tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்  சார்பில் பயனடைந்தோர் தமிழக முதல்வருக்கு நன்றி

திருச்சிராப்பள்ளி, டிச.12-  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், பயனடைந்த பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பயனடைந்த மாற்றுத்திறனாளி  நவீன்குமார் என்பவர் தெரிவிக்கையில், “நான் வரகனேரியில் வசித்து வருகிறேன். எனக்கு அருகில் உள்ளவர்கள் இத்திட்டத்தை பற்றி சொன்னார்கள். நான் சுயமாக செயல்பட உதவியாக உள்ளது. நான் இந்த வாகனத்தின் மூலம் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க பெரும் உதவியாக உள்ளது. இதனை வழ்கிய முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார். அசுவதி என்ற மாற்றுத்திறனாளி, “நான் பொன்மலையில் வசித்து வருகிறேன். எனக்கு இந்த நகரும் நாற்காலி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதன் மூலம் தேவையான இடங்களுக்குச் செல்லவும், படிக்கவும், உணவு உண்ணவும் பயனுள்ளதாக உள்ளது. இதுபோன்ற அருமையான நகரும் நாற்காலியை வழங்கிய முதல்வருக்கு, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

டிச.18 தேனியில்  வணிகர் சங்க பேரமைப்பு பொதுக்குழு

தஞ்சாவூர், டிச.12-  தேனியில் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு, வருகிற சட்டப்பேரவைத் தேர்தலை அணுகும் விதமாக, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தும் மாநாடாக இருக்கும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.  தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இப்பேரவையின் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “தேனியில் டிச.18 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலப் பொதுக்குழு, எங்களுடைய நிறைவேற்றப்படாத பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் மாநாடாகத் திகழப்போகிறது. இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசியல் கட்சிகளைத் தேர்வு செய்து, வருகிற சட்டப்பேரவைத் தேர்தலை அணுகவுள்ளோம். கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகள், ஆன்லைன் வர்த்தகம், கார்ப்பரேட் நிறுவனங்களின் அத்துமீறலால் வியாபாரிகள் நசுக்கப்படுவது போன்றவற்றிலிருந்து வணிகர்களைப் பாதுகாக்க ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து சிறப்பு பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள் நிறைய உள்ளன. அதே நேரத்தில் கோரிக்கைகள் நிலுவையிலும் இருக்கின்றன. நகராட்சி கடைகளைப் பெயர் மாற்றுவதற்கான அனுமதி, ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் அபராதக் கட்டணம் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கைகளையும் வலியுறுத்துகிறோம். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசியல் கட்சிகள் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால், அதன் பிறகு பேரமைப்பின் ஆட்சிமன்றக் குழு கூடி முடிவு செய்து அறிவிப்போம். ஆன்லைன் வர்த்தகத்தால் 35 சதவீத வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் நிறைய கடைகள் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன. நிறைய இடங்களில் வாடகை கொடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால், வியாபாரிகள்தான் பாதிக்கப்படுகின்றனர்’’ என்றார்.

வாக்காளர் பட்டியலில்  பெயர் சேர்த்தல், திருத்தம் சிறப்பு முகாம் 

திருச்சிராப்பள்ளி, டிச.12-  திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 4.11.2025 அன்று முதல் சிறப்பு தீவிரத்திருத்த பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட, 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் டிச.13 (சனிக்கிழமை) மற்றும் டிச.14 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கெடுப்பு பணியானது டிச.14 வரை நீடிக்கப்பட்டுள்ளதால், டிச.13.12.2025 (சனிக்கிழமை) மற்றும் டிச.14 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தலுக்கான சிறப்பு முகாமானது டிச.20 (சனிக்கிழமை) மற்றும் டிச.21 (ஞாயிற்றுக்கிழமை) தேதிகளில் நடைபெறும்.  பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

பாரதியார் 144 ஆவது பிறந்த நாள்:  பேராவூரணியில் சிலை திறப்பு

தஞ்சாவூர், டிச.12-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், மகாகவி பாரதியாரின் 144 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, குமரப்பா பள்ளி வளாகத்தில் பாரதியார் உருவச் சிலை திறப்பு விழா நடைபெற்றது.  பாரதி கலை இலக்கியப் பேரவை சார்பில் நடைபெற்ற, பாரதி சிலை திறப்பு விழாவிற்கு, அதன் தலைவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கே.வி. கிருஷ்ணன் தலைமை வகித்தார். குமரப்பா பள்ளி அறங்காவலர்கள் ராமு, ஆனந்தன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சுரேஷ் வரவேற்றார். குமரப்பா பள்ளி நிர்வாக இயக்குநர் எம். நாகூர்பிச்சை பாரதியார் சிலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பாரதி கலை இலக்கியப் பேரவைச் செயலாளர் நடராஜன், பொருளாளர் சேகர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.  புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாரதி அன்பர்கள் கலை இலக்கிய மன்றம் சார்பில் புலவர் போசு, பாரதி வை.நடராஜன், தனிப்பயிற்சி கல்லூரி முதல்வர் கெளதமன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  செருவாவிடுதி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் சக்திமாலா தலைமையில் நடைபெற்ற விழாவில், கவிஞர் ஜெயகாந்தன், வழக்குரைஞர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.

டிச.17-26 ஆட்சிமொழிச் சட்ட வார விழா

திருச்சிராப்பள்ளி, டிச.12-  தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளை நினைவுகூரும் வகையில், நிகழாண்டில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட வேண்டும், என அரசு ஆணையிட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் டிச.17 முதல் டிச.26 கொண்டாடப்படவுள்ளது.   ஆட்சிமொழிச் சட்ட வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணி முதல் நடைபெறும். ஆட்சிமொழிச் சட்ட வார விழா தொடர்பான நிகழ்வின் ஒருபகுதியாக ஆட்சிமொழிச் சட்டம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் 17.12.2025, 18.12.2025 மற்றும் 19.12.2025 ஆகிய நாட்களுக்கு கணினித்தமிழ் மற்றும் ஒருங்குறி பயன்பாடு, ஆட்சிமொழிச்சட்ட அரசாணை, மொழிப்பயிற்சி, கலைச் சொல்லாக்கம், வரைவுகள், குறிப்புகள் எழுதுதல், முதலிய தலைப்புகளில் திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகக் கூட்ட அரங்கில் அரசுப் பணியாளர்களுக்கு பயிற்சி, டிச.22 ஆம் தேதி தமிழ் வளர்ச்சித் துறை, தொழிலாளர் நலத்துறையினருடன் வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் இணைந்து வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை அமைத்திட வலியுறுத்தி வணிகர்சங்கம் அலுவலகக்  கூட்டரங்கில்  கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.  டிச.23 ஆம் தேதி திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாணவர்கள் பங்கு பெறும் பட்டிமன்றம், டிச.24 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் அரசுப் பணியாளர்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், பள்ளி – கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணியை, மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். டிச.26 ஆம் தேதி, தமிழ் அமைப்புகள், நிர்வாகிகளுடன் இணைந்து மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டமும் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.