“நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே “என நெஞ்சுயர்த்தி ஆதி சிவனையே நக்கீரன் எதிர்கொண்டது கற்பனைக் கதையாக இருக்கலாம். இதற்குக் களமாகத் தெரிவு செய்யப்பட்டது மதுரை. ஏனென்றால் அநீதி நிகழும் போது அதற்கு எதிராக ஆவேசம் கொண்டு எழும் துணிவு பெற்றவர்கள் மதுரை மக்கள். பூம்புகாரில் இருந்து புலம்பெயர்ந்து மதுரைக்கு வந்தவள் கண்ணகி. அங்கே சகல அதிகாரங்களோடும் ஆண்டு கொண்டிருந்தவன் பாண்டியன் நெடுஞ்செழியன் . இருப்பினும் தன் கணவன் மீது திருட்டுப்பழி சுமத்திக் கொன்றபோது “ தேரா மன்னா “ என கனல் தெறிக்க எழுந்து நின்றவள் கண்ணகி. இது மதுரை மண்ணின் மகத்துவம். இந்தப் பாரம்பரியத்தோடு கொள்கையில் உறுதி கொண்டு வெள்ளையனை விரட்டி அடிக்க நாடகக் கலை வடிவத்தைக் கையிலெடுத்த தியாகி விஸ்வநாததாஸ், கே.பி.ஜானகி அம்மாள் போன்று தனது ஆளுமையைக் கலை இலக்கிய வடிவில் வெளிப்படுத்தி வருபவர் எழுத்தாளர் சு.வெங்கடேசன். இந்தியாவின் தொழிலாளர்கள் விவசாயிகள் வர்க்க நலனுக்காக மாதர்கள், மாணவர்கள், வாலிபர்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்காகப் போராடித் தியாக உணர்வோடு வாழ்ந்து மறைந்த தோழர்கள் பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்ரமணியம், ஆர்.உமாநாத், கே.முத்தையா, பி.மோகன் ஆகியோரின் பாதையை அடியொற்றி வாழும் இலக்கணமாய்த் திகழ்பவர். விடுதலைப் போராட்ட வீரர் என் சங்கரய்யாவைப் பின்பற்றி நடைபோடுகின்றவர்.
வாலிபப் பருவத்திலேயே “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று பாரதி வழியில் கவிதைகள் புனைந்தவர். அது ஜெயலலிதா ஆட்சிக் காலம். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரின் போராட்டத்தை அடக்கி ஒடுக்க காவல்துறை கொடும் தாக்குதல் நடத்தியது. அப்போது இவர் எழுதிய கவிதை வரிகள் கனல் வரிகள்.“அடிமைகளே எங்கள் தோழர்கள் அவர்களின் அம்மாவிடம் காட்டுவார்கள்வீரத்தழும்புகளை நீங்கள் உங்கள் ‘அம்மா ‘விடம்காட்டுங்கள்சிதறிக்கிடக்கும் செருப்புகளைஇந்த ஆவேசம் அவரிடம் இன்றும் குறையவில்லை. திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலில் கார்த்திகை திருவிழாவை முன்வைத்து மலைமேல் இருக்கும் மசூதிக்கு சங்கிகள் அவமதிப்பு செய்த போது மதச்சார்பின்மையை உறுதியோடு பற்றி நின்று மதவெறி மாய பாடுபட்டவர்களில் ஒருவர்.உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் உயர்ந்து நின்ற போது அதைத் தரைமட்டமாக்கி சமத்துவத்திற்கு பாதை ஏற்படுத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் களப்பணியில் நின்றவர். பாப்பாபட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துகளுக்கு தலித் தலைவர்கள் வந்துவிடக் கூடாது என்பதற்குக் குறுக்கு வழி கண்டபோது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்கும் வரை ஓய மாட்டோம் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட வெற்றிக்குப் பாடுபட்டவர்களில் ஒருவர்.
இலங்கை தமிழர் வாழ்வுரிமைக்கும் தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்புக்கும் மாநாடுகள் நடத்திப் புதிய தடம் பதித்தவர். முற்போக்கு சிந்தனையாளர்களைப் பிற்போக்கு சங்கிகள் படுகொலை செய்த போதும் பெருமாள் முருகன் படைப்புக்கு தடை கோரியதோடு கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டிய போதும் சமஸ்கிருதமே அனைத்து மொழிகளின் தாய் என்று தமிழை மோடி அரசு புறக்கணித்தபோதும் முன்நின்று களம் கண்டவர். “புலி சேர்ந்து போகியகல்லளை போல ஈன்ற வயிறோ இதுவேதோன்றுவன் மாதோபோர்க்களத் தானே”என்று புறநானூற்று வீர மங்கை பாடியதற்கு இலக்கணமாக வாழ்ந்து கொண்டிருப்பவர். மன்னன் தவறு செய்தபோது அதனைத் துணிவோடு மறுத்துரைக்க அன்று நக்கீரன் இருந்ததுபோல்...முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, கார்ப்பரேட் அடிவருடிகள் அரசின் அவலங்களைத் துணிவுடன் மக்களவையில் அம்பலப்படுத்தி உண்மையை உலகுக்கு உரைக்க, காலத்தின் தேவையாய் மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகக் களம் காண்கிறார் சு. வெங்கடேசன். உண்மையாகவே மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க அவரின் தேர்வு மட்டுமே பயன்படும். - மயிலைபாலு