குடிநீருடன் கலந்து வரும் கழிவுநீர் நகராட்சி அலுவலகம் முற்றுகை
விருதுநகர், ஜன.27- விருதுநகரில் குடிநீருடன் கழிவுநீரும் சேர்ந்த வருவ தால் பாதிப்படைந்த பொது மக்கள் நகராட்சி அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் நகராட்சி 7 ஆவது வார்டுக்கு உட்பட்டது ஏ.டி.பி. காம்பவுண்டு. இங்குள்ள 3 வது தெருவில் சாலையின் நடுவே தனிநபர் ஒருவர் செப்டிக் டேங்கை கட்டியுள்ளார். இதற்கு அப்பகுதி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரி வித்தும் அகற்றவில்லை. இதனால், கழிவுநீர், அருகில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் புகுந்துள்ளது. குடிநீர் விநியோகம் செய்யும் போது நீண்டநேரம் கழிவுநீர் வருகிறது. இதனால், குழந்தைகளுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெகுண்டெழுந்த பொதுமக்கள் செவ்வாயன்று காலை நகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து ஆணையாளரின் அறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு, ஆணையாளர் விஜய குமார், சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஓரிரு நாட்களில் பிரச்சனை சரி செய்யப்படும் என உறுதி யளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
திருவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டங்கள்
திருவில்லிபுத்தூர், ஜன.27- 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் உத்தரவின் படி திருவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் உள்ள 29 ஊராட்சி களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. மல்லி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். அத்திகுளம், தேவேந்திரி, விழுப்பனூர், பிள்ளையார்நத்தம், திரு வண்ணாமலை, கலங்கா பேரி உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் இந்த கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.
நமது தமிழ் மொழி, இனத்தை அழிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன: அமைச்சர் தங்கம் தென்னரசு
விருதுநகர், ஜன.27- நமது தமிழ் மொழியையும், தமிழி னத்தையும் பல்வேறு வழிகளில் அழிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தமிழ் நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். விருதுநகரில் மொழிப் போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அவர் பேசுகையில், “முதலில் மொழியை அழிப்பார்கள். அதன் பின் இனத்தை அழிப் பார்கள். இறுதியில் நம்மையே அழிப்பார்கள். அதனால்தான் நமது மொழியும், நமது உரிமை யும் காக்கப்பட வேண்டும்” என்றார். தில்லியில் இருந்து பாஜக தலைவர்கள் பசப்பான வார்த்தைகளை பேசுவதாக குறிப்பிட்ட அவர், “பிரதமர் மோடி, தமிழைப் போல இனிதான மொழி எங்கும் இல்லை என்று சொல்கிறார். காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா சங்கமம் என விழாக்கள் நடத்துகிறார். ஐநா சபையில் திருவள்ளுவரை மேற்கோள் காட்டி திருக்குறளை பேசுகிறார். ஆனால், தமிழக வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி வழங் கப்படுகிறது? தமிழுக்கு வழங்கப்படுவது 800 கோடி ரூபாய் மட்டுமே. சமஸ்கிருதம் உள் ளிட்ட பிற மொழிகளுக்கு 15,000 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது” என குற்றம்சாட்டி னார். இந்த கூட்டத்தில் பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, “கபீர்தாஸ் எழுத்துப்படி, இந்தி மொழி தோன்றி 450 ஆண்டுகளே ஆகின்றன. ஆனால் தமிழ் மொழி 5,300 ஆண்டுகளுக்கு முந்தையது” என்றார். மேலும் அவர், “வெளிநாடுகளில் உள்ள விமான நிலையங்களில் தமிழ் மொழியில் அறிவிப்புகள் ஒலிக்கின்றன. ஆனால், சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, சேலம் போன்ற தமிழக விமான நிலை யங்களில் தமிழில் அறிவிப்புகள் இல்லை. உலகம் முழுவதும் தமிழை பாராட்டும் பிரத மர் மோடி, அதற்கான அதிகாரபூர்வ ஆணை ஒன்றையும் வெளியிடவில்லை” என விமர் சித்தார்.
குடியிருப்பு அருகே கல்குவாரி தடை செய்யக் கோரி கருப்புக் கொடி போராட்டம்
வெம்பக்கோட்டை, ஜன.27- விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை அருகே ஏ.லட்சுமிபுரத்தில் குடி யிருப்புகள் அருகே தனியார் கல்குவா ரிக்கு அனுமதி வழங்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி ஊர் மக்கள் கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து வீட்டில் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தினர். வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது ஏ. லட்சுமிபுரம் கிராமம். இங்கு குடியிருப்புகள் அருகே கல்குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதனால், விவசாய நிலங்கள், குடியிருப்புகள் உள்ளிட்டவை பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது. எனவே, அனுமதியை ரத்து செய்யக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பலகட்ட போராட் டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகமானது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், குடியரசு தினத்தன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தை புறக்க ணித்து வீடுகளிலும், தெருக்களிலும் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.