tamilnadu

img

திருப்பத்தூரில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு பெ.சண்முகம் நேரில் ஆறுதல்

திருப்பத்தூரில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு பெ.சண்முகம் நேரில் ஆறுதல்

சிவகங்கை, டிச.1- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கும்பங்குடி அருகே ஞாயிறன்று அரசு பேருந்துகள் நேருக்கு நேராக மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்தனர். இதில் 4 பேர் அடையாளம் தெரியாமல் உள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறவர்களை மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். திருப்பத்தூரைச் சேர்ந்த வைரமணி, திண்டுக்கல்லைச் சேர்ந்த வேல்முருகன், பொன்னமராவதியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் ஆகியோரிடம் நேரில் நலம் விசாரித்தார். அப்போது, பலத்த காயமடைந்து சிகிச்சையில் இருக்கக் கூடிய இஸ்லாமிய பெண்மணி கூறுகையில், “எனது பை காணாமல் போய்விட்டது. அதில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளது. பணம் ரூ.4000 காணாமல் போய்விட்டது. இவை உடனடியாக கிடைக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார். இதில் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜுனன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வீரபாண்டி, எஸ்.முத்துராமலிங்க பூபதி, ஜே.சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.