பாலஸ்தீனம்,
பறிகொடுப்போரின் மூல ஸ்தானம்
ஒப்பாரிகளின் ஓல ஸ்தானம் .
கொத்துகிறது
யுத்தக் கழுகின் கூரலகு.
குலைகிறது
சமாதானப் புறாவின் பேரழகு.
விடியலை மறைக்கும்
ஏவுகணைப் புகைமேகங்கள்
விமானத்தை அன்று
வேடிக்கை பார்த்த குழந்தை
கண்டாலே இன்று
பதுங்கு குழிக்குள் பயந்தோடும்..
போர் என்ன செய்யும்?
குடியுரிமை பெற்றவரை
அரைநொடியில் அகதி ஆக்கும்.
சொந்த நிலம் காப்போர்
பயங்கரவாதிகளாம்...
ஆக்ரமிப்பாளர்
அவதார நாயகராம்...
அணுகுண்டு ஓசை அடங்குமா?
அமைதிப் பாடல் தொடங்குமா?
ஐ.நா. காவல் நிலையம்
கடைசித் தகவல் அறிக்கைதான்
வழங்குமா?