சாதனைகள் செய்துவரும் சவளக்காரன் பள்ளிக் குழந்தைகள்!
நீடாமங்கலம் சுப்பையா
மன்னார்குடி - திருவாரூர் மாநில நெடுஞ்சாலையில் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊராட்சி தான் சவளக்காரன். இங்கு ஆதிதிராவிடர் நலத் துறையின் மேனிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியின் மாணவர்கள் அனைவருமே ஏழை விவசாய தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த வர்கள். இந்தப் பள்ளியின் மாணவ, மாணவிகள் தான் கால்பந்து விளையாட்டில் கொடி கட்டிப் பறக்கின்றனர். நம்மால் சேகரிக்க முடிந்த இப்பள்ளி பெண் குழந்தைகளின் கால்பந்து சாதனைகளை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. 2012-2013 ஆண்டில் 14 வயதிற்கு உட்பட்டோர் போட்டியில் மாவட்டத்தில் முதலிடம், 2013-2014 ஆண்டில் மீண்டும் மாவட்ட அளவில் முதலிடம், கடற்கரை கால்பந்து போட்டியில் மாவட்டத்தில் முதலிடம், 2014-2015 ஆண்டில் மீண்டும் கால்பந்து போட்டிகளில் மாவட்டத்தில் முதலிடம், மண்டல அளவிலான 19 வயதிற்குட்பட்டோர் உலக உடல் திறனாய்வு போட்டியில் பள்ளி மாணவி எஸ்.பிரியதர்ஷினிக்கு ரூபாய் 6 ஆயிரம் பரிசு, 2015-2016 ஆண்டிற்கான மாநில அளவில் மூன்றாம் இடம், 2016-2017 ஆண்டில் தேசிய அளவில் மணிப்பூரில் நடைபெற்ற சீனியர் கிரேட் போட்டிகளில் பத்தாம் வகுப்பு மாணவி பிரிய தர்ஷினி பங்கேற்பு - வெண்கல பதக்கம். கடற்கரை கால்பந்து போட்டியில் மாநில அளவில் இரண்டாமிடம். அதே ஆண்டில் கேல் இந்தியா 14 வயதிற்குட்பட்டோர் கால்பந்து போட்டியில் எஸ்.பிரியதர்ஷினி பங்கேற்பு, 400 மீட்டர் தடகளம் எட்டாம் வகுப்பு எஸ்.சுந்தரி மாநிலத்தில் முதலிடம், அதே ஆண்டில் தென்னிந்திய அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளில் தமிழக அணி தங்கப்பதக்கம் - எஸ்.பிரியதர்ஷினி பங்கேற்பு, மண்டல அளவில் உலக உடல் திறன் போட்டி களில் எம்.கவிதா ரூபாய் 6000 பரிசு, மாநில அளவில் தடகள போட்டிகளில் எஸ்.சுந்தரி, ஒன்ப தாம் வகுப்பு மாற்றுத் திறனாளி முதலிடம், 2017-2018 ஆண்டில் தடகளப் போட்டிகளில் 400 மீட்டர் மாநிலத்தில் முதலிடம் ஒன்பதாம் வகுப்பு மாற்றுத் திறனாளி எஸ். சுந்தரி, தேசிய அளவில் மகாராஷ்டிரா சீனியர் கிரேட் கால்பந்து போட்டிகளில் பி.கவிதா, ஆர்.ஹேமலதா, பி.காவியா பங்கேற்பு, முதலமைச்சர் கோப்பை மாநில அளவில் மூன்றாம் இடம் - பரிசுத் தொகை ரூபாய் ஆறு லட்சம். பத்தாம் வகுப்பு மாணவி மாற்றுத் திறனாளி எஸ். சுந்தரி நானூறு மீட்டர் தடகளப் போட்டிகளில் மாநில அளவில் முதல் இடம், எட்டாம் வகுப்பு மாணவி எம். கவிதா மண்டல அளவில் உலக உடற்திறன் போட்டி களில் 6 ஆயிரம் பரிசு, 2018-2019 ஆண்டில் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற தமிழக அணியில் எஸ்.பிரியதர்ஷினி, பி. காவியா பங்கேற்பு, கேலோ இந்தியா அசாம் மாநிலம் எஸ்.பிரியதர்ஷினி பங்கேற்ற அணிக்கு வெள்ளிப் பதக்கம். 19 வயதிற்குட்பட்டோர் போட்டிகளில் மாநில அளவில் மூன்றாமிடம், தேசிய அளவில் ஜார்க்கண்ட்டில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோர் போட்டிகளில் வி.காயத்ரி தேவி பங்கேற்பு, திரிபுராவில் நடைபெற்ற 17 வயதிற்கு உட்பட்டவர் போட்டியில் எம்.கவிதா பங்கேற்பு, தேசிய அளவில் சப் ஜூனியர் பிரிவில் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளில் எஸ்.பிரியதர்ஷினி, எம்.கவிதா பங்கேற்பு , 2021-2022 அசாம் மாநிலத்தில் ஜூனியர் கால்பந்து போட்டியில் மார்க்கதர்ஷி, எஸ்.காயத்ரிதேவி பங்கேற்பு, 2022-2023 தேசிய அளவில் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா கால்பந்து போட்டி களில் தங்கம் வென்ற தமிழக அணியில் எம்.