மதுரையின் ஒற்றுமை மரபைக் காக்க மத நல்லிணக்கப் பேரணி
மதுரை, டிச. 14- திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்தும், மாமதுரையின் பாரம்பரிய நல்லிணக்க மரபைப் பாதுகாக்க வலி யுறுத்தியும், மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் டிசம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை மதுரையில் அமைதி நல்லிணக்கப் பேரணி நடை பெற்றது. ராஜா முத்தையா மன்றம் அருகே தொடங்கிய இந்தப் பேரணி, உலகத் தமிழ் சங்கம் வரை சென்றது. இந்தப் பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே. பாலபாரதி, மக்கள் கண்காணிப்பகம் வழக்கறிஞர் ஹென்றி திபேன், மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், ஆன்மீக அமைப்பு கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திர ளாகக் கலந்துகொண்டனர். பேரணியில் உரையாற்றிய கே.பாலபாரதி, மதுரையில் காலங்கால மாக நிலவிவரும் அமைதி மற்றும் சகோதரத்துவத்தைப் பாராட்டினார். “மத நல்லிணக்கத்தைப் பாது காக்கும் அமைப்புகள் இங்கே வலு வாக உள்ளன. அந்த மரபைச் சீர்குலைக்கும் முயற்சிகள் எவரால் மேற்கொள்ளப்பட்டாலும், அதை மக்கள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும். வெளி மாநிலங்களைச் சேர்ந்த சில சமூக விரோத சக்திகள், ஆன்மீகத்தின் பெயரில் ஊடுருவி, மக்களிடையே பிளவினை ஏற்படுத்த முயல்கின்றனர். இத்தகைய சக்திகளை அனைத்து அமைப்பு களும் தனிமைப்படுத்த வேண்டும்” என்றார். தை மாதத்தில் வரும் திரு விழாக்களும், வழிபாடுகளும் மரபுப்படி அமைதியாக நடைபெற வேண்டும். மிக முக்கியமானது, இந்து–இஸ்லாமிய – கிறிஸ்தவ மக்களின் ஒற்றுமை. இந்த ஒற்றுமை தான் தமிழ்நாட்டின் உயிர் மூச்சு. வகுப்புவாத அரசி யலுக்கு நாம் பலியாகி விடக்கூடாது. மதுரை மக்கள் ஒன்றுபட்டு இதை முறியடிப்பார்கள் என்று எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றும் அவர் பேசினார். சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம் ஆகிய மதிப்புகளைப் பாது காக்க வேண்டும் என்ற உறுதியுடன் அமைதி நல்லிணக்கப் பேரணி நிறைவுற்றது.
