பணிகள் நிறைவடைவதற்கு முன்பே திருவாரூர்-மயிலாடுதுறை சாலை திறப்பு அதிகாரிகளின் அலட்சிய நடவடிக்கையால் அல்லல்படும் பொதுமக்கள்
திருவாரூர், நவ.9- திருவாரூர் - மயிலாடுதுறை நெடுஞ்சாலை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக புதிதாக போடப்படாமல் ஆங்காங்கே சிறு சிறு சீரமைப்பு என்ற பெயரில் பேட்ச் ஒர்க் மட்டுமே நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த சாலையை புதிதாக அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தநிலையில், சென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்டத்தின்கீழ், கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.110 கோடியில் திருவாரூர்-மயிலாடுதுறை சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணியானது இரண்டு ஆண்டுகளில் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு ஆண்டு தாமதமாக 2025 நவம்பர் ஒன்றாம் தேதி தமிழக முதல்வர் காணொலி மூலமாக தரம் உயர்த்தப்பட்ட திருவாரூர்- மயிலாடுதுறை சாலையை திறந்து வைத்தார். ஆனால் திருவாரூர் - மயிலாடுதுறை இடையான சாலையில் பெரும்பாலான பகுதிகளில் சாலை பணிகள் முழுமையடையாமலேயே இந்த திட்டம் தொடங்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக பேரளம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, ரயில்வே நிர்வாகம் சார்பில், பேரளம் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே பாலம் அமைக்கப்பட்டு, அந்த பாலம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொங்கிக்கொண்டு வரும் நிலையில், அந்த பாலப் பணியை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இச்சூழலில் தற்போது திருவாரூர் மயிலாடுதுறை இருவழிச் சாலை திட்டத்தையும் நிறைவேற்றாமல் இருப்பது இப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதேபோல கங்களாஞ்சேரி பகுதியில் வெட்டாற்றின் குறுக்கே 60 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டு தற்போது வரை தரமாக இருக்கும் பாலத்துக்கு அருகே, புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியும் நிறைவடையாத நிலையில் இந்த சாலைப் பணியை முதல்வர் திறந்து வைத்துள்ளார். புதிதாக திறக்கப்பட்ட சாலையின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் பெயர்ந்து காணப்படுகிறது. புதிதாக போடப்பட்ட திருவாரூர்-மயிலாடுதுறை புதிய நெடுஞ்சாலையில் இவ்வளவு குறைகள் இருக்கும் போது எவ்வாறு தமிழக முதல்வர் இந்த சாலையைத் திறந்து வைத்தார் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். சாலை திறக்கப்பட்டு விட்டதால், இந்தப் பணிகள் அனைத்தும் அப்படியே கிடப்பில் போடப்படும் எனவும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். உடனடியாக அரசு தலையிட்டு சாலை பணியை தரமாக விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரளம் ஒன்றியச் செயலாளர் தியாகு ரஜினிகாந்த், ஒன்றியக் குழு உறுப்பினர் வசந்த ராஜன் கூறுகையில், “மயிலாடுதுறையிலிருந்து, திருவாரூர் வரும் சாலையின் பல இடங்களில் பணிகள் முடிவடையாமல் உள்ளது. குறிப்பாக, பேரளத்தில் மேம்பால பணி இன்னும் முடிவடையாமல் உள்ளது. சாலையில் இணைக்கப்படாமலும் உள்ளது. பணிக்காக கொட்டப்பட்ட ஜல்லிக் கற்கள் இன்னும் அப்படியே கிடக்கின்றன. மயிலாடுதுறையிலிருந்து, திருவாரூர் வரை தொடர்ந்து பல இடங்களில் பாலப் பணிகளும், மற்ற வேலைகளும் முடிவடையாமல் இருக்கும் சமயத்தில் முதல்வர் திறந்து வைத்த நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பணிகள் நிறைவடையாத நிலையில் சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள வேலைகள் விரைவாக நடப்பதில் சிரமம் உள்ளது’’ என்றார்.
