கைது, வீட்டுக் காவல் மூலம் போராட்டங்களை தடுப்பது ஜனநாயக விரோதம்!
தமிழக காவல்துறை நடவடிக்கைகளுக்கு சட்டமன்றத்தில் சிபிஎம் கண்டனம்
சென்னை, ஏப். 28 - தமிழ்நாடு காவல்துறை, முன்கூட்டிய கைது, வீட்டுக் காவல் மூலம் மக்களின் போராட்டங்களைத் தடுப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் வி.பி. நாகை மாலி சட்டமன்றத்தில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் திங்களன்று (28.04.2025) நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கையின் விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் வி.பி. நாகை மாலி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: வீட்டுக்காவல் - முன்கூட்டியே கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக வடிவங் களில் நடத்துகின்ற போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுக்கும் போக்கு உள்ளது. போராட்டத்தில் பங்கேற்கும் தொழிலாளர்கள், சங்க நிர்வாகிகளை வீடுகளுக்குச் சென்று இரவோடு இரவாக கைது செய்வது, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் தடுத்து நிறுத்தி கைது செய்வது திருமண மண்டபங்களில் அடைத்து வைப்பது, குறிப்பாக பெண் தொழிலாளர்களை இத்தகைய அணுகுமுறையுடன் கையாளுவது ஜனநாயகத்தின் நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். குறிப்பாக சென்னையில் 22.04.2025 அன்று மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை யை உயர்த்தி வழங்கக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாற்றுத் திறனாளிகள் என்று கூட பாராமல் அவர் களை சென்னைக்கு வர விடாமல் ரயில், பஸ் நிலை யங்களில் காவல்துறை யினர் கைது செய்துள்ள தானது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. இதுபோன்று தலைநகரில் ஜனநாயக ரீதியில் போராட்டம் என்று அறிவித்தால் சென்னை எல்லைக்குள்ளேயே வரவிடாமல், ஆங்காங்கே தடுத்து நிறுத்தி கைது செய்து அடைத்து வைக்கும் போக்கு கைவிடப்பட வேண்டும். முதலமைச்சர் தலையிட்டு காவல்துறையின் அணுகுமுறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டுகிறேன். விவசாயிகள் போராட்டங்களின் போது சிபிஎம் தலைவர்கள் மீது அடக்குமுறை! கடலூர் மாவட்டம், மலையடிக்குப்பத்தில் தலைமுறை தலைமுறையாக முந்திரி விவசாயம் செய்து வந்த நிலங்களை ஜேசிபி இயந்திரங்களை கொண்டு அழித்த போது நிர்க்கதியாக நின்ற விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட எங்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்தி ரன் உள்ளிட்ட தலைவர்களை காவல்துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள் என்று கூட பாராமல், அத்துமீறி பிடித்து இழுத்து கைது செய்து வண்டியில் ஏற்றியது, காவல்துறையின் அத்துமீறிய செயல் என்று பார்க்கிறேன். காவல்துறையின் இதுபோன்ற அடாவடி செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு நிலத்தை கையகப்படுத்திய விவசாயிகளுக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்படவில்லை என போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாக, அவர்களோடு நின்ற அரூர் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பி. டில்லிபாபுவை, திரு வள்ளூர் நகர காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டா லின் என்பவர், சட்டையைப் பிடித்து இழுத்தும், ஒருமையில் பேசியும், கைது செய்து கிரிமினல் குற்ற வாளியை கையாளுவது போல் கையாண்டு வண்டிக்குள் தள்ளியுள்ளார். மக்கள் பிரச்சனை களுக்காக போராடும் தலைவர்களை கைது செய்கிற போது கண்ணியமாகவும், சுயமரியாதை பாதிக்காத
வகையிலும் காவல்துறை நடந்து கொள்வதை நமது முதலமைச்சர் உத்தரவாதப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். காவல்துறைக்கு உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன். சிபிஎம் நகரச் செயலாளரை ரவுடிப் பட்டியலில் சேர்த்த காவல்துறை! தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மக்கள் நலப் போராடடங்களில் ஈடுபட்ட எங்கள் கட்சியின் சங்கரன் கோவில் நகரச் செயலாளர் அசோக் மீது சங்கரன் கோவில் தாலுகா காவல் ஆய்வாளர் மனித உரிமையை மீறும் வகையில் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனை எதிர்த்து மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டு, காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கிடவும் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத காவல் ஆய்வாளர், அதிகார துஷ்பிரயோகத்துடன், மக்கள் பணி செய்து வரும் அசோக் மீது ஏராளமான வழக்குகளை புனைந்து, உள்நோக்கத்துடன், ரவுடி பட்டியலில் இணைத்துள்ளார். சட்டவிரோதமாக செய்யப்பட்டுள்ள இந்த சம்பவத்தில், அசோக்கை ரவுடி பட்டியலிலிருந்து நீக்க வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உள்துறைச் செயலாளர், டிஜிபி என மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. கடந்த ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையின் போது நான் உரையாற்றுகையில் இதனை வலியுறுத்தியுள்ளேன். ஆனால், இதுவரை அவர் பெயர் ரவுடி பட்டியலிலிருந்து நீக்கப்படவில்லை. எனவே, முதலமைச்சர் தலையிட்டு அசோக்கை ரவுடி பட்டியலில் இருந்து நீக்கவும், மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்தவும் கேட்டுக் கொள்கிறேன். போராட்டங்கள் நடத்துவதற்கான இடங்களை குறைப்பது சரியல்ல! ‘சாம்சங்’ தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது புனையப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டுமென முதல்வர் அவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் தங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வரக் கூடிய முறையில் அரசியல் கட்சிகள், ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்தும் போது போராட்டம் நடத்தக் கூடிய இடங்கள் நாளுக்கு நாள் குறைக்கப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை போன்ற மாநகரங்களில் இடங்களை அதிகப்படுத்தவும், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு பெரிய இடத்தை தேர்வு தருவதற்குமான ஜனநாயக உரிமைகளை தங்கள் ஆட்சியில் விரிவுபடுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வி.பி. நாகை மாலி வலியுறுத்தி னார்.