பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி!
முதலமைச்சர் சாடல் சென்னை, ஏப்.28 - பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்றும், அவமான ஆட்சிக்கு அதிமுகவே சாட்சி என்றும் எடப்பாடியை முதலமைச்சர் கடுமையாக சாடினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்க ளன்று (ஏப்.28) காவல்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதியாக இருந்தது. அதிமுக ஆட்சியில் பெண்கள் வாழும் மாநிலமாக தமிழகம் இருந்தது. தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. போதைப் பொருள் நடமாட்டம், பெண் களுக்கு எதிரான குற்றங்கள், கொலை, கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது” என்றார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர், “திமுக ஆட்சியில் எந்த வழக்காக இருந்தா லும் விரைந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிறப்பான ஆட்சியை எதிர்க்கட்சி தலைவர் குறை சொல் வது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை” என்று கிண்டல் செய்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “கடந்த 4 ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்துள்ளன. காவல் நிலைய மரணங்கள் இல்லை. அதிமுக ஆட்சியின் அவலங்களை மக்கள் கண்ணீருடன் புலம்புகிறார்கள். திமுக ஆட்சி யில் 3,640 ரவுடிகள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். அரசாங்கம், சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் தான் நடவடிக்கை எடுக்க முடியும்” என்றும் கூறினார். சென்னையில் குறுகிய காலத்தில் 2.5 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதிமுக ஆட்சியில் கண்காணிப்பு கேமராக் கள் மட்டுமே வைத்தார்கள். திமுக ஆட்சியில் கண்காணிப்பு கேமராக்களை பராமரித்து சரி யாக செயல்பாட்டில் வைத்துள்ளோம். கொலை வழக்கில் 95.2 சதவீதம், கொள்ளை வழக்கில் 98.4 சதவீதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 15,899 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி; அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி. சாமானிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு சாத்தான்குளமே சாட்சி; துயரமான ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி; ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ள தமிழகத்தின் உரிமை களை அடகு வைத்த ஆட்சி அதிமுக. சட்டம்- ஒழுங்கை பற்றி பேச அதிமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது என்றும் கடுமையாக சாடினார்.