tamilnadu

அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.சி./எஸ்.டி. சிறப்பு நீதிமன்றங்கள்!

அனைத்து மாவட்டங்களிலும்  எஸ்.சி./எஸ்.டி. சிறப்பு நீதிமன்றங்கள்!

தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

சென்னை, மே 15 - அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.சி.-எஸ்.டி. சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க  வேண்டும் என்று, தீண்டாமை ஒழிப்பு  முன்னணி, தமிழக அரசை வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் 14.05.25 அன்று சென்னையில் நடை பெற்றது. கூட்டத்தில் மாநில சிறப்புத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன், மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ், பொருளாளர் இ. மோகனா உள்பட மாநிலத் தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலை வழக்குகளும், எஸ்.சி.-எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் நீண்டகாலமாக விசாரணை நிறைவடையாமல் உள்ளன. எஸ்.சி.-எஸ்.டி. வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையிலான வழக்குகள் சில மாதங்களில் முடிக்கப்பட வேண்டுமென சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால் 10 ஆண்டுகளைக் கடந்தும் தமிழ்நாட்டில் இவ்வழக்குகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் 21 தனியுறு சிறப்பு நீதிமன்றங்களில் 5,929 வழக்குகளும், 15 அமர்வு நீதிமன்றங்களில் 1,511 வழக்குகளும் என 7,440 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருக்கின்றன. இதில் 7,388 வழக்குகள் ஆரம்ப நிலை நீதி விசாரணையில் இருக்கின்றது. இத்தகைய தாமதமும் குற்றம் நடைபெற காரணமாக இருக்கின்றது. தோராயமாக ஆண்டு தோறும் 2,000 வழக்குகள் எஸ்.சி.-எஸ்.டி. வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சில நீதிமன்றங்களில் நீதிபதியும், வழக்கறிஞரும் இல்லாத நிலை தொடர்கிறது. இதனை உடனடியாக சரி செய்திட வேண்டும்.  பாதிக்கப்பட்டவர்கள் கோருகின்ற அனைத்து வழக்குகளிலும் அரசு சிறப்பு வழக்கறிஞர்களை மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக நியமித்திட வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.