tamilnadu

img

அனைவருக்கும் ஓய்வூதியம் மதுரையில் இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க கருத்தரங்கம் முழக்கம்!

அனைவருக்கும் ஓய்வூதியம் மதுரையில் இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க கருத்தரங்கம் முழக்கம்! 

மதுரை, ஜன. 25 -  60 வயது கடந்த அனைத்து மூத்த குடிமக்களுக்கும் பாரபட்சமின்றி குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும், அதனை உறுதிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ‘ஒட்டுமொத்த ஓய்வூதியத் திட்டத்தை’ உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் மதுரையில் நடைபெற்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க கருத்தரங்கம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.  ஓய்வூதியம் என்பது உழைப்பின் உரிமை கருத்தரங்கிற்குத் தலைமை வகித்து உரையாற்றிய சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஆர். புண்ணியமூர்த்தி, ஓய்வூதியம் என்பது அரசாங்கத்திற்குச் சுமையல்ல, அது உழைக்கும் மக்களின் உரிமை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார். அவர் பேசுகையில், “ஓய்வூதிய விவகாரங்களை அரசு தன் கட்டுப்பாட்டில் எடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட மாற்றங்கள் மூத்த குடிமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குகின்றன. இன்சூரன்ஸ் துறையில் ஊதிய மாற்றத்திற்கு இணையாக ஓய்வூதியமும் புதுப்பிக்கப்பட வேண்டும். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எல்.ஐ.சி மற்றும் பொது இன்சூரன்ஸ் (GIC) ஊழியர்களுக்கு 30 சதவீத குடும்ப ஓய்வூதிய உயர்வு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளித்தாலும், ஓய்வூதியப் பாதுகாப்பை உறுதி செய்ய நாம் தொடர்ந்து களத்தில் நிற்க வேண்டும்” என்றார்.  இது 7கோடி முதியவர்களுக்கான போராட்டம்   அகில இந்திய துணைத் தலைவர் ஜெ. குருமூர்த்தி பேசுகையில், இந்த இயக்கம் வெறும் இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கானது மட்டுமல்ல என்பதைச் சுட்டிக்காட்டினார். “இந்தியாவில் நிரந்தர வருமானம் இன்றித் தவிக்கும் சுமார் 7 கோடி மூத்த குடிமக்களுக்காகவே நாம் குரல் கொடுக்கிறோம். ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு ஊழியர்களுக்குக் கிடைத்துள்ள ஓய்வூதியப் பலன்கள் இன்சூரன்ஸ் துறையினருக்கும் முழுமையாகக் கிடைக்க வேண்டும். ஓய்வூதியம் என்பது பணியாளர்களின் மன உறுதியை உயர்த்துவதோடு, சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. தமிழகத்தில் இது ‘உரிமைத்தொகை’ என்ற புரிதல் இருப்பதைப் போல நாடு முழுவதும் மாற வேண்டும்” என வலியுறுத்தினார்.  ஜிடிபியில் 1% ஒதுக்கினால் சாத்தியமே அகில இந்திய பொதுச்செயலாளர் எம். குன்னிகிருஷ்ணன் புள்ளிவிவரங்களுடன் கூடிய உரையை நிகழ்த்தினார். “மத்திய அரசு தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் வழங்கும் ரூ.200 ஓய்வூதியம் ஒரு முதியவரின் ஒரு நாள் உணவுக்குக்கூடப் போதாது. 2030-க்குள் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 18 சதவீதமாக உயரும் சூழலில், அவர்களில் பெரும்பாலோர் குடும்பத்தையே நம்பியுள்ளனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஒரு சதவீதத்தை ஒதுக்கினாலே, வருமானம் இல்லாத அனைத்து முதியவர்களுக்கும் மாதம் ரூ.3,000 வழங்க முடியும். கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை அளிக்கும் அரசு, வாரிசு வரி மற்றும் சொத்து வரி மூலம் நிதியைத் திரட்டி முதியோருக்கு வழங்க முன்வர வேண்டும்” என்றார்.  ரயில்வே சலுகைகளை மீட்டெடுப்போம் நிறைவுரையாற்றிய தென்மண்டல முன்னாள் பொதுச்செயலாளர் க. சுவாமிநாதன், மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தார். “கோவிட் காலத்தைக் காரணம் காட்டி ரத்து செய்யப்பட்ட ரயில்வே கட்டணச் சலுகைகளை இன்னும் வழங்காதது மூத்த குடிமக்களுக்குச் செய்யப்படும் துரோகம். புதிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வரும் தேர்தல்களில் அரசியல் கட்சிகள் சமூக ஓய்வூதிய உயர்வை வாக்குறுதியாக அளிக்க வேண்டும். இல்லையெனில், அனைத்துத் துறை ஓய்வூதியதாரர்களையும் திரட்டிப் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்” என எச்சரித்தார்.  தீர்மானங்கள்  இக்கருத்தரங்கில் சிஐடியு மாநிலச் செயலாளர் இரா. லெனின் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: • காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டைத் திரும்பப் பெற வேண்டும். • நுகர்வோர் விலை குறியீட்டிற்கு ஏற்ப, குறைந்தபட்ச ஊதியத்தின் பாதித் தொகையை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். • பிப்ரவரி 12-ல் நடைபெறும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு முழு ஆதரவு அளிப்பது. • 2025 நிதி மசோதாவில் உள்ள ஊழியர் விரோதச் சரத்துகளை (Validation Clause) ரத்து செய்ய வேண்டும்.     தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திரளான இன்சூரன்ஸ் ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர். (ந.நி)