tamilnadu

img

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: 9 போலீஸாரும் குற்றவாளிகள் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், கைதான 9 போலீஸாரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று (மார்ச் 23) அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் கடையைத் திறந்து வைத்ததாகக் கூறி போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் இருவரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதையும் அதிர வைத்தது.

சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீஸார் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை சிகிச்சையிலிருந்தபோது உயிரிழந்தார். சுமார் ஆறு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவில், நீதிபதி முத்துக்குமரன் இன்று முக்கியத் தீர்ப்பை வழங்கினார்.

தீர்ப்பின் போது நீதிபதி சுட்டிக்காட்டிய அதிர்ச்சித் தகவல்கள்:

“ஜெயராஜ், பென்னிக்ஸை அடிக்கும்போது, ‘நாம் அடித்துப் பழக ஒரு அப்பாவும், மகனும் கிடைத்துள்ளனர்’ எனப் போலீஸார் மிகக் கொடூரமாகப் பேசியுள்ளனர்.”

இருவரையும் மேசையில் படுக்க வைத்தும், கைகளைக் கயிற்றால் கட்டித் தொங்கவிட்டபடியும் போலீஸார் தாக்கியது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தடய அறிவியல் ஆய்வின்படி, அவர்கள் இருவரும் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதும், அவர்கள் மீது போலீஸார் போட்டது பொய்யான வழக்கு என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரத்தக் கறை படிந்த ஆடைகளை உறவினர்களிடம் கொடுத்து, அவற்றைக் குப்பைத் தொட்டியில் போடுமாறு போலீஸார் மறைக்க முயன்றுள்ளனர்.

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் காவலர்கள் முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை உள்ளிட்ட ஒன்பது பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் மார்ச் 30-ஆம் தேதி அறிவிக்கப்படும்.