tamilnadu

img

பிரகாஷ்காரத், பிருந்தா காரத், து.ராஜாவிற்கு விமான நிலையத்தில் வரவேற்பு

பிரகாஷ்காரத், பிருந்தா காரத், து.ராஜாவிற்கு விமான நிலையத்தில் வரவேற்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்திய 24-ஆவது மாநாடு மதுரையில் தோழர் சீத்தா ராம் யெச்சூரி நகரில் (தமுக்கம் மைதானம்) புதனன்று (ஏப்ரல் 2) காலை துவங்குகிறது. மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகள் மதுரை வந்தடைந்தனர். கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலை  விமானம் மூலம் மதுரை வந்தனர். பொது மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிபிஐ தேசியச் செயலாளர் து. ராஜாவும், விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

தலைவர்கள் அனைவரையும் மாநாட்டு வரவேற்புக்குழுத் தலை வரும் மத்தியக்குழு உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன்,  துணைமேயர் தி. நாகராஜன், சிபிஐ மாநிலக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் பா. காளிதாஸ், மாவட்டச் செயலாளர் எம்.எஸ். முருகன் உட்பட ஏராளமானோர் திரண்டு வரவேற்றனர். இடதுசாரி ஒற்றுமை ஓங்கட்டும் விமான நிலைய வாயிலில் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிகளுடன் தலைவர்களை வரவேற்ற தோழர்கள் ‘இடதுசாரி ஒற்றுமை ஓங்கட்டும்’ என முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து பிரகாஷ்காரத், து. ராஜா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய  து. ராஜா, “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு, இன்றையச் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தது. மாநாட்டை வாழ்த்திப் பேசுவதற்காக மதுரை வந்துள்ளேன்.

சிபிஐ தேசிய மாநாடு செப்டம்பர் மாதம் சண்டிகரில் நடைபெறுகிறது. இடதுசாரிக் கட்சிகள் ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகின்றன. எதிர்காலங்களிலும் ஒற்றுமையாகச் செயல்படுவோம்” என்றார். ஆர்எஸ்எஸ் அரசியல் பிரிவு பாஜக பிரதமர் மோடி நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த து. ராஜா, “ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவு பாஜகதான்; மோடி அங்கு சென்றதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை” என்றார்.