கவிதா பங்கேற்பு, தர்மபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக அணியில் பங்கேற்பு , 2023-2024 மாநில அளவில் கோவையில் நடைபெற்ற முத லமைச்சர் கோப்பை கால்பந்து போட்டிகளில் சவளக்காரன் பள்ளியிலிருந்து மட்டும் 12 மாணவி கள் பங்கேற்பு - வெள்ளி பதக்கம். பஞ்சாபில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோர் போட்டிகளில் ஆர்.மார்க்கதர்ஷி, பி.சிந்துஜா, பி.கோதாவரி, ஜி.புவனேஸ்வரி பங்கேற்பு, தேசிய அள வில் ஒரிசாவில் நடைபெற்ற ஜூனியர் கால்பந்து போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் - பங்கேற்றோர், என்.இனியா, கே.ஆசிகா. பஞ்சாபில் நடைபெற்ற சப் ஜூனியர் போட்டிகளில் ஒன்பதாம் வகுப்பு டி.தாமினி பங்கேற்பு, கேலோ இந்தியா தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் தமிழ்நாட்டு அணியில் ஏழாம் வகுப்பு படிக்கும் ஆர்.மார்க்கதர்ஷி பங்கேற்பு, 2024 - 2025 ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் போட்டிகளில் தங்கம் பெற்ற அணியில் கே.ஆஷிகா, என்.இனியா, வி.நிஷாந்தி, பி. சோனியா காந்தி, ஆர்.காவியா பங்கேற்பு. தேசிய அளவில் கல்கத்தாவில் நடைபெற்ற சப் ஜூனி யருக்கான போட்டிகளில் எட்டாம் வகுப்பு டி.பிருந்தா பங்கேற்பு, மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற சீனியர் கிரேட் போட்டிகளில் எம்.தர்ஷிகா, எல்.ஜெரினா, எஸ்.கானப்பிரியா பங்கேற்பு, மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியில் பள்ளியின் ஏழு மாணவிகள் பங்கேற்பு, 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான மணிப்பூர் இம்பால் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் பெற்ற தமிழக அணியில் என்.இனியா, கே.ஆஷிகா, பி.கோதாவரி , பி. கீர்த்திகா, வி. நிஷாந்தி, சி.மாதுஷா பங்கேற்பு, பீகாரில் நடை பெற்ற கேல் இந்தியா போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் - என். இனியா, கே.ஆஷிகா பங்கேற்பு - இந்தப் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது.
ஜெர்மன் பயணிகள் பாராட்டு
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் வந்த ஜெர்மனி யின் குழு ஒன்று தஞ்சையில் இருந்து திருவாரூர் வேளாங்கண்ணி நாகப்பட்டினம் காரைக்கால் செல்லும் வழியில் தற்செயலாக இந்த குழந்தை களின் கால்பந்து விளையாட்டை பார்க்க நேரிட்டது. முதல் நாள் மழையினால் ஈரமான வயல்களைக் கடந்து அந்த சிறிய விளையாட்டுத் திடலை அவர்களால் நெருங்க முடியவில்லை. டெலி போட்டோ லென்ஸ் வழியாக அவர்களை கவனித்த பான் பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத்துறை பயிற்றாசிரியர் ஒருவர் நம்மிடம் ஆச்சரியத்துடன் பேசியிருந்தார். தீக்கதிரிலும் அதன் உள்ள டக்கம் கட்டுரையாக வெளி வந்திருந்தது. இந்த மாணவர்களில் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். காலணிகள் உடுப்புகள் வாங்குவதற்கும் சத்துணவு எடுத்துக் கொள்வதற்கும் வசதியில்லாதவர்கள் என்று கூறிய போது அவர்கள் மலைத்து நின்றனர். இவர்கள் எல்லாம் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த வர்கள், இயல்பாகவே அவர்களிடம் நீண்ட நேர தொடர் போராட்டங்களை தாக்குப் பிடிக்கும் உள்ளுரம் (ENDURANCE and STAMINA ) நிறைய இருக்கும். இப்போது இந்தப் பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, ஊக்க அலவன்சுகள், முழுமையான மைதானம், முறையான தொடர் பயிற்சிகள் அளிக்கப்பட்டால் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மிக உயரத்திற்கு செல்ல முடியும். உயர் தரம் என்று கூட வேண்டாம், பரப்பளவில் கால்பந்து விளையாட்டிற்கு போதுமான மைதானம் உடனே அவசியம் வேண்டும் என அந்த ஜெர்மனி நாட்டு ஸ்போர்ட்ஸ் ட்யூட்டர் அப்போது கூறினார்.
