருகே 360 பவுன் நகை மோசடியில் ஈடுபட்ட தம்பதியை மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், லப்பைக்குடிக்காடு ஜமாலியா நகரைச் சேர்ந்தவர் பசீர் அஹமத் மனைவி உம்மல் பஜரியா (53). பசீர் அஹமத் வெளிநாட்டில் வசித்து வருவதால், தனது 3 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது மாடி வீட்டில் பஜிலுல் ரஹ்மான், அவரது மனைவி பர்வீன்பானு ஆகியோர் தனது குழந்தைகளுடன் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் வாடகைக்கு இருந்துள்ளனர். உம்மல் பஜரியாவும், பர்வீன் பானுவும் நெருங்கி பழகியதால், அடிக்கடி பணம் மற்றும் நகை கொடுக்கல் வாங்கல் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு தனது கணவர் பஜிலுல் ரஹ்மான் செய்து வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தொழில் செய்வதற்காகவும், அதிலிருந்து கிடைக்கும் வருவாய் மூலம் நகையை திருப்பி கொடுத்துவிடுவதாகவும் கூறி, உம்மல் பஜரியாவிடமிருந்து 360 பவுன் நகையை பர்வீன் பானு பெற்றுள்ளார். நகையை பெற்றுக்கொண்டு திரும்ப கொடுக்கவில்லை என தெரியவருகிறது.  நகையை திருப்பித் தர தொடர்ந்து வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த பஜிலுல் ரஹ்மான், பர்வீன்பானு, அவர்களது மகள்கள் அப்ரீன் பானு, நஸ்ரீன் பானு, உறவினர் ஹியத் பாஷா ஆகியோர் உம்மல் பஜரியாவை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.  இதுகுறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் உம்மல் பஜரியா அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், பஜ்லுல் ரஹ்மான் (52), அவரது மனைவி பர்வீன் பானு (46) ஆகியோரை மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர், புதன்கிழமை இரவு கைது செய்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.