41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்திடுக! தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநாடு வலியுறுத்தல்
சேலம், டிச. 12- சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் ஒன்பதாவது மாநில மாநாடு, ஓமலூரில் ஸ்ரீ ரத்ன மஹாலில் வெள்ளியன்று துவங்கியது. இரண்டு நாள் மாநாட்டின் முதல் நாளில் ஒன்பதாவது மாநில பிரதிநிதித்துவ மாநாடு நடைபெற்றது. முன்னதாக, ஓமலூர் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு இருந்து பிரதிநிதிகளின் எழுச்சிமிக்க அணிவகுப்பு நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் வெ.அர்த்தனாரி இதனை துவக்கி வைத்தார். பிரதிநிதித்துவ மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் மா. பாலசுப்பிரமணியன் தலைமை ஏற்றார். அஞ்சலி தீர்மானத்தை மாநில துணைத்தலைவர் து.சிங்கராயன் முன்மொழிந்தார். வரவேற்புக் குழு தலைவர் பு.சுரேஷ் வரவேற்றார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் மு.செல்வராணி மாநாட்டை துவக்கி வைத்தார். பொதுச் செயலாளர் ஆ. அம்சராஜ் வேலை அறிக்கையையும், மாநில பொருளாளர் இரா.தமிழ் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். இதில், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களில் உயிர்நீத்தோரின் குடும்பத்திலிருந்து கருணை அடிப்படையில் பணி வழங்கக் காத்திருப்போருக்கு விரைந்து பணி வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திடுக! மாநில நெடுஞ்சாலை ஆணையத்தைக் கலைத்து, மாநில நெடுஞ்சாலைகளை அரசே ஏற்று பராமரிப்பு செய்திட வேண்டும். தனியார் முதலாளிகள் சுங்கச்சாவடி அமைத்து நெடுஞ்சாலைகளில் சுங்கவரி வசூலிப்பதை முறியடித்திட வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்குரிய ஊதிய மாற்றம், தர ஊதியம் பெற்றிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்க பொதுச் செயலாளர் ப.வீரமணி, சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநில துணைத்தலைவர் எஸ்.கே. தியாகராஜன், தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் இரா.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மேலும், தமிழ்நாடு சாலை ஆய்வாளர் சங்க பொதுச் செயலாளர் டி. திருமுருகன், மாநில தொழிற்பயிற்சி அலுவலர் சங்க மாநில பொருளாளர் நா. திருநாவுக்கரசு, டிஎன்ஜிஏபிஏ மாநிலச் செயலாளர் கி.கிரிராஜன், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்க மாநில இணை செயலாளர் மு. ரமேஷ் குமார், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்க முன்னாள் மாநில தலைவர் சு. கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் மு. அன்பரசு மாநாட்டில் பங்கேற்றார். கருத்தரங்கம் மாநாட்டின் ஒரு பகுதியாக, ஓமலூர் காந்தி சிலை முன்பு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் செ. முத்து கண்ணன் ‘எல்லாம் மாறும் உழைப்போர்க்கு’ என்ற தலைப்பிலும், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ. சம்சீர் அகமது ‘எழுவோம் கல்வியும் வேலையும் உறுதி செய்திட’ என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினர். தொடர்ந்து சனியன்று நடைபெறும் மாநாட்டில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதனைத் தொடர்ந்து, ஓமலூர் ஆர் சி செட்டிப்பட்டி பைபாஸ் மேம்பாலம் முன்பிலிருந்து குடும்பத்தினருடன் பங்கேற்கும் பேரணி மற்றும் ஓமலூர் பேருந்து நிலையத்தில் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