உதிரத்தில் கலந்துள்ள விளையாட்டு
இன்னும் அந்த பள்ளிக் குழந்தைகளுக்கு முழுமையான விளையாட்டு மைதானம் கன விலேயே உள்ளது. முழுமையான அணி விளையாட்டு பயிற்சி எடுக்க மாலையில் பள்ளி முடிந்து அப்படியே அரசு பேருந்துகளில் ஏறி மன்னார்குடி அரசு மருத்துவமனை அருகில் இறங்கி அங்கிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பின்லே மைதானத் திற்கு நடந்தே வருகிறார்கள். இவர்களில் பலர் காலை உணவோடு சரி. மதியம் எல்லோரும் சாப்பிடுவதில்லை. இதற்கு காரணம் இவர்களுக்கு மைதானம் இல்லாததுதான். தொடர்ந்து தினமும் 45 நாட்கள் அவர்களை கவனித்தோம். அவர்கள் சுவாசத்திலும் உதிரத்திலும் கால்பந்து விளையாட்டு கலந்திருப்பதை அறிய முடிந்தது. பெண்கள் கால்பந்து போட்டிகளில் சவளக்காரன் பள்ளிதான் அகில இந்திய அளவில் கிராமப்புற மேனிலை பள்ளிகளில் மிக உயர்நிலையில் முதன்மையாக உள்ளது என்பதை அறிந்த போது பிரமிப்பாக இருக்கிறது. இப்பள்ளி யிலிருந்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகள் அங்கும் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பிரகாசிக்கின்றனர்.
கனவாகவே இருக்கும் விளையாட்டு மைதானம்
மன்னார்குடி - திருவாரூர் சாலையில் விவசாய நிலங்களில் ஏராளமான நகர்கள் உருவாகி ரியல் எஸ்டேட் வணிகம் கன ஜோராய் நடைபெற்று வருகின்றது. ஆனால் இவர்களது விளையாட்டு மைதான கனவு தான் அப்படியே உள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் இப்பள்ளி மாணவிகள் பிரகாசிப்பதற்கு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் வி. முத்துக்குமார் தான் முழுமுதல் காரணமாக இருக்கிறார். அவர் பகுதி நேர ஆசிரியர் என்று அறிந்த போது இன்னும் ஆச்சரியமாக இருந்தது. சுமார் 20 பள்ளி வீராங்கனைகள் இந்தியாவின் எல்லா மாநில களங்களிலும் பள்ளிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் போது அடுத்த அணி குழந்தை களுக்கு பயிற்சி அளித்து உயர்த்தும் அரிய செயலை தொடர்ந்து செய்து வருகிறார். உயர்கல்விக்கு சென்ற சீனியர் வீரர்கள் மைதானத்திற்கு வந்தால் இப்பள்ளி இளம் வீரர்கள் காட்டும் மதிப்பும், இவர்களது ஆசிரியர் முத்துக்குமார் வந்தவுடன் மைதானத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சிட்டுக்குருவிகளைப் போல பறந்து வந்து கட்டுப்பாட்டுக் கூர்மையுடன் வரிசையாக நிற்பதும் இவர்களின் மிக உயர்ந்த விளையாட்டு கலாச்சாரத்தை உணர்த்துகிறது. அர்ப்பணிப்பு, ஆர்வம், உழைப்பு, தொடர் முயற்சி கள் மூலம் சாதாரண கிராமப்புற மாணவர்களின் விளையாட்டிற்காக வாழ்க்கைக்காக பாடுபட்டு வரும் இப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் வி.முத்துக்குமார், சுதந்திர தினம் போன்ற விழாக்களில் பள்ளிக்கல்வித் துறையால் மாவட்ட நிர்வாகத்தால், பாராட்டப்பட வேண்டியவர் என விளையாட்டு ஆர்வலர்கள், மக்கள்கருதுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றிய செயலாளர் கே.ஜெயபால் கூறும்போது, இனியும் தாமதம் இன்றி விளை யாட்டு மைதானத்திற்கான இடத்தை இறுதி செய்ய மாவட்ட நிர்வாகமும் பள்ளிக்கல்வித் துறையும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையே சவளக்காரன் மக்கள் மட்டுமல்ல, திருவாரூர் மாவட்ட விளையாட்டுத் துறையினரும் எதிர்பார்க்கிறார்கள்.