tamilnadu

img

போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 11 மாடுகள் பறிமுதல்

போக்குவரத்துக்கு இடையூறாக  சுற்றித்திரிந்த 11 மாடுகள் பறிமுதல் 

தஞ்சாவூர், டிச.12- தஞ்சையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 11 மாடுகளுக்கு அபராதம் விதித்து மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தஞ்சை மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் மாடுகள், குதிரை உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித்தரிவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் கண்ணன் ஆலோசனையின் பேரில் மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் மேற்பார்வையில் மாடுகள் பிடிக்கும் பணி நடைபெற்றது. மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்கள் தஞ்சை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ராசா மிராசுார் மருத்துவமனை சாலை, சீனிவாசபுரம், எம்.கே.மூப்பனார் சாலை, பெரியகோவில் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதில் மொத்தம் 11 மாடுகள் பிடிக்கப்பட்டன. மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.  இந்த மாடுகள் 2 ஆவது, 3 ஆவது முறை பிடிபட்டால் அபராதமாக ரூ.5 ஆயிரம் அல்லது ரூ.10 ஆயிரம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